செய்திகள்

18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகள்: வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சென்னை மாநகராட்சி சிறப்பு முகாம்கள்

சென்னை, ஜன.20–

சென்னை மாவட்டத்தில் 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன என தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தின் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் 1.1.2021ம் தேதியினை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2021–ம் ஆண்டின் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மூலம் நாளை (21–ந் தேதி) முதல் 31–ந் தேதி வரை 18 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளிகளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்ய சிறப்பு முகாம்கள் அந்தந்த கல்வி நிலையங்களிலும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான நிறுவனங்களிலும் நடத்தப்படவுள்ளது.

இவர்களுக்கு பிரத்யேகமாக 94999 33619 என்ற GCC-Accessible Elections வாட்ஸ்ஆப் எண் நிறுவப்பட்டுள்ளது. இந்த எண் மூலம் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் பயன்பெற்று தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மேலும், 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தங்களின் விவரம் வாக்காளர் பட்டியலில் பதியப்பெற்றுள்ளனவா என்றும், திருத்தங்கள் ஏதேனும் மேற்கொள்ளப்பட வேண்டுமா என்பது போன்ற தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய திட்டங்களை பயன்படுத்தி தங்களது வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்து கொள்ளவும் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளவும் மாவட்ட தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *