செய்திகள்

மாமல்லபுரத்தில் விபத்துகளை தடுக்க 14 இடங்களில் வேகத்தடை: நெடுஞ்சாலை துறை நடவடிக்கை

Spread the love

காஞ்சீபுரம்,பிப். 27-–

மாமல்லபுரத்தில் சுற்றுலா வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் நகர பகுதியில் 14 இடங்களில் வேகத்தடை அமைத்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சர்வதேச சுற்றுலா மையமான மாமல்லபுரத்திற்கு சீன அதிபர் மற்றும் பிரதமர் நரேந்திரமோடி வருகைக்கு பிறகு நாள்தோறும் வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் அதிகமானோர் வருகை தருகின்றனர்.

குறிப்பாக அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் அதிகமான சுற்றுலா வாகனங்கள் மாமல்லபுரம் வருகின்றன. இதில் நகரப் பகுதியில் உள்ள முக்கிய இடங்களான பஜனை கோயில் சந்திப்பு, கங்கை கொண்டான் மண்டபம், கலங்கரை விளக்கம், இ.சி.ஆர்.சாலை மாமல்லன் சிலை சந்திப்பு, கடற்கரை கோயில் சாலை, ஐந்துரதம், மாதா கோயில் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய சாலை வழியாக சுற்றுலா வாகனங்கள் அதிவேகத்தில் வரும்போது விபத்துகள் ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர்.

அதேபோல் மோட்டார் சைக்கிளில் வரும் காதல் ஜோடிகளும் அதிவேகத்தில் வந்து விபத்துகளில் சிக்குகின்றனர். குறிப்பாக பஜனை கோயில் சந்திப்பு வழியாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளும் சில நேரங்களில் வாகன விபத்தில் சிக்கி காயமடைகின்றனர்.

சுற்றுலா வாகனங்களும், அரசு பேருந்துகளும் வேக கட்டுப்பாடு இல்லாமல் அதிவேகத்தில் வருவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. இதனால் வாகனங்களின் வேகத்தை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மாமல்லபுரத்தில் உள்ள முக்கிய சாலைகளில் 14 இடங்களில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் வேகத்தடை அமைக்க முடிவு செய்தது.

அதையொட்டி பஜனை கோயில் சந்திப்பு, கங்கை கொண்டான் மண்டபம் உள்ளிட்ட 14 முக்கிய இடங்களில் உள்ள சாலைகளில் தார், ஜல்லி கலந்து வேகத்தடை அமைத்து நடவடிக்கை மேற்கொண்டது. இதனால் இனி சுற்றுலா வாகனங்கள், அரசு பேருந்துகள் மக்கள் நடமாட்டம் உள்ள 14 இடங்களில் அமைக்கப்பட்ட வேகத்தடை பகுதியை கடந்து செல்லும்போது மெதுவாக செல்ல வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை சார்பிலும், பேரூராட்சி சார்பிலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *