செய்திகள் முழு தகவல்

வாழ்க்கை, அரசியல் சூழல்களை கையாண்ட பின்லாந்தின் இளம் பிரதமர் சன்னா மரின்!

தன்னோடு சமூகத்தை ஒப்பிட்டு நோக்கியதால் உச்சம் தொட்டவர்

11 மார்ச் 2020 அன்று தான், உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸை பெரும்தொற்று நோயாக அறிவித்தது. ஆனால் வைரஸ் வந்ததில் இருந்தே, சன்னா மரினின் அமைச்சரவை தயாராக இருந்தார்கள். 16 மார்ச் 2020 அன்று, பின்லாந்து வெறுமனே லாக்டவுனில் இல்லை, ‘Emergency Powers Act’ என்கிற அவசர கால அதிகாரங்கள் சட்டம் அமலில் இருந்தது.

இந்த சட்டம் இரண்டாம் உலகப் போரின் போது கடைசியாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த திட்டம் அமலாக்கப்பட்டதை ஊடகங்கள் எதிர்த்த நிலையில் 85 சதவீத மக்கள் ஆதரித்ததாகச் சொல்கிறது வக்கெடுப்புகள். பின்லாந்து மக்களுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டு இருந்தது. வீட்டிலேயே தங்கி இருங்கள். மெலிதாக கொரோனா அறிகுறி இருப்பவர்கள் கூட, தங்களை சோதித்துக் கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டார்கள்.

370 பேர் மட்டுமே மரணம்

சோதனை ஆய்வகங்கள், மருத்துவர்கள் மற்றும் க்ளீனிக்குகள் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பை வழங்கிக் கொள்ள திட்டமிட, தொடர்ந்து ஆன்லைன் கூட்டங்கள் நடத்தப்பட்டன. சன்னா மரின் மற்றும் அவரது கேபினெட்டைச் சேர்ந்த 4 முக்கிய பெண் அமைச்சர்கள், வாராந்திர கொரோனா விவரங்களைக் கொடுத்தார்கள். மக்கள் மற்றும் ஊடகங்களிடம் இருந்தும் கேள்விகளைப் பெற்றுக் கொண்டார்கள். குழந்தைகளிடம் இருந்து கேள்விகளைப் பெற தனியாக ஒருவரை நியமித்தார்கள்.

பெண் தலைவர்கள், நெருக்கடியான காலங்களை சிறப்பாகக் கையாள்கிறார்களா என்கிற கேள்வியும் எழுப்பப்பட்டது. தைவான், ஜெர்மனி, நியூசிலாந்து போன்ற நாட்டுத் தலைவர்களோடு சன்னா மரின் ஒப்பிடப்பட்டு பாராட்டப்பட்டார். 55 லட்சம் மக்களைக் கொண்ட பின்லாந்தில், 370-க்கு கொஞ்சம் அதிகமான மரணங்கள் மட்டுமே நிகழ்ந்தன. அதாவது 10 லட்சம் பேரில் சுமாராக 60 பேர் இறந்தனர். ஆனால் பிரிட்டனின் இறப்பு விகிதம், இதைவிட 10 மடங்கு அதிகம். இதுதான் சென்னா மரினின் நிர்வாகத் திறன்.

எளிய குடும்பப் பின்னணி

ஆனால், வசதியான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரல்ல என்பதுடன், அரசியல் பற்றி எல்லாம் நினைக்க கூட வாய்ப்பில்லாத குடும்பத்தில், ஏழ்மையான சூழலில் பிறந்து வளர்ந்த சன்னா மரின் பின்லாந்து நாட்டின் இளவயது பிரதமராக ஆவோம் என்றோ, 5 கட்சி கூட்டணிகள் அடங்கிய பெண் அமைச்சரவையை வழிநடத்துவோம் என்றோ கனவிலும் எண்ணி இருக்க முடியாதுதானே.

ஆம், அவரே கூறுவதுபோல, பல பின்லாந்து குடும்பங்களைப் போல, என் குடும்பமும் பல சோகக் கதைகளால் நிறைந்தது என்கிறார் சன்னா மரின். தன் அம்மா மற்றும் தன் அம்மாவின் தோழியால், பிர்க்கலா என்கிற சிறிய நகரத்தில், வளர்க்கப்பட்ட சன்னா மரின் குடும்பத்தில் எப்போதும் நிதி நெருக்கடி இருந்து கொண்டே இருக்குமாம்.

சன்னா மரினின் தாயார், தன் குடிகாரக் கணவை விவாகரத்து செய்த பின், மிகச் சிறிய வயதில் இருந்தே, தன் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள, சில்லறை வேலைகளைச் செய்து வந்த அவர், ஒரு சராசரி மாணவராகதான் இருந்துள்ளார். எதிர்காலத்தில், கெசராண்டாவில் தன் கணவரோடும், தன் இரண்டு வயது மகள் எம்மாவோடும் வாழ்வோம் என தன் பதின் பருவ காலத்தில், சன்னா மரின் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.

அரசியலும், அரசியல்வாதிகளும் வெகு தொலைவில் இருந்ததாகவே தெரிந்தது. நான் வாழ்ந்த உலகம் முற்றிலும் வேறுபட்டது என்று நினைவு கூர்ந்துள்ளார். சன்னா மரினுக்கு சுமாராக 20 வயதுகளில் தான், அரசியல் குறித்து விழிப்புணர்வு வருகிறது. மரின் அரசியலைப் பற்றிச் சிந்திக்கும் போது, தன்னை மட்டும் மேம்படுத்திக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி இருப்பவர்களின் சூழலையும் மேம்படுத்த முடியும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது.

சமத்துவ திட்டம்

இதுதான் சன்னா மரின் அரசின், சமத்துவ திட்டம் (Equality Programme) கருக்கொண்டு வெளியானதன் நோக்கம். பொறுப்புகளை சமமாகப் பகிர்ந்து கொள்ள பெற்றோரை ஊக்குவிக்கும் கொள்கைகள், வீட்டுக்குள் நடக்கும் வன்முறைகளைக் குறைப்பது, பாலின ஊதிய இடைவெளியை சரி செய்வது மற்றும் ஏழை பின்னணியிலிருந்தும் புலம்பெயர்ந்த குடும்பங்களிலிருந்தும் குழந்தைகளுக்கான கல்வியை மேம்படுத்துவது என பலதும் இந்த சமத்துவ திட்டத்தில் அடக்கம்.

நாங்கள் பின்லாந்தில் சில விஷயங்களைக் கற்றுக் கொண்டோம். விஞ்ஞானிகள் சொல்வதைக் காது கொடுத்து கேட்பது மற்றும் அவர்களின் அறிவை முழுமையாகப் பயன்படுத்துவது, நிலையற்ற சூழல் நிலவும் போது, தைரியமாக முடிவுகளை எடுப்பது. இவைகள் எல்லாமே முக்கியம் என நான் கருதுகிறேன் என்கிறார் சன்னா மரின்.

அவசர கால அதிகாரங்கள் சட்டம் எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே, ஜூன் மாதத்திலேயே பின்வாங்கப்பட்டது. ஆனால் கூட்டணி மற்றொரு அதிர்ச்சியைச் சந்தித்தது. சன்னா மரினின் கேபினெட்டிலேயே இளம் வயது கூட்டணி தலைவர்களில் ஒருவரான கத்ரி குல்முனி, ஒரு செலவீன ஊழலில் பதவி விலகினார். கடந்த செப்டம்பர் மாதம் அவருக்கு பதிலாக அனிகா சாரிகோ என்பவர் மாற்றப்பட்டார்.

சன்னாவின் சிந்தனைப் போக்கு

சில நேரங்களில், இது போன்ற பதற்றமான சூழல்கள் வரும், அதை சரி செய்ய, தனியாக அமர்ந்து சில சமாதானங்களைச் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு பெண் என்பதால், நீங்கள் ஒரு குறிப்பிட்ட கொள்கையை உருவாக்குகிறீர்கள், அல்லது நீங்கள் எல்லோரும் பெண்களாக இருப்பதால் ஒப்புக்கொள்வது எளிதானதாக இருக்கிறது என்பது போல, சிலர் சொல்லும் போக்கு இருக்கிறது. அது நிச்சயமாக அப்படி அல்ல என்கிறார் சன்னா மரின்.

திருநங்கைகளை, பெண்களாகக் கருதுகிறாரா? சன்னா மரின் என்பதற்கு, மக்களை அடையாளம் காண்பது என் வேலை அல்ல என உறுதியாகக் கூறுகிறார். தங்களை அடையாளப்படுத்திக் கொள்வது, அனைவரின் பொறுப்பு. நான் சொல்வதற்கு, அது என் இடம் அல்ல என்று கூறியது அவருடைய பண்பட்ட மனநிலையை காட்டுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த முறை, கூட்டணியில் இருக்கும் ஐந்து இடதுசாரி கட்சிகளும், சீர்திருத்தத்துக்கு ஆதரவாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சமத்துவ திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் வைக்கப்பட உள்ளது. பின்லாந்தில் எப்போதும் கூட்டணி ஆட்சி தான். எனவே நாங்கள் சில சமாதானங்களைச் செய்ய முயற்சிப்போம். அதன் பின் பல்வேறு கட்சிகள் மற்றும் தத்துவங்களில் அனைத்து தரப்பிலும் ஒருமித்த கருத்துக்களைக் கண்டு பிடிக்க முயற்சிப்போம் என்கிறார் சன்னா மரின். இது தான் பலம் என்று நான் நினைக்கிறேன் என்கிறார்.

விமர்சனங்களும் தீர்வுகளும்

ஆனால், இங்கு விமர்சனங்களும் இருக்கின்றன. உலகில் கறுப்பின மக்கள் உயிர் முக்கியம் எனும் போராட்டங்கள் நடந்த போது, இந்த சமத்துவத் திட்டம் நிறத்தால் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை அங்கீகரிக்கவில்லை என, பின்லாந்தில் வாழும் கறுப்பர்கள் சில சமூக வலைதளங்களில் சுட்டிக் காட்டினார்கள்.

இதுகுறித்த கூறும்போது, எங்கள் பின்னணிகள், இப்போதும் தொடர்ந்து வாழ்க்கையில் நம்மிடம் உள்ள சாத்தியங்களை பாதிக்கின்றன. அது அப்படி இருக்கக்கூடாது என்பதுடன், இது அனைத்து பின்லாந்து மக்களின் வேலை. அதோடு, சமத்துவத் திட்டம், இன ரீதியில் மைனாரிட்டியாக இருப்பவர்களின் நிலையை மேம்படுத்தும். இதனை எப்படி சாத்தியப்படுத்துவது என்பதில் தான் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். அது தான் பிரதமராக என் நோக்கம் என்கிறார் சன்னா மரின்.

பொதுவாக, தன் வாழ்விலிருந்தும் உடன் வாழும் சமூகத்தினரிடமிருந்தும் கற்றுக்கொண்டு, மக்களை மேம்படுத்துவதுதானே அரசியல். அந்த வகையில் தனக்கான தடைகளையே படிகளாக்கிக் கொண்டதால்தானே சன்னா மரின் உயரப் பறக்கிறார். பிபிசி வெளியிட்டு இருக்கும், 2020-ம் ஆண்டின் ஆளுமைமிக்க பெண்கள் பட்டியலில், சன்னா மரினும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மா. இளஞ்செழியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *