சிறுகதை

சம்புலு | ராஜா செல்லமுத்து

Spread the love

‘‘டிங்.. டிங்..’’ கோயில் மணிச்சத்தம் கேட்டது.

பூசை செய்யும் பூசாரிகளின் மந்திரங்கள் வெளியில் வர கற்பூரமும் சந்தனமும் காற்றில் பரவ தெய்வீக மணம் வீசியது.

கோவிலின் ஓரத்தில் சின்னதாய் இருந்தது சம்புலுவின் செருப்புத் தைக்கும் கடை. அவன் தாத்தா பின் அவன் அப்பா என்று ஆரம்பித்த இந்தச் செருப்புத்தைக்கும் தொழில் இப்போது மகன் சம்புலுவிடமும் தொடர்ந்தது.

கோவிலில் பூசை செய்யும் பூசாரிகளின் வாரிசு கூட சம்புலுவைப் போல தாத்தா, அப்பா என்று மாறி மாறி இப்போது கோயிலின் கருவறையில் பேரன் பணியில் இருந்தார்.

கோயிலின் அருகில் இருந்த செருப்புத்தைக்கும் கடையே சில நேரங்களில் சம்புலுவின் இருப்பிடமாகவும் இருக்கும்.

இரவு நேரங்களில் அங்கேயே தூங்கி விடுவார் சம்புலு.

அன்று வேலை ஏதும் இல்லாததால் எதற்கும் உதவாத யாருக்கும் பயன்படாத செருப்புகளை அடுக்கி வைத்து அதை மேலும் அடுக்கிக்கொண்டும் அழகு பார்த்துக்கொண்டிருந்தார் சம்புலு.

‘‘ஏய்.. ஏய்.. இந்தச் செருப்பப்பாரு..’’ என்ற அதிகாரத் தொனியில் ஒரு குரல் கேட்டது. சம்புலு நிமிர்ந்து பார்த்தார்.

‘‘செருப்பு பிஞ்சு போச்சு..என்னன்னு பாரு..’’ என்று தன் இடது கால்ச் செருப்பை ரொம்பவே அலட்சியமாக சம்புலுவின் முன்னால் உருவி விட்டார் ஒரு பெரிய மனிதர்.

அவர் உடுத்தியிருக்கும் உடையே அவரின் செருக்கைச் சொன்னது. அவர் செருப்பைக் கழற்றி விடும் தோரணையே இவர் பிறரை மதிக்காத மனிதர் என்று காட்டியது. அவரின் இந்த அலட்சியத்தைப் பார்த்த சம்புலு அவர் கால்களாலே கழற்றி விட்டு கையில் தொட மறுத்த அவரின் செருப்புகளை சம்புலு தன் இரண்டு கைகளிலும் தொட்டு எடுத்து அதை மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார்.

‘நல்ல செருப்பு..’ என்று தனக்குத்தானே பேசிக்கொண்டு இடது பக்க நாக்கை கொஞ்சம் கடித்தபடியே கூரிய கண்கள் அகல விரிய தன் முழு பலத்தையும் ஒரு சேரச் சேர்த்து வைத்து ‘பொதக்’ என பிய்ந்த செருப்பில் ஊசியை இறக்கினார். இறங்கிய ஊசியின் வழியே நுழைந்த நூலில் மெழுகைத் தடவித் தடவி மேலும் மேலும் ஊசியைக் குத்தி பிய்ந்து போன செருப்பைத் தைத்துக் கொண்டே பேசினார்.

‘‘ஐயா.. செருப்பு நல்ல வெல இருக்கும் போல..’’ என்றார் சம்புலு.

‘‘ஆமாமா..’’என்று தன் அலட்சியப்பதிலையே பதிலாகத் தந்தார் அந்தப் பெரிய மனிதர்.

அவருடன் பேசுவதோ அவருக்குப் பதில் சொல்வதோ அவருக்குப் பெரிய இழுக்காக இருப்பதாக நினைத்தார். மேலும் அந்த இடத்தில் நிற்கவே அவருக்கு ரொம்பவே அறுவெறுப்பாக இருப்பதாகவே உணர்ந்தார். அவரின் பதிலுக்குக் காத்திருக்காத சம்புலு அவருடன் பேசியபடியே செருப்பில் இறக்கிய ஊசியை மேலும் கீழுமென தைத்துக் கொண்டிருந்தார்.

‘‘சாமி.. நல்ல செருப்பு போல சாமி.. தோல் செருப்பு போல.. என் ஊசி கூட எறங்க மாட்டேங்குது..என் முழு பலமும் கொண்டு குத்துறேன். உள்ளேயே எறங்க மாட்டேங்குது. நல்ல தோலா இருக்கும் போல.. நிறைய விலை இருக்கும் ..’’ என்று செருப்பைத் தைத்துக் கொண்டிருந்த சம்புலு அந்த பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்கும் அவர் பதில் சொல்லவில்லை. இரண்டு பக்கமும் பிய்ந்து போன செருப்பு சம்புலுவின் ஊசிக்குத்தலில் ஒன்று சேர்ந்தது.

‘‘ஐயா.. செருப்ப தச்சாச்சு.. – பாலிசு போடவா..?’’ என்று கேட்டார்.

‘‘ம்ம்.. போடு..- போடு..’’ என்ற படியே சம்புலுவைப் பார்க்காமலேயே பதில் சொன்னார்.

‘‘அந்தச் செருப்பையும் குடுங்க; ரெண்டுக்கும் சேத்தே பாலிசு போட்டுருவோம்..’’ என்று சம்புலு சொன்னார். இன்னொரு கால் செருப்பையும் முன்னை விட ரொம்ப அலட்சியமாகவே சம்புலுவின் முன்னால் கழட்டி காலால் தள்ளிவிட்டார். அந்தப் பெரியவர். அந்தச் செருப்பையும் தன் கை கொண்டு எடுத்த சம்புலு இரண்டு செருப்புகளையும் ஒரு சேரப் பார்த்தார். இரண்டு செருப்பில் ஒன்றைத் தன் கைகளுக்குள் மாட்டிக்கொண்டு

அதே கருப்பு நிறப் பாலிஷை எடுத்து அதை பிரஸின் ஓரம் தடவி இடது கையில் செருப்பை மாட்டிக் கொண்டு பர்.. பர்.. என சூடு வரும் வரை தேய்த்தார் சம்புலு.

‘எப்படா.. இவன் முடிப்பான்.. எப்படா இந்த இடத்தை விட்டுக் கிளம்புவோம்..’ என்ற யோசனையில் நின்றிருந்தார் அந்தப் பெரியவர்.

சம்புலு தன் கையிலிருந்த பிரஸில் தேய்க்கத் தேய்க்க கருப்பு நிறச் செருப்பு மேலும் கருப்பாய் மெருகேறியது.

‘‘எவ்வளவு..?’’ அந்தப் பெரியவரின் அலட்சியம் மேலும் கூடியது அதில் அதிகாரத் தொனி கொஞ்சம் தூக்கலாய் இருந்தது.

‘‘செருப்புத் தைக்க.. இருவது ரூவா..பாலிசுக்கு முப்பது ரூவா மொத்தம் அம்பது ரூவா குடுங்க..’’ என்று சம்புலு கேட்டார். அப்போது

‘‘என்ன அம்பது ரூவாயா..? இது அநியாயம்.. தைக்க அஞ்சு ரூவா..பாலிசுக்கு பத்து ரூவா.. மொத்தம் பதினஞ்சு ரூவா தான் தருவேன்..’’என்று அடம் பிடித்துக் கொண்டிருந்தார் அந்தப் பெரியவர்.

அப்போது மூன்று பள்ளிக் குழந்தைகள் சம்புலுவிடம் வர பாலிஷ் படிந்த தன் கைகளை கீழே கிடந்த துணியை எடுத்துத் துடைத்த சம்புலு காலையிலிருந்து செருப்புத் தைத்துச் சேர்த்து வைத்த பணத்தை அப்படியே அள்ளியெடுத்துக் குழந்தைகளின் கையில் கொடுத்தார் சம்புலு.

‘‘ஐயா..இவ்வளவு பணம்.. எங்களுக்கு வேணாம்..கொஞ்சம் போதும்..’’ என்று சொன்ன குழந்தைகளிடம்

‘‘உங்களுக்குச் செலவுக்குப் போனது போக.. மிச்சத்த ஒங்கள மாதிரி இருக்கிற புள்ளைங்களுக்குக் குடுங்க..’’என்று சம்புலு சொன்ன போது பேரம் பேசிக் கொண்டிருந்த பெரியவர் திரு திரு வென விழித்தார்.

‘‘ஐயா.. எங்களுக்கு திருநீறு வச்சு விடுங்க..’’ என்று அந்தக் குழந்தைகள் சொல்லிக்கொண்டே உட்கார்ந்திருந்த சம்புலுவின் உயரத்திற்குக் குனிந்து உட்கார அருகிலிருந்த டப்பாவிலிருந்து திருநீறை எடுத்துக் குழந்தைகளின் நெற்றியில் பூசிவிட்டார் சம்புலு.

‘‘என்னடா இது..! கோயில் பக்கத்துல இருக்கு.. அங்க போகாம இந்த செருப்புத் தைக்கிறவருகிட்ட போயி.. திருநீறு வாங்கிட்டு இருக்காங்க..’’ என்றும் அந்தப் பெரியவருக்குக் குழப்பம் மேலிட்டது.

‘‘ஓ.கே.. – ஐயா.. போயிட்டு வாரோம்..’’ என்று சொன்ன குழந்தைகள் சம் புலுவைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துவிட்டுப் போனார்கள்.

அதுவரையில் ஆச்சரியத்தில் நின்று கொண்டிருந்த அந்தப் பெரியவர் இப்போது அதிர்ச்சியில் உறைந்தார்.

‘‘என்ன இது.. இந்த செருப்புத் தைக்கிறவன நாம மனுசனா கூட மதிக்காம நின்னுட்டு இருந்தோம்.. – ஆனா.. இவனுக்கு இவ்வளவு மரியாதையா..?’’ என்று அப்படியே உறைந்து நின்றவரைக் கவனித்த இன்னொருவர்

‘‘ஹலோ.. செருப்பு தச்சிட்டிங்களா..?’’ என்று அந்த பெரியவரிடம் கேட்டார்.

‘‘ம்ம் ..’’- என்று மட்டும் தலையாட்டினர் அந்தப் பெரியவர்.

‘‘அப்ப கொஞ்சம் தள்ளிநில்லுங்க.. அடுத்த ஆள் வாராங்க.. என்று வந்தவர் சொன்னார்.

‘‘தம்பி.. ஒன்னு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே..!’’ என்று அந்தப் பெரியவர் சொன்னவரிடம் கேட்டார்.

‘‘சொல்லுங்க..’’ என்றார் அவர், சம்புலு இது எதையும் கவனிக்காமல் அடுத்த செருப்பைக் கையில் எடுத்துக் கொண்டுத் தைக்க ஆரம்பித்திருந்தார். –

‘‘இல்ல.. இப்ப வந்திட்டு போனாங்களே..! குழந்தைங்க இவங்க எல்லாம் யாரு..?’’ என்று கொஞ்சம் தடுமாறியபடியே கேட்டார் அந்தப் பெரியவர்.

‘‘ சம்புலு அண்ணன் இந்த மாதிரி பத்துக் குழந்தைகள எடுத்து வளக்கிறாரு..அவங்களோட படிப்பு, டிரஸ், எல்லாச் செலவும் அண்ணன் தானே கொடுக்கிறாரு. எல்லாம் இந்த செருப்புத் தைக்கிற வருமானத்தில இருந்து தான் இவ்வளவையும் செய்யுறாரு..’’ என்று அவர் சொன்னார்.

‘‘இப்படிப்பட்ட ஆள் கிட்ட போயா.. நாம பேரம் பேசிட்டு இருந்தோம்..’’ என்ற அந்தப் பெரியவரின் கன்னங்களில் பளார்.. பளார்.. என அறைவது போல் இருந்தது.

இது எதையும் பெரிது படுத்தாமல் ‘பொதக்.. பொதக்..’ என ஊசியைச் செருப்பில் குத்தித் தைத்துக் கொண்டிருந்தார் சம்புலு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *