சிறுகதை

மனத்திண்மை வேண்டும் | கௌசல்யா ரங்கநாதன்

Spread the love

ஒரு வாரமாய் எங்கள் வீட்டில் ஒரு மௌன சாம்ராஜ்யமே நடந்து கொண்டிருக்கிறது.

பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அது வீடோ, வெளியிடங்களோ, யாரும் எவருடனும் ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நொடிப்பொழுதும் இருக்கவும் எதையும் சாதிக்கவும் முடியாது என்பதை உணர்ந்தவன் நான்.

எப்போதும் கலகலவென எதையோ பேசிக்கொண்டும் சில சமயங்களில், சண்டையிட்டுக் கொண்டும் கும்மாளம் போட்டுக் கொண்டும் இருப்பதுதானே ஒரு வீடென்பது.

அலுவலகத்தில், வெளியிடங்களில் கூட ஏதாவது மனத்தாங்கல்கள் இருந்தாலும் வீட்டுக்கு வந்து விட்டால் பெற்றவர்கள், கட்டிய மனைவி, குழந்தைகள் முகம் பார்த்ததும் கவலையெல்லாம் மறந்து போகும்தானே.

.இப்படித்தான் எங்கள் வீட்டிலும் சில சந்தர்பங்களில் புன்னகைபூத்தவாறும் சில சமயங்களில் சண்டையாகவும் இருக்கும்.

அந்த அற்ப சண்டைகளும் ரொம்ப காலம் நீடிக்காது.

ஆனால் இப்போது ஏன் ஒரு வாரமாய் ஒரு மௌன யுத்தம் எங்கள் வீட்டில் நடக்கிறது என்பதுதான் விளங்கவில்லை.

என் கணவரை கேட்டால் உதட்டை பிதுக்குகிறார்..பிள்ளையை கேட்டால் “ஒண்ணுமில்லை” என்கிறான். அவன் பொய் சொல்கிறான் என்பதை உணர முடிகிறது..

ஆனால் ஒரு பெற்ற தாயாய் என் மனம் என்ன பாடுபடுமென்று அவன்…வேணாமே இதற்கு மேல்..என் நெஞ்சம் கனத்து போயிருக்கிறது என்பதை எப்படி அவனிடம் நான் சொல்ல முடியும்?

“நிசமா ஒண்ணுமில்லையேடா கண்ணா?”

“ஏம்மா.ஏன் இப்படி தொண தொணக்கிறே? ஒண்ணுமில்லைனு சொல்றேன்ல.” என்று சொல்லி விருட்டென அவ்விடம் விட்டு போய் விடுகிறான் நான் மேற்கொண்டு ஏதாவது

கேட்கப் போகிறேனோ என்று..ஆனால் அவன் மனதை ஏதோ ஒரு கவலை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று உணர முடிகிறது.

எதுவொன்றையும் வெளிப் படையாய் சொன்னால்தானே தீர்வு காண முடியும்.

தேவைப்பட்டால் ஆலோசனைகள் சொல்லவும் முடியும், என்ன இருந்தாலும் நான் ஒரு தாய் அல்லவா!

எங்கள் மருமகளிடம் “உங்களுக்குள் என்ன பிரச்சினை” என்று கேட்போமென்று பார்த்தால் அவள் போய் பிள்ளையாண்டானிடம் கேட்டு, அவன் திரும்ப எங்களிடம் வந்து “ஏம்மா நான்தான் ஒண்ணுமில்லைனு சொன்னேன்ல..மறுபடி ஏன் உன் மருமகளை துருவறே?” எனலாம்.

அன்று எட்டாம் நாள்.. இந்த 8 நாட்களும் நான் ஊண் உறக்கம் இல்லாமல், என் மனக் குமுறலை கொட்ட முடியாமலும் படும் வேதனை!! எப்படியும் இந்த மௌன யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டி மகனிடம் மறுபடி போய், தயக்கத்துடன் நின்று “டேய் நானும் உங்கப்பாவும்

ஒரு ஆன்மீக டூர் போய் வரலாம்னு இருக்கோம்” என்ற போது அவன்”என்னம்மா, திடீர்னு? எப்படி இந்த வயசான காலத்தில் தனியாய் போய், வருவீங்க?..!எப்ப கிளம்பப் போறீங்க? யார் கூட வராங்க? எங்கெங்கு போறதா உத்தேசம்? எப்ப திரும்பி வரதா உத்தேசம்?” என்றான்..

“அப்பா இப்பத்தான் நாலு வார்த்தை பேசினே.’ அது போதும். நானும் உங்கப்பாவும் இனி திரும்ப இங்கே வரதாயில்லை.ஏதாவது ஒரு முதியோர் இல்லத்திலேயே, எங்க மிச்ச சொச்ச காலத்தை கழிச்சிடலாம்னு பார்க்கிறோம்..

“என்ன பைத்தியமா உங்களுக்கு? ஏன் இப்படி ஒரு திடீர் முடிவு? உங்க மருமக ஏதாச்சும் சொன்னாளா உங்க மனசு நோகறாப்பல?” என்ற போது எங்கள் மருமகள் அங்கு வந்து “என் மகனைப் பார்த்து “எதுக்கெடுத்தாலும் என்னை

குத்தம் சொல்லாம இருக்க முடியாதுல உங்களால?

ஏம்மா நான் உங்களை என் பெத்த தாய்க்கும் மேலாதானே நினைக்கிறேன்” என்றாள் அழுகையூடே..

“அவளை ஏண்டா கடிஞ்சுக்கிறே? அப்பாவிப் பெண்ணுடா இவ.. வாயில்லாப் பூச்சி. நீதான் ஒரு வாரமாய் வீட்டை சூனியமாக்கிகிட்டிருக்கே. ஒரு வார்த்தை எங்க கிட்ட அன்பா, ஆதரவா பேசறதுண்டா? மருமக இல்லை..நாங்க பெறாத பெண் இவ மட்டும் இல்லைனா, நாங்க என்னைக்கோ சொல்லாம கொள்ளாம ஏதாச்சும் முதியோர் இல்லத்துக்கு போயிருப்போம்..” என்ற என்னை பார்த்து எங்கள் மருமகளும் “நல்லா சொல்லுங்க உரைக்கிறாப்பல உங்க பிள்ளைகிட்ட” என்றாள்.

“அவனை குத்தம் சொல்றியே, நீ மட்டும் என்ன,அப்படித்தானே நடந்துக்கிறே. சமீப காலமா?அப்ப உங்களுக்கு நாங்க வேண்டாத சுமை..நாங்க எங்க பாட்டை பார்த்துக்கிட்டு போயிடறம்.எப்பவுமே நீங்க இறுக்கமா முகத்தை வச்சுக்கிட்டு ஒரு வார்த்தை கூட பேசாம இந்த வயசில எங்களுக்கு என்னம்மா வேணும். அன்பா, கனிவா நாலு வார்த்தைகள்தானே! அதுவும் பெத்த பிள்ளை, வீட்டுக்கு வந்த மருமகள் கிட்ட இருந்தெல்லாம்” என்ற எங்களைப் பார்த்து,எங்கள் மருமகள் விக்கி விக்கி அழ ஆரம்பித்தாள்.

“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி அழறே? என்னை பெறாத தாய்னு நீ சொன்னது உண்மையாய் இருந்தா என்னனு சொல்லு”..

பிள்ளையும் அங்கு வந்து “தொட்டதுக்கெல்லாம் அழுதுட்டா போதுமா?எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்..எனக்கும்தான் உள்ளூர வேதனை இருக்கு..ஆனா என்ன செய்யறது? கடவுள் மேல பாரத்தை போட்டுட்டு,

“சிலர் அழுவார்ன்ற”, ” பாடல் வார்த்தைகளுக்கொப்ப அமைதியாயிருக்க பெரு முயற்சிதான் செஞ்சுக்கிட்டிருக்கேன் நானும்..என்றவனைப்பார்த்து நான் “தாயறியா சூலுண்டோனு ஒரு சொலவடை உண்டு..உன் முகமே காட்டுது..டேய், ஒரு மகிழ்ச்சிககரமான

விஷயத்தை யார்கிட்டவும் பகிர்ந்துகாம இருந்துடலாம்..ஆனா ஒரு வேதனையை ரொம்ப நெருக்கமானவங்க கிட்டயாச்சும் பகிர்ந்துக் கணும்டா.. சொல்லு.

இப்பவாவது பெத்த தாய்கிட்ட..அப்படி தாய்கிட்ட சொல்ல முடியலைனா தகப்பன் கிட்டயாவது, உன் மனசில் உள்ள பிரச்சினைதான் என்னனு சொல்? நான் உன்னை பெத்தவடா..என்னால் உன் சோக முகத்தை பார்க்க முடியலைடா..” என்ற போது மருமகள் வந்து “எனக்கும்தான் மனசுக்குள்ள ரொம்ப காலமா அந்தவேதனை இருந்து கிட்டிருக்கும்மா.. நான் யார்கிட்ட போய் சொல்வேன் என் மனக்குறையை?” என்றாள்.

அவளை மேலும் புண்படுத்த விரும்பாததால் பிள்ளையிடம் கேட்டேன்..

“என்னடா இப்ப நீ சொல்லப்போறியா இல்லையா?” என்ற போது எங்கள் பிள்ளையாண்டான் சொன்னான் “உங்க மருமக இந்த மாசமும்…இந்த மாசமும்…” என்றவன் அதற்குமேல் பேசமுடியாமல் அழத்தொடங்கினான் தலை குனிந்தவாறு..

“மண்டூ..மண்டூ.. இதெல்லாம் சகஜம்டா..ஒவ்வொருத்தருக்கு கலியாணமான உடனேயே பிள்ளைப்பேறு கிடைச்சிரும்..எனக்கே அதுவும்,

சுமார் 50 வருஷங்களுக்கு முன்னால, எங்கள் குக்கிராமத்தில, வைத்திய வசதிகள் இல்லாம, 2 முறை கருத்தரிச்சு, சிதைவு ஏற்பட்டு அப்புறம்

வேண்டாத தெய்வமில்லை. இருக்காத விரதமில்லை..ஒரு கட்டத்தில் நம்பிக்கையே இழந்தப்பத்தான் நீயே பிறந்தே..உனக்கொண்ணு இப்ப

சொல்லட்டா, உங்களுக்கு நல்லபடியா ஒரு குழந்தை பிறக்கணும்னு நான் எவ்வளவு வேண்டுதல்கள், விரதங்கள் இருக்கேன்னு! இப்ப சொல்றேன்

கேட்டுக்க. நிச்சயம் உங்களுக்கு சீக்கிரமே புத்திர பாக்கியம் உண்டாகும்..அதைப் பார்த்தப்புறம்தான் நாங்க இந்த உலகத்தை விட்டுப்போவோம்.

எத்தனை இரவுகள்,பகல்களா நானும் உங்கப்பாவும் சதா சர்வ காலமும் நம்ம குல தெய்வத்து கிட்ட பிரார்த்தனை பண்ணிக்கிட்டிருக்கோம்.

உனக்காக..உண்மையான வேண்டுதல்களை கடவுள் நிச்சயம் நிறைவேத்தி வைப்பான்..இதுக்காக இடிஞ்சு போயிடாதீங்க..ஒரு தாயா நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருப்பேன்னு நினைச்சு பாரு ஒருக்கணம்” என்ற போது என் கால்களில் தம்பதி சமேதராய் இருவருமே விழுந்து, வணங்கி, ஆசி வேண்டி நின்றனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *