சிறுகதை

சால்வை | ராஜா செல்லமுத்து

Spread the love

ஒவ்வொருவரின் மெய்சிலிர்க்கும் பேச்சில் மயங்கிக் கிடந்தது அரங்கம். மின்னொளியில் மிளிர்ந்து கிடந்த மேடையில் ஒரு பிரபலமான ஆர்க்கெஸ்டாராவின் பாடல்கள் கொஞ்சம் சுருதி விலகியே ஒலித்துக்கொண்டிருந்தது.

அவரவர்களின் குரல் அச்சை உதறிவிட்டு வேறொருவரின் நகல் குரலைப் பிரதியெடுத்துப் பாடிக்கொண்டிருந்தனர்.

யாரோ இசைமைத்த பாடல்களை அப்படியே பாடுவதில் அப்படியென்ன அறிவு இருக்கிறதென்று தெரியவில்லை. பாடல்களைக் கட்டுப்படுத்திக் கொண்டிருப்பவர் அணிந்திருக்கும் ‘கோட்’ அவரின் அறிவை மீறி அணிந்திருப்பதாகவேப் பட்டது சாமுவுக்கு.

‘‘அமைதியான நதியினிலே ஓடும்.. ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்..’’ என்ற பாடலை டி.எம்.செளந்திரராஜனின் குரலில் ஒருவர் பாட

‘‘ஆகா என்னவொரு குரல் அப்படியே டி.எம்.ஸை உரிச்சு வச்சது மாதிரி இருக்குங்க..’’ என்று ஒருவர் சொல்ல

‘‘ஏங்க ஏற்கனவே ஒருத்தர் பாடுன குரல நகலெடுத்துப்பாடிட்டு இருக்காரு. இதிலென்ன பெருமை இருக்கு..’’ என்று சாமு சொல்ல

‘‘ஏங்க இப்பிடி பேசுறீங்க.. அவரு குரலு அப்பிடியொரு ரம்யமாக இருக்கு… நான் எவ்வளவோ குரல்கள கேட்டுருக்கேன். இவரு குரல் டி.எம்.எஸ் குரல் மாதிரி அப்படியே இருக்குங்க..’’ என்று மீண்டும் அவர் சொல்ல

‘‘அதான்ங்க தப்பு..!

டி.எம்.எஸ் மாதிரி இவரு மிமிக்கரி பண்ணிட்டு இருக்காரு.. அவரப் போயி பாராட்டிட்டு இருக்காருன்னு சொல்லுரீங்க ..! அவர அவரோட குரல பாடச்சொல்லுங்க.. அது தான் வெற்றியேயொழிய இன்னொருத்தவங்களோட குரல்ல பாடுறது பெருமை இல்ல..’’ என்று சாமு சொல்ல அப்போது மேடையேறிய ஒரு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் போல பாடிக்கொண்டிருக்க.

‘‘இவரு நல்லாபாடுறாருன்னு’’ சொல்ல வந்தவரை சாமு ஒரு முறைமுறைத்துப் பார்த்தார். அவர் அப்படிப் பார்ப்பதைப் பார்த்தவன் கொஞ்சம் ஒதுங்கினான்.

நிகழ்ச்சி நடத்துபவர் மேடையேறி வந்திருப்பவர்களுக்கு சிறப்பு செய்கிறோம் என்று பேச பாடல்கள் கொஞ்சம் கட்டுக்குள் வந்து சிறப்பு விருந்தினர்கள் மேடைக்கு வரவேற்கப்பட்டனர்.

முதலில் சிறப்பு விருந்தினர் ‘‘ஞானகுரு அவர்களுக்கு நம் சபாவின் தலைவர் சால்வை அணிவித்து மரியாதை செய்வார்..’’ என்று சொல்ல ஞானகுரு மேடையேறினார் .

சபாவின் தலைவர் சால்வையை உதறி ஞானகுருவின் தோளோடு சேர்த்து சால்வையைப் போர்த்த ரொம்பவே பவ்யமாகக் குனிந்து சால்வையை ஏற்றுக்கொண்டார் ஞானகுரு. அவருக்கு நினைவுப்பரிசினை வழங்கிக் கெளரவிக்க அத்தனையும் ஏற்றுக்கொண்ட ஞானகுரு சால்வை நினைவுப் பரிசுடன் கீழே இறங்கினார். அவர் ஏற்கனவே அமர்ந்திருந்த இருக்கையில் மீண்டும் போய் உட்கார வாங்கிய சால்வையை ஒருமுறை உதறி மடித்து வைக்க ஆயத்தமானார்.

‘‘என்ன இது.. ஏற்கனவே இது நமக்கு போட்ட சால்வை மாதிரித் தெரியுதே..’’ என்ற சாமு மீண்டும் சால்வையை உற்றுப்பார்த்தார்.

‘‘ஆமா இது நமக்கு ஏற்கனவே போட்ட சால்வையில்ல.. சேந்த மொத்த சால்வையும் நாம தான் அல்ப்பமா ஜவுளிக்கடையில வித்திட்டு வந்தோம். அதுக்குள்ள இவங்க கொறச்ச வெலைக்கு அதே சால்வைகள வாங்கிட்டு வந்து நமக்கு ஏற்கனவே போட்ட சால்லையை நமக்கே போடுறாங்களே என்ற ஞானகுரு போட்ட சால்லையை வாங்கிக்கொண்டு வேண்டா வெறுப்பாக வீடு வந்தார்.

கடந்த ஒரு மாதமாக வந்த சால்வைகளை எடுத்துப்பார்த்தார் இருபதுக்கும் மேலே இருந்தது.

‘‘ஏங்க உங்கள கெளரவப்படுத்துறேன் ..மரியாதை செய்றேன்ற.. பேர்ல வெறும் சால்வையும் ஒரு கட்டையும் குடுத்து விடுறாங்களே இத வச்சு என்ன செய்யமுடியும். இதக் கொண்டு போயி வித்திட்டு வாங்க..’’ என்று மனைவி விரட்ட

‘‘சரிம்மா.. அதத்தானே எப்பவும் பண்ணிட்டு இருக்கோம்..’’ என்ற ஞானகுரு மொத்த சால்வையையும் அள்ளிக்கொண்டு ஜவுளிக்கடைக்குப்போக

‘‘என்ன.. ஞானகுரு சார்.. சால்வை பூமிய விட ரெம்ப வேகமா சுத்துது போல ஏற்கனவே வந்த சால்வையே வந்திட்டு இருக்கே..’’ என்று சொல்லி ஞானகுருவுக்குப் பாதிவிலை கொடுத்துவிட

மறுநாள் ஒரு விழாவிற்காக சால்வை வாங்க பெரிய மனிதர்கள் ஜவுளிக்கடை வந்தனர்.

‘‘ஏங்க சார்.. பாதிவிலைக்கு சால்வை விக்கிறாங்களாமே..? அப்பிடி ஏதாவது இருக்கா..? என்று கேட்க

‘‘ம்..ம்.. நெறையா இருக்குங்க. எவ்வளவு சால்வை வாங்கணுமோ? வாங்கிட்டு போங்க..’’ என்று பழைய சால்வையை ஜவுளிக்கடைக்காரர் கொடுக்க அதில் ஞானகுரு விற்ற சால்வையும் இருந்தது.

மறுநாள் அந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராய்க் கலந்து கொண்டு வாழ்த்த வந்தார் ஞானகுரு. அந்த விழாவில் ஞானகுருவுக்கு சிறப்பு செய்யப்பட்டது. சால்வை அணிவிக்கப்பட்டு கவுரவப்படுத்தப்பட்டார். அவருக்குப் போர்த்திய சால்வையை உற்றுப்பார்த்தார்

‘‘ஐயய்யோ மறுபடியும் நாம வித்த சால்வையா..?’’ அது நமக்கே வருதே. மறுபடியும் சால்வையைப் பார்த்த ஞானகுருவுக்குத் தலைசுற்றியது. விழாவிற்கு வந்திருந்தவர்களுக்குப் போர்த்தப்பட்ட சால்வையில் நிறைய ஞானகுரு விற்றதாகவே இருந்தது.

அது மீண்டும் சுற்றத்தயாரக இருந்தது.

சுற்றுவது பூமி மட்டுமல்ல ; போலிகளும்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *