செய்திகள்

சங்கரநேத்ராலயா நிறுவனர் எஸ்.எஸ்.பத்ரிநாத் 80–வது பிறந்த நாள் விழா

சென்னை, பிப். 27–

சங்கரநேத்ராலயா கண் மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத்தின் 80வது பிறந்த நாளையொட்டி, இந்த மருத்துவமனையில் ஏழைகளுக்கு 103 கண் புரை நோய் ஆபரேஷன் இலவசமாக செய்யப்பட்டது. நாளை (28–ந் தேதி) நீரிழிவு நோயினால் விழித்திரை பாதிப்பு கண்டறியும் இலவச பரிசோதனை முகாம் டாக்டர் ராஜிவ் ராமன் தலைமையில் பைகிராப்ட்ஸ் கார்டன் தெருவில் உள்ள கண் மருத்துவமனையில் நடத்தப்படுகிறது.

சதாபிஷேகம் கொண்டாடும் டாக்டர் எஸ்.எஸ்.பத்ரிநாத் 1940–ம் ஆண்டில் பிப்ரவரி 24–ந் தேதி திருவல்லிக்கேணியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்து, படிப்பில் சிறந்து விளங்கினார். இவர் மயிலாப்பூர் பி.எஸ்.பள்ளி, தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளி, லயோலா பள்ளி கல்லூரி, மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியில் படித்தார். கண் சிகிச்சை படிப்பில் அதிக மார்க் வாங்கி தேர்வு செய்தார்.

அமெரிக்காவில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கண் சிகிச்சை துறையில் மேல்படிப்பு படித்தார். புருக்ளின், பாஸ்டன் கண் மருத்துவமனையில் தேர்வு பெற்றார்.

1967–ம் ஆண்டில் நியூயார்க் புருக்ளின் மருத்துவமனையில் பணியாற்றும் குழந்தை மருத்துவர் டாக்டர் வசந்தியை திருமணம் புரிந்தார்.

1970–ம் ஆண்டில் இந்தியாவுக்கு திரும்பினர். 6 ஆண்டுகள் அடையார் வாலண்டரி ஹெல்த் சர்வீஸ் மருத்துவமனையில் பணியாற்றினார்.

ஆழ்வார்பேட்டை எச்.எம். மருத்துவமனை, விஜயா மருத்துவமனைகளில் பலருக்கு அபூர்வ கண் ஆபரேஷன் செய்தார். மகா பெரியவர் காஞ்சி சந்திரசேகரேந்திர சங்கராச்சாரியார் சுவாமிகளுக்கு சேவை புரியும் வாய்ப்பை பெற்றார்.

1975–ம் ஆண்டில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் சுவாமிகளின் ஆசியுடன் கண் மருத்துவமனையை நிறுவினர்.

1978–ம் ஆண்டில் கண் ஆராய்ச்சி பிரிவு துவக்கினார். தொண்டு அமைப்பாக இது செயல்பட்டு வருகிறது. அடுத்த 24 ஆண்டுகளில் இடைவிடாத உழைப்பு, ஆராய்ச்சி, சமூக தொண்டு மூலம் பலருக்கு கண் பார்வை கிடைக்கச் செய்தார்.

சிக்கன கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை, கண் மருத்துவர், ஊழியர்களுக்கு தரமான பயிற்சி வழங்குதல், கண் ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் என தாரக மந்திரத்துடன் சங்கரநேத்ராலயாவை உலக அளவில் முன்னணி கண் மருத்துவமனை என்ற அங்கீகாரம் பெற வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *