போஸ்டர் செய்தி

11 எம்எல்ஏக்கள் தொடர்பாக சபாநாயகரே முடிவெடுப்பார்: வழக்கை முடித்து உச்சநீதிமன்றம் உத்தரவு

Spread the love

டெல்லி, பிப். 14–

தமிழக சபாநாயகர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம் என்று கூறி, ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களின் தகுதி நீக்கம் கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.

துணை முதல்வர் ஓ.பன்னீா்செல்வம் உள்ளிட்ட 11 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க விவகாரத்தில், பேரவைத் தலைவர் எடுக்கப் போகும் நடவடிக்கை குறித்து, சட்டப் பேரவைச் செயலாளர் பதில் தாக்கல் செய்யுமாறு கடந்த விசாரணையின் போது, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ போப்டே தலைமையிலான நீதிபதிகள் சூா்யகாந்த், பி.ஆா். கவாய் ஆகியோர் அடங்கி அமர்வு முன்பு தமிழக அரசின் தலைமை வழக்குரைஞர் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

சபாநாயகர் மீது நம்பிக்கை

அந்த விளக்கத்தில், வழக்கில் தொடர்புடைய 11 எம்எல்ஏக்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்பட்டு விட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சபாநாயகரை நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது. இதில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர், அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு நல்ல முடிவை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும், சபாநாயகரை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட முடியாது என்றும், கால அவகாசம் பிறப்பிக்க முடியாது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்த வழக்கு, இன்று முடித்து வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *