செய்திகள்

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: எடப்பாடி பழனிசாமிக்கு விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டு

Spread the love

சென்னை, பிப்.11–

காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருப்பதற்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பே சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அரசு அறிமுகப்படுத்தும் போது, ‘சிறப்பு வேளாண் மண்டலங்கள்’ உருவாக்கப்பட வேண்டும் என்று நான் குரல் கொடுத்ததை நினைவு கூறுகிறேன்.

பெரும் நன்னோக்கோடு தமிழக அரசு இன்று இத்திட்டத்தைக் கையிலெடுத்து இருப்பதை வரவேற்கிறேன். இதன் தொடர்ச்சியாக, ‘உலக முக்கியத்துவமிக்க வேளாண் பாரம்பரியச் சின்னங்கள்’ பட்டியலில் கல்லணை இடம்பெறச் செய்ய வேண்டும் என்ற எனது நீண்ட நாள் கோரிக்கையையும் தமிழக அரசு ஏற்று உரிய முயற்சி எடுக்க வேண்டுகிறேன்.

சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பொருளாதார வருவாயை உறுதிப்படுத்தும் தொழிலாக வேளாண்மையை உருவாக்கும் வகையில், சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் கொடுத்து சலுகைகள் உள்ளிட்ட முன் நடவடிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் எதிர்கால உணவுத் தேவையும் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டு, அதன்மூலம் நீடித்த உற்பத்தியும் வருவாயும் நிலைப்பதற்குத் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத் திட்டம் வழிவகுக்கும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *