செய்திகள்

18 மாநிலங்களின் 90 கைவினைக் கலைஞர்களின் உற்பத்தி பொருட்கள் – விற்பனைக் கண்காட்சி

Spread the love

சென்னை, அக். 16–

சென்னை திருவான்மியூர் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனின் சம்பூர்ண ‘‘சந்தே’’ (சந்தை) என்னும் பெயரில் கைவினைப்பொருட்கள் மற்றும் ஜவுளி கண்காட்சி நடைபெற்று வருகிறது. இம்மாதம் 20ஆம் தேதி வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 18 மாநிலங்களைச் சேர்ந்த 90 கைவினைக் கலைஞர்கள் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை காட்சிக்கு வைத்து, விற்பனை செய்து வருகிறார்கள்.

நம்முடைய உயர்ந்த பாரம்பரியம் மற்றும் கலை கலாச்சார பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் கைவினைப் பொருட்களை தயாரித்து இங்கு காட்சிக்கு வைத்து விற்பனை செய்து வருகிறார்கள். மதுபானி பெயிண்டிங், காகித கைவினைப் பொருட்கள், எம்பிராய்டரி ஆடைகள், கைவினை வேலைப்பாடுகளுடன் கூடிய நகைகள், லம்பானி பழங்குடியினர் கை வேலைப்பாட்டுடன் கூடிய பொருட்கள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வயிற்றுக்கும் விருந்து படைக்க பாரம்பரிய உணவுப் பொருட்களும் இங்கு விற்பனைக்கு உள்ளது. அதோடு கண்களுக்கு விருந்தாக பல்வேறு மாநிலங்களின் நாட்டிய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் கலைஞர்களின் பழங்குடிவாசிகளின் கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சி மற்றும் விற்பனை 20 ஆம் தேதி வரை நடைபெறும். காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கண்காட்சி திறந்திருக்கும். அனுமதி இலவசம். கார் பார்க்கிங் இலவசம்.

இப்படி நடத்தப்படும் சம்பூர்ணம் சந்தை ஒன்பதாவது கண்காட்சி இதுவாகும். இதேபோல கண்காட்சி பெங்களூர், மும்பை, புனே, கோயம்புத்தூர் மற்றும் ஐதராபாத் நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

உள்நாட்டில் தயாராகும் ஜவுளிகள் மற்றும் விசேஷ தொழில்நுட்ப அறிவுடன் கூடிய விசேஷ வடிவ அமைப்புகளுடன் உருவாக்கப்பட்ட ஆடைகள், பொம்மைகள், தோல் பொருட்கள், மண்பாண்டங்கள், ஓவியங்கள் மற்றும் வீட்டு உபயோகத்திற்கு தேவையான பொருட்கள் ஆகியவை ஒரே இடத்தில் இங்கு விற்பனைக்கு கிடைக்கும்.

நெசவாளர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி

துஸார், சந்தேரி ஆடைகள், தென்னிந்திய பருத்தி ஆடைகள், கதராடைகள், கச்சி, ராஜஸ்தானி பட்டு, கலம்காரி, அகோலா, காஞ்சிபுரம் பிரின்ட், கோட்டா – டோரா, சிபோரி வேலைப்பாடுடன் கூடிய ஆடைகள் ஆகியவை இங்கு காட்சியில் வைக்கப்பட்டுள்ளன.

கை எம்பிராய்டரியால் உருவாக்கப்பட்ட ஆடைகள் கர்நாடகா மற்றும் சிட்டிங்கி பள்ளத்தாக்கு பகுதி மக்களின் கை வேலைப்பாடு பொருட்கள், ஒடிசா கைவினைப் பொருட்கள், டெரகோட்டா பொருட்கள் மற்றும் விதவிதமான கண்கவர் உலோக பொருட்கள், நகை ஆகியவையும் பெருமளவில் காட்சிக்கும் – விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்கானிக் பொருட்களும் இங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. என்ஐடி (NID) டிசைனர்கள்– ரோனக் மற்றும் அடுல் ஷா ஆகியோரின் கைவேலைப்பாட்டுப் பொருட்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. சிக்கந்தர் கத்தரி கைவினை திறமையில் உருவான வெஜிடபிள் டையில் அஜித் ராக் ஆடைகளும் காட்சிக்கு உள்ளன.

என்ஜிஓ அமைப்பைச் சேர்ந்தவர்களும், மகளிர் சுய உதவி குழுவினரும் தங்கள் கைவினைப் பொருட்களை இந்தக் சந்தையில் காட்சிக்கு வைத்திருக்கிறார்கள். கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்படுத்துவதற்காக இந்த சம்பூர்ண சந்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *