சிறுகதை

செம சூடு | செருவை நாகராசன்

Spread the love

நிலையத்தை விட்டு அந்தப் பேருந்து புறப்பட்டபோதே நல்ல கூட்டமிருந்தது. காலை நேரம் பத்து மணிக்கு நகரம் போய் சேர்கிற வண்டி. எனவே அலுவலகங்களில் வேலை பார்ப்போர், கல்லூரி மாணவ – மாணவியர் என்று பலரும் நின்றிருந்தனர்.

நானும் நின்று கொண்டிருந்தேன்.

எனக்கு முன் ஓர் இள நங்கை.

வயது இருபதுக்குள் இருக்கலாம். மாநிறம். நல்ல உயரம். சுமாரான அழகு. தோளில் பை.

அவளுக்கு முன் ஒரு வரி மீசையுடன் இரு இளைஞர்கள். ஒருவன் உயரம். அடுத்தவர் குட்டை. அவர்கள் பார்வையோ அந்த இளநங்கை மேல்.

“என்னடா சேகர் எத்தனை நாளைக்குத்தான் சும்மா பாத்துக்கிட்டே இருக்கப் போறே? துணிஞ்சு சம்மதத்தைக் கேளு. அப்புறம் சினிமா, ஓட்டல், விடுதினு குதூகலமா இருக்கலாம்?” அந்த இருவரில் குட்டையன் சொன்னான்.

“போடா… திடீர்னு ஒரு பொண்ணுக் கிட்டப் போயி நான் உன்னை காதலிக்கிறேனு சொல்றது அசிங்கம்டா. அதுக்குன்னு ஒரு முறை இருக்கு, இல்லையா?”

பேச்சும் அவளைக் குறிவைத்த விமர்சனமும் தொடர்ந்தன.

நான் , பெரியவர்கள், பெண்கள் அருகில் நிற்பதைப் பற்றி இருவரும் கவலைப்படவில்லை.

தரக் குறைவான வார்த்தைகளால் அவளைத் துடிக்க வைத்து அதில் இன்பம் கண்டு கொண்டிருந்தனர்.

என் இளம் குருதி கொதித்தது. கொஞ்சம் கூட நாகரிகமே இல்லாமல் படித்த காட்டுமிராண்டிகளாகி விட்ட இவர்களைத் திருத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.

என் கூட நண்பர் பிரகாசம் இருந்தார்.

“பிரகாசம்! தனியா வேலைக்குப் போற பெண்ணைப் பற்றி ஆபாசமா சில பசங்கள் கிண்டல் பண்றாங்களே… அவனுங்களைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?”

“பொறுக்கிங்க!” என்றார் பிரகாசம் உச்சக் குரலில்.

“சரி… இப்படிப் பேசுற அவனுங்களைப் பற்றி அந்தப் பொண்ணு என்ன நினைக்கும்?”

“சாக்கடைகள்னு நினைக்கும்!” சத்தம் போட்டே சொன்னார் பிரகாசம்.

“தொடர்ந்து இரண்டு பேரும் அசிங்கமா கிண்டல் பண்ணினால் அந்தப் பெண் பொறுமையா இருக்குமா?”

“எப்படி இருக்கும்? ஒரு நாள் செருப்பைக் கழற்றி கையிலே எடுத்துக்கும்… பஸ்லயே வைச்சு பட் பட்’னு அவனுங்க முகரையை வீங்க வைச்சிடும்.”

அடுத்து நான் மேலே தொடர்வதற்குள் அந்த இளைஞர்கள் இருவரும் பேருந்தின் முன்புறம் சென்றுவிட்டனர். அங்கிருந்தே எங்களை முறைத்தனர்.

அந்த இளம் பெண் எங்களை நோக்கினாள். அவள் பார்வையில் நன்றி ‘பளிச்’ சென மின்னியது.

ஆறு மாதம் சென்றது.

அந்த பேருந்து எனக்கு முன் இருக்கையில் அதே பெண். கழுத்தில் பிரியாய் புது மஞ்சள் கயிறு. அவள் பக்கத்தில் உட்கார்ந்து அவள் தோள் மேல் கை போட்டுச் சிரித்துப் பேசும் அந்த இளைஞன்…?

அடுத்த வினாடி பின்னால் யாரையோ பார்க்க அவன் திரும்பினான். எனக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி.

பேருந்தில் அவளிடம் தவறாக நடந்துகொண்ட அதே உயரமான இளைஞன்!

என்னய்யா இது வேடிக்கை… எப்படி எப்படி இது நடந்திருக்கும்?

சற்று நேரத்தில் அவளும் என் பக்கம் திரும்பினாள். நான் புன்னகைத்துவிட்டு, “இப்ப நீங்கள் இரண்டு பேரும் தம்பதிகளா?” என்றேன். அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த குரலில்.

என்னை அவள் சட்டென்று தெரிந்து கொண்டாள்.

“ஆமாங்க. அன்னைக்கு நீங்கள் சாட்டையடி கொடுத்த பிறகு இவர் சாதுவாயிட்டாரு. பிறகு ஒரு நாள் பேருந்தில் ஒரு குடிகாரன் என்கிட்ட முறைச்சு வம்புக்கு வந்த நேரத்துல எனக்கு ஆதரவா வந்து அவனைப் புரட்டி எடுத்திட்டாரு. எனக்கு அவரைப் புடிச்சுப் போச்சு. போன மாதந்தான் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்” அவள் குரலில் மகிழ்ச்சி பொங்கியது. அவனும் ஒருவித வெட்கத்துடன் சிரித்தான்.

கண்ணெதிரே அக்கிரமம் என்று நான் தலையிடப் போக ஓர் இளைஞன் மனம் திருந்தவும் காதல் மலரவும் அது வழிவகுக்க அவர்கள் தம்பதிகளாக என் கண் முன் காட்சி தர… எனக்குப் பெருமையாக இருந்தது!

அவன் நல்லவனாகத்தான் இருக்க வேண்டும்.

ஒரு சூட்டில் திருந்திவிட்டான் அல்லவா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *