நாடும் நடப்பும்

பசுமை பூமியை பாதுகாக்க வேண்டும்

பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தம் 2015 டிசம்பர் 12 உலக நாடுகள் ஒரு மனதாக ஏற்கப்பட்டது.

அந்த மாதத்தில் தான் சென்னை “சுனாமி” பேரிடர் மழை காரணமாக பெரும் சேதத்தை சந்தித்தது நினைவிருக்கலாம். எந்த புயல் அறிவிப்பும் இன்றி இப்படி ஒரு ராட்சத மழையின் பின்னணியில் நாம் இந்த புவிக்கு செய்து கொண்டிருக்கும் பல்வேறு ஆபத்துக்களை பற்றி யோசிக்க வைக்கிறது.

அதற்கு முந்தைய ஆண்டில் இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட கடுமையான மழை பொழிவினால் சாலைகள், கட்டுமானங்கள் சேதமடைந்து அன்றாட வாழ்க்கை பல வாரங்களுக்கு ஸ்தம்பித்தது, சாலை போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அந்த மழைக்கும் காரணம் புவி வெப்ப அதிகரிப்பு என்பது தான் விஞ்ஞானிகளின் கணிப்பு.

இப்படி பனிப் பிரதேசத்தில் வெப்பமயம் காரணமாக பனி உருகிவிடுவதால் அது வெள்ளமாக குடியிருப்பு பகுதிகளை தான் சென்றடையும்! வெப்பமயம் காரணமாக கடல் நீரும் ஆவியாக மாறி மேகமாக நகர்ந்து குளிர் காற்றுள்ள பகுதியில் கடும் மழைப் பொழிவைத் தரும்.

இந்த நிகழ்வுகளால் தான் கடந்த ஆண்டு கேரளாவில் அதீத மழையைக் கண்டது. அதன் காரணமாகப் பல்வேறு பின் விளைவுகளை கேரள மாநிலம் சந்தித்து வருகிறது.

இப்படி பாதுகாப்பான பகுதியாக நம்பப்படும் தென்னிந்தியாவில் மழை சேதம் அதிகரிப்பதும் வட பகுதிகளில் வெப்ப மயம் அதிகரிப்பதையும் புரிந்துகொண்டு எல்லா மாநிலங்களும் கூட்டாக பாரீஸ் ஒப்பந்தத்திற்கு இணையான முன்மாதிரி செயல் திட்டத்தை மேற்கொண்டு இப்பிரச்சினையை அணுகிட வேண்டும்.

வரும் ஜனவரியில் தனது 18–வது வயதை எட்ட இருக்கும் சிறுமி கிரேட்டா துன்பர்க் செய்து வரும் விழிப்புணர்வு பிரச்சாரம் பல தலைவர்களுக்கு தலைவலியாக இருந்தாலும் வரும் காலத்தில் நமது பூமி வாழத் தக்கதாக இருக்க என்ன செய்யப்போகிறோம்? என்று யோசிக்கத்தான் வைக்கிறது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா வரவேற்று கையொப்பம் போட்டார். ஆனால் சில வாரத்தில் பதவிக்கு வந்த தற்போது தேர்தலில் தோற்றுவிட்ட இன்றைய ட்ரம்ப்போ இது இதர நாடுகளின் கூட்டு சதி, பருவநிலை பாதிப்பை சந்திக்க எந்த ஒப்பந்தமும் தேவையில்லை என்றார்.

அவரது விளக்கம் நிறுவனம் நடத்துபவர் தங்களது லாபத்தை ஏன் உலக பருவ நிலை சீராக முதலீடு செய்ய வேண்டும்?

அமெரிக்க தொழில்துறை மாசு தூசு வெளியிடுவதில் முன்னணியில் இருக்கிறார்கள். வசதி படைத்த தொழில் முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை வழங்கி உலகெங்கும் உள்ள பல்வேறு தொழிற்சாலைகள், வாகன கரும் புகையை கட்டுப்படுத்த முதலீடு செய்தால் நல்லது என்பது தான் பாரீஸ் ஒப்பந்தத்தின் சாராம்சம் ஆகும்.

இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்திற்கும் சீனா போன்ற பெரும் ஜனத்தொகையை கொண்ட நாடுகளுக்கும் இந்த ஒப்பந்தத்தில் சில சலுகைகள் இருக்கிறது. அதைக்கண்ட ட்ரம்ப் எரிச்சல் அடைந்து அமெரிக்க பணக்காரர்கள் ஏன் ஆசியாவில் உள்ளவர்களுக்கு உதவவேண்டும்? என்று கேட்டபடியே பாரீஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்து வெளியேறினார்.

தேர்தலில் தோற்ற நாளில்தான் பாரீஸ் ஒப்பந்த ரத்தாகும். இறுதி நாளும் வந்ததால் அதிகாரப்பூர்வ செய்தியாக மாறியது.

ஒபாமா ஜனாதிபதியாக இருந்த 8 ஆண்டுகளுக்கும் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பிடன் தற்போது ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டு விட்ட அதிகாரப்பூர்வ செய்தி வெளி வர ஆரம்பித்தவுடன் அவர் தந்த முதல் உறுதி ‘பாரீஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகாது’ என்பது தான்.

ஜனவரி 2021ல் 20ந் தேதி பதவி எடுத்தவுடன் அவர் இது சம்பந்தமான சட்டத்தையும் அறிவிக்கப் போவதாகவும் கூறிவிட்டார்.

அமெரிக்காவின் நிலைப்பாடு மாற்றத்தை தொடர்ந்து ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் 2050–க்குள் கரும்புகை வெளியேற்றத்தை முற்றிலும் நிறுத்த அதாவது ‘Zero Emission’ கொள்கையை அறிவித்து விட்டனர்.

ரஷ்யாவும் சீனாவும் கூட நமது புவிக்கு ஏற்பட்டுவிட்ட பருவநிலை சீர்கேடுகளை உணர்ந்து பருவநிலை மாற்றத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க உறுதி தந்து வருகிறார்கள்.

இவையெல்லாம் நல்ல செய்தி தான்! ஆனால் கிரேட்டா கூறுவது சற்று அதிர்ச்சியைத் தரும்! அவர் சுட்டிக் காட்டுவது 2050ல் கரும்புகையை கட்டுப்படுத்துவோம் என்று கூறிவிட்டால் போதுமா? இன்று என்ன செய்யப் போகிறீர்கள்?

அதாவது ‘ சும்மா ‘ தங்களது கடமைகளை தள்ளிப்போட இப்படி கண் துடைப்பு நாடகமாக 2050 என்று ஒரு உத்திரவாதம் தருவது சரியில்லை. இன்றைய சிக்கல் உண்மையானது என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். அந்த நிதர்சனத்தை போராட ஆராய்ச்சிகளில், விழிப்புணர்வு பிரச்சாரங்களில் முதலீடுகள் செய்ய துவங்குங்கள், அதை இன்றே செய்தால்தானே 2050–ல் நல்ல தீர்வு கிடைத்து வருங்கால சந்ததியர்கள் வாழ இந்த பூமி ஏற்றதாக இருக்கும்.

கிரேட்டா சுட்டிக்காட்டுவது சரி என்று தான் தோன்றுகிறது. கடந்த 100 ஆண்டுகளில் எந்த விழிப்புணர்வும் இன்றி இந்த பூமியை வாழ தகுதியற்றதாக மாற்றி வருகிறோம். எல்லாம் ஓரளவு புரிய ஆரம்பித்த பிறகும் நாம் மெத்தனமாக இருந்தால் நமக்கு இருப்பதோ ‘ ஒரு பூமி ‘ அதை இழந்து விட்டால் மனிதன் வாழ இடம் ஏது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *