செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த சிங்கப்பூர் : 68 வது இடத்தில் இந்தியா

Spread the love

ஜெனீவா, அக். 09–

சர்வதேச நாடுகளில் போட்டித்தன்மை அதிகம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 10 இடங்கள் பின்தங்கி 68 வது இடத்துக்குச் சறுக்கியுள்ளது.

ஆண்டுதோறும் ஜெனிவாவில் உள்ள உலகப் பொருளாதாரா நிறுவனம், பொருளாதாரத்தில் சிறப்பாக போட்டியிடும் நாடுகளின் பட்டியலை வெளியிடுகிறது. சென்ற ஆண்டில் இந்தப் பட்டியலில் 58 வது இடத்தைப் பிடித்திருந்த இந்தியா இந்த ஆண்டு 68 வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மற்ற நாடுகளின் முன்னேற்றமே இந்தியாவின் பின்னடைவுக்குக் காரணம் எனக் கருதப்படுகிறது. இந்தப் பட்டியலில், சென்ற ஆண்டு முதல் இடத்தில் இருந்த அமெரிக்காவை விரட்டிவிட்டு, சிங்கப்பூர் இந்த ஆண்டுக்கான முதல் இடத்தைப் அடைந்துள்ளது.

இலங்கை (84 வது இடம்), வங்கதேசம் (105 வது இடம்), நேபாளம் (108 வது இடம்), பாகிஸ்தான் (110 வது இடம்) ஆகிய நாடுகள் அண்டை நாடுகள் இந்தியாவுக்குக் கீழ் நிலையில் உள்ளன.

பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த நாடுகளில் மிகவும் மோசமான பொருளாதாரப் போட்டித்தன்மை கொண்ட நாடாகவும் இந்தியா உள்ளது. மற்றொரு பிரிக்ஸ் நாடான பிரேசில், 71வது இடத்தில் இருக்கிறது.

சந்தை அளவில் 3 வது இடம்

சந்தை அளவு மற்றும் நுண் பொருளாதார நிலைத்தன்மையில், இந்தியா உயர்விடத்தை வகிக்கிறது. பெருநிறுவன நிர்வகிப்பின் அடிப்படையில், இந்தியா 15வது இடத்தில் உள்ளது. சந்தை அளவின் அடிப்படையில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டுப்பாட்டின் அடிப்படையிலும் மூன்றாவது இடத்தில் உள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் அடிப்படையில் இந்தியா பல நாடுகளை விடவும் அதிகம் வளர்ந்துள்ளது. இருப்பினும் போட்டித்தன்மையைத் தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களான, தகவல் தொழில்நுட்பப் பரவல், சுகாதாரக் குறைபாடு மற்றும் மக்களின் குறைந்தபட்ச ஆரோக்கிய ஆயுட்காலம் ஆகியவற்றில் பின்தங்குகிறது. குறைந்தபட்ச ஆரோக்கிய ஆயுட்காலத்தின் அடிப்படையில் இந்தியா 141வது இடத்தில் கிடக்கிறது. ஆண் பெண் ஊழியர்கள் விகிதத்தில் இந்தியா 128வது இடத்திலும் திறமைக்கு ஊக்கம் அளிப்பதில் 107வது இடத்திலும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *