சிறுகதை

படர்தாமரை பரவ வேண்டாம் : செருவை நாகராசன்

Spread the love

அந்த மருத்துவமனை முன்பாக எனது வண்டியைச் சாலையோரம் நிறுத்தினேன்.

அப்போது இரவு 8 மணி இருக்கும்.

உள்ளே நுழைந்தேன். ஓரளவு கூட்டம் இருந்தது. பத்து பேர் சேர்களில் இருந்தனர். கவுண்டரில் ரூ.200 செலுத்தி என் பெயரில் டோக்கன் பெற்றுக் கொண்டு நானும் ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து காத்திருக்கலானேன்.

என் இடுப்பின் பின் பகுதியில் அந்த படர்தாமரை அரிப்பு சில நாட்களாக அதிகமாகி அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவ ஆரம்பித்து. மிக்க எரிச்சலையும் நிம்மதியின்மையையும் தர ஆரம்பித்தது. அதை அடியோடு ஒழித்தால்தான், இல்லாமல் விரட்டினால்தான் மனமகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் என்ற தீர்மானத்தோடுதான் இங்கே வந்திருந்தேன்.

காலையில் நடைப்பயிற்சியில் நாராயணனை சந்தித்தபோது அவர் சொன்னார். “எனக்கும் இடுப்பு பின்பகுதியில் இதே அரிப்பு பிரச்சனைதான். ஸ்டீராய்டு களிம்பு போட்டா சரியாகிவிடும்னு மருந்து கடையிலே சொன்னங்க. ரெண்டு நாளா தடவிக்கிட்டு வர்றேன்” என்றார்.

அவருக்கு நல்லது கெட்டது சிந்திக்கத் தெரியாது.

சுயமாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்வது எனக்குப் பிடிக்காது

” அது சரியில்லைங்க நாராயணன். நீங்க எப்பயுமே தாறுமாறாத்தான் சிந்திக்கிறீங்க. முடிவு பண்றீங்க. ஒரு டாக்டர்கிட்ட ஆலோசனை பெற்றால்த்தான் அது நிரந்தரமான தீர்வாக அமையும்” என்றும் எச்சரித்தேன்.

‘‘எனக்கு இது சரியாகிவிடும். ஐநூறு ரூபா மிச்சம். வீண் அலைச்சல் மிச்சம். எல்லா நோயும் சில நாள் கடந்தா சரியாகிவிடும்” என்று விரைவான நடையுடன் அகன்றார் நாராயணன்.

அவர் எப்பொழுதும் அறிவோடு எதையும் அணுகத் தெரியாது. விட்டால் வாய்கிழியப் பேசுவார். ஆனால் கருத்தேதும் இருக்காது. அது நமக்குப் புரியாது.

மருத்துவரைப் பார்க்கும் என் முறை வந்தது.

ஐம்பது வயது தோற்றம் காட்டிய அப்பெண் மருத்துவர் முன் அமர்ந்தேன்.

என்ன செய்யுது என்று கேட்டார்.

நானும் சில வரிகளில் சொன்னேன்: “மேடம் ரொம்ப அரிக்கிறது. தோல் கடினமாக மாறுது. அடுத்தடுத்த இடங்களிலும் பரவுகிறது. நகம் கொண்டு அழுத்தமாகச் சொறிந்தால் இரத்தம் கசிகிறது. எந்நேரமும் அதே நினைப்புதான். எனது நிம்மதியே போய்விட்டது. வேலைகளில் முழு கவனம் செலுத்தமுடியவில்லை” என்றேன் சோகமான குரலில்.

‘‘பின்னே? படர்தாமரை …. எல்லா இடங்களிலும் பரவினால் சுகத்திற்கு ஏது வழி? சோகம்தான்.

படிச்ச அதிகாரி நீங்க, என்னைப் பாருங்க நான் என்ன சேலை கட்டியிருக்கிறேன். காட்டன் புடவை. ஆனால் நீங்க பாலியஸ்டர் பேண்ட், பாலியஸ்டர் சட்டை கொளுத்தும் வெயில் காலத்துல இதை அணியலாமா? எப்படி அது உங்க ஒடம்பு வியர்வையை உறிஞ்சும்? அது தங்கத் தாமரையா பரிசளிக்கும்? படர்தாமரையைத்தான் கொண்டு வரும்” என்று என்னை சிறிதே கோபமான பார்வையுடன் நோக்கினார் டாக்டர்.

“மேடம் எனக்கு இதெல்லாம் தெரியாது மேடம். பாலியஸ்டர் ட்ரெஸ் அணிவது இத்தனை கெடுதலானதா?” என்றேன் அப்பாவியான குரலில்.

“படர்தாமரை எனும் தொற்றுநோய் (ஃபங்கஸ்) முதலில் தோலில் மாற்றத்தை ஏற்படுத்தும். தோலில் உள்ள மெல்லிய இரத்தக்குழாய்களை அது பாதிக்கும். நகம் கொண்டு சொறியும்போது அந்த இரத்த நாளங்களில் உடைப்பு ஏற்பட்டு அந்த இரத்தமானது நமது விரல்களின் மூலம் மற்ற இடங்களுக்கும் பரவும். அந்த இடங்களிலும் தோலில் மாற்றம் ஏற்பட்டு தடிமனாகும். பரவப் பரவ தோலில் எரிச்சல் கூடும்” என்று என்னை முறைப்பது போல் அந்த அம்மையாரின் பார்வை இருந்தது.

“படர்தாமரை வராமல் எப்படி மேடம் பாதுகாத்துக் கொள்ளலாம்?” என்றேன் ஆர்வத்துடன் கெஞ்சலான குரலில்.

எனது கேள்விக்குக் காத்திருந்தவர் மாதிரி கடகடவென்று சொற்களை என் மனதில் படிய வைத்தார் மருத்துவர்.

“இங்கே பாருங்க சார் காற்று புக வழிவிடும் பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். வெயில் காலங்களில் பருத்தி ஆடைகளையே உபயோகப்படுத்த வேண்டும். படர்தாமரை நோயாளிகள் பயன்படுத்திய துணி, கைலி, துண்டு, பனியன், சோப்பு, உடல் தேய்க்கும் பிரஸ் இவற்றினை வீட்டின் மற்றவர்களோ, அறைகளில் நண்பர்களோ யாருமே புழங்கக் கூடாது. அந்த தொற்று நோய் கிருமிகள் பரவும். அதிக வியர்வையை வெளியேற்றும் வெயிலில் அதிக நேரம் அலையக் கூடாது. சிலர் கடைக்குச் சென்று கேட்டு களிம்புகளை வாங்கித் தடவி வர சில நாட்களில் நோய் தீவிரமானதும் டாக்டர்களை அணுகுவர். அது கூடாது. படர்தாமரை நோய்க்கிருமிகளை அகற்றும்வரை உள்ளேயும் வெளியிலேயும் சிகிச்சையானது மாத்திரை மற்றும் ஆயின்ட் மென்ட் மூலம் தரப்படும். படர்தாமரையினைப் பரவ விடாமல் நோய் அறிகுறிகள் தென்பட்ட உடனேயே தோல்நோய் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது” என்று எனது கையில் ஆலோசனைச் சீட்டினை அளித்து அழைப்பு மணி பட்டனை அழுத்தி அடுத்த நோயாளியைக் கவனிக்கத் தயாரானார் அந்தப் பெண் மருத்துவர்.

வெளியே வந்து அடுத்த அறையில் இயங்கிய மருந்துக் கடைக்குச் சென்றேன். ஆச்சரியம் நாராயணன் கையில் இருநூறு ரூபாய் நோட்டோடு கவுண்டர் முன் நின்றிருந்தார். அங்கேதான் டாக்டர் பீஸை முன்னரையே கட்ட வேண்டும்.

“என்னங்க நாராயணன் நீங்களும் இங்கே?” என்றேன். எனது ஏளனப் பார்வையையும் நமச்சிரிப்பையும் புரிந்துகொண்டவராய் “களிம்பினாலே நோய் அதிகமாய் பரவுச்சே தவிர குறையலே, ஸ்டீராய்டு களிம்பு இதுக்கு எப்படி சரியாகும்? சரி டாக்டர் நல்லா பார்க்கிறாங்களா?” என்றார் ஆர்வத்துடன்.

“ம்..ம் மருந்து மாத்திரை ஆயின்ட் மென்ட் எழுதிக் கொடுத்திருக்காங்க. இன்னும் ஒரு வாரத்துல அறவே சரியாகிவிடும்னாங்க” என்றேன். மருந்துச் சீட்டினை உள்ளே கொடுத்தேன்.

சரி? இருநூறு கட்டி நானும் ஏன் டக்டரைப் பார்க்கனும்? உங்க மருந்துச் சீட்டை வச்சே நானும் வாங்கிக்கிறனே. அல்லது ரெண்டு செட்டா நீங்களே வாங்கிடுங்க. அதுக்குள்ள பணத்தை நான் தந்துடறேன்.” என்று பல் தெரியப் புன்னகைத்தார் நாராயணன்.

மருந்துக்கு பணம் கட்டிவிட்டு நிமிர்ந்த எனக்கு கோபம் வந்துவிட்டது. “அடப்போங்க சார். ஒரு குறிப்பிட்ட நோயின் தன்மை, வகை ஆளுக்கு ஆள் மாறுபடும். ரொம்பக் கஞ்சம் புடிக்காதீங்க. மொதல்ல போய் டாக்டரைப் பாருங்க. போங்க. போங்க” என்று அவர் பாராது மருந்து மாத்திரைகளுடன் வெளியேறிவிட்டேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *