செய்திகள்

சென்னை குடிசை வாழ் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டு பயிற்சி

Spread the love

சென்னை, அக். 9–

சென்னை முழுவதும் குடிசையில் உள்ள பெண்களுக்கு சுய திறன் மேம்பாட்டு பயிற்சியை பெண்கள், குழந்தைகள் குற்றத் தடுப்புப்பிரிவு துணைக் கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.

சென்னை மாநகர காவல்துறை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் தடுப்புப்பிரிவு – இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையின் மகளிர் அமைப்புடன் இணைந்து குடிசை பகுதியில் வசித்து வரும் இளம் பெண்களுக்கு சுயதிறன் மேம்பாட்டுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் சென்னை, சைதாப்பேட்டையிலுள்ள கோதாமேடு காவல் சிறார் மன்றத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது ஒரு குடிசை பகுதியிலிருந்து 50 இளம் பெண்கள் விகிதம் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு ஹோம் நர்ஸ், ஓட்டுநர், தையல், பாதுகாப்பு அழகு கலை ஆகியவற்றில் அடிப்படை பயிற்சி அளித்து அதில் ஒரு வேலையை தேடிக் கொள்ள உதவி செய்வதாகும்.

இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சி திடீர் குப்பம், கோதாமேடு, கண்ணம்மாபேட்டை, தேனாம்பேட்டை தாமஸ்நகர், சுந்தர நகர் குப்பம், திடீர்நகர் குப்பம், மக்கிஸ் கார்டன் குப்பம் ஆகிய 10 குடிசை பகுதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் சுயதிறன் மேம்பாட்டு பயற்சியை சென்னை நகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்புப் பிரிவு காவல் துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி துவக்கி வைத்தார்.

விழாவில், சைதாப்பேட்டை உதவி கமிஷனர் அனந்தராமன் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகி தீபாளி கோயல் மற்றும் காவல் சிறார் மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி கூறியதாவது:

இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், குடிசை பகுதியிலுள்ள பெண்களை திறமையுள்ளவர்களாக ஆக்குவதாகும். சிறந்த பயிற்சியாளர்கள் கொண்ட அமைப்புகள் மூலம் குடிசையில் வசிக்கும் பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதனை அவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். மேலும், பெண்கள் திறமை உள்ளவர்களாக மாறினால் ஒட்டுமொத்த குடும்பமும், சமுதாயமும் பலனடையும். முதல் கட்டமாக 16 இளம் பெண்கள் இந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். பிற்பகலில் இரண்டாம் கட்ட பயிற்சி வழங்கப்படும். கமிஷனர் விஸ்வநாதன் அறிவுரையின் படி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் பிரிவைச் சேர்ந்த நாங்கள் சென்னை மாநகரத்தில் அனைத்து பகுதிகளுக்கும் இதனை கொண்டு செல்ல உள்ளோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்புப்பிரிவினர் இதுபோன்ற பல நிகழ்ச்சிகளை நடத்தவும் அல்லது ஒருங்கிணைந்து செயல்படவும் ஆவலுடன் செயலாற்றி வருகின்றோம்’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *