செய்திகள்

‘பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் இணையதளம் மூலம் விண்ணப்பித்து சுகாதார சான்றிதழைப் பெறலாம்’

Spread the love

சென்னை, பிப்.20–

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழை முழுமையாக இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வருகின்ற பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்து பெற்று கொள்ளும் பணிகளை முழுமையாக இணையதளம் மூலமாக வெளிப்படைத்தன்மையுடன் மேற்கொள்ளும் நடைமுறையை செயல்படுத்த புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் ஆகியனவற்றிற்கு வழங்கப்படுகின்ற சுகாதாரச் சான்றிதழ்களை www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளும் நடைமுறை 17–ந் தேதி அன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையத்தில் சிட்டிசன் போட்டல் மூலமாக தங்களுக்கென ஒரு பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை உருவாக்கி, அதன் மூலம் சுகாதாரச் சான்று பெறுவதற்கான விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்து கொள்ளலாம். அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்ட இணையதள விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட சுகாதார ஆய்வாளர், துப்புரவு அலுவலர் மற்றும் மண்டல சுகாதார அலுவலர் ஆகியோர் தங்களின் பயனர் குறியீடு மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி, கள ஆய்வு மேற்கொள்வதற்கும் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொண்டு விதிகளுக்குட்பட்டு சுகாதாரச் சான்றினை அனுமதிப்பதற்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தொடர் நடவடிக்கை குறித்தும் மனுதாரருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். சான்றிதழ் அனுமதிக்கப் பட்டவுடன் பொதுமக்கள் தங்களது பயனர் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி இணையத்திலிருந்து மண்டல சுகாதார அலுவலரின் மின் கையொப்பமுடன் சுகாதாரச் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், கல்வி நிறுவனங்கள், விடுதிகள் ஆகியவை சுகாதாரச் சான்றிதழ்களை இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம் என கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *