செய்திகள்

ஆர்.கே. நகர் தொகுதியில் சமத்துவ பொங்கல் விழா கோலாகல கொண்டாட்டம்

Spread the love

சென்னை, ஜன. 16–

வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில், மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் பகுதி தண்டையார்பேட்டையில் அனைத்து மதத்தினரும் பங்கேற்ற சமத்துவ பொங்கல் விழா மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் நேற்று மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இதில் அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் இ.மதுசூதனன், தென் சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் தி.நகர் சத்யா எம்.எல்.ஏ, தென் சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என் ரவி எம்.எல்.ஏ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான டி.ஜி.வெங்கடேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சிகள்

இதில் கிராமிய கலாச்சாரத்துடன் சமத்துவ பொங்கலுக்கான உணர்வு பூர்வமான கலைநயத்துடன் அலங்கார நுழை வாயில் வளைவுகள், மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டு ஒயிலாட்டம், கரகாட்டம், மயிலாட்டம், பொய்கால் குதிரை ஆட்டம், மான் ஆட்டம், மயிலாட்டம், கிராமிய இசை கச்சேரி, மற்றும் ஆடல், பாடல், உறி அடித்தல், தீ பந்தவளையம், நடனம், பாட்டு போட்டி, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது.

அனைத்து சமூகத்தினரும் பங்கேற்கும் வகையில் வரிசை எண், மற்றும் வண்ண, வண்ண, கோலங்கள் போட்டு பூம்பூம் மாடுகளை வரவழைத்து மஞ்சள், மற்றும் கரும்புகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டு, ஆங்காங்கே தென்னை கீற்று குடில்கள் அமைத்து புதுப்பானையில் மஞ்சள் பூசி, மாவிளக்கு இட்டு தித்திக்கும் பொங்கலை கொண்டாடினர்.

கிளி ஜோசியம், கை ரேகை ஜோசியம், பலூன் சூட்டிங், இளநீர் போன்ற பல்வேறு ஸ்டால்கள் அமைக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது. பெண்கள் ஆர்வத்துடன் வண்ண வண்ண கோலங்களை மிக அருமையாக போட்டிருந்தனர்.

விழிப்புணர்வு

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்‘‘மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்’’ என்று மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து கோலப் பொடிகளால் அழகுற எழுதப்பட்டிருந்தது. இதே போன்று ஏராளமான அருமையான வாசகங்கள் எழுதப்பட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியது அனைவரையும் கவர்ந்தது.

பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். பொங்கல் வைப்பதற்கு தேவையான பொங்கல் பானை, அரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை போன்ற அனைத்து பொருட்களும் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் இலவசமாக வழங்கினார். இது தவிர அடுப்பை அமைக்க செங்கல் மற்றும் விறகு, வரட்டி ஆகியவைகளையும் அவர் வழங்கினார்.

குடும்பம் குடும்பமாக

மேலும் ஒவ்வொருவருக்கும் 3 கரும்புகள் வழங்கப்பட்டிருந்தன. பொங்கல் பானை முன்பு அந்த கரும்புகள் அழகுற வைக்கப்பட்டிருந்தன. சாலையின் இரு பக்கமும் நீண்ட தூரத்துக்கு வரிசையாக பொங்கல் பானைகள் வைக்கபப்ட்டு கரும்புகள் வைக்கப்பட்டிருந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கிட்டத்தட்ட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கரும்புகள் மக்களுக்கு வழங்கபப்ட்டன. குடும்பம் குடும்பமாக புத்தாடை அணிந்து மகிழ்ச்சியுடன் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

செயற்கை யானை ஒன்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது. அனைவரும் அதனை கண்டு ரசித்து செல்பி மற்றும் புகைப்படும் எடுத்து கொண்டனர். 20க்கும் மேற்பட்ட பசுமாடுகளும் கொண்டு வரப்பட்டு அங்கு கட்டப்பட்டிருந்தது. அனைவரும் பசுமாடுகளுக்கு பழம், அகத்தி கீரை போன்றவைகளை வழங்கி வணங்கினார்கள்.

பரிசுகள்

முதலில் பொங்கிய பொங்கல் பானைகளை ஆர்.எஸ்.ராஜேஷ், பார்வையிட்டு முதல் பரிசு ரூ.10-ஆயிரம், இரண்டாவது பரிசு ரூ 5-ஆயிரம், 3-ம் பரிசு ரூ 3 ஆயிரம், உறி அடித்தல் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு 5-ஆயிரம் ரூபாய் என பரிசுகளை வழங்கினார்.

ஆர்.எஸ். ராஜேஷ்

விழாவில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ் கூறியதாவது:

கழக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஆகியோரது வழிகாட்டுதலின்படி தமிழர்களின் பாரம்பரிய முதன்மை பண்டிகையாக கருதப்படும் தை பொங்கல் விழா வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட ஆர்.கே.நகரில் இன்று அனைத்து சமூகத்தினரும் பொதுமக்களும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அண்ணா தி.மு.க. வினரும் திரளாக கலந்து கொண்டு இந்த சமத்துவ பொங்கலை விழா கொண்டாடப்பட்டது.

குறிப்பாக ஆர்.கே.நகரில் இந்த சமத்துவ பொங்கல் விழா கொண்டாடுவதற்கு முக்கிய காரணம் மறைந்த தமிழக முதலமைச்சர் அம்மாவின் தொகுதி மட்டும் அல்ல, கடைசி கட்டத்தில் அம்மாவின் ஆன்மா இங்கு தான் உள்ளது. அவரது நல்லாசியுடன் முதல்வர், துணை முதல்வர், தலைமையிலான நல்லாட்சி இன்னும் நூறாண்டுகள் நடைபெறும்.

கடந்த ஆண்டும் இதேப்போன்று நிகழ்ச்சிகளை நடத்தி மக்கள் மனதில் அண்ணா தி.மு.க. நீங்கா இடம் பெற்றுள்ளது.என்றென்றும் மக்களின் தேவைகளை அறிந்து இப்பகுதியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவது அண்ணா தி.மு.க.தான் என அப்போது தெரிவித்தார்.

2 ஆயிரம் பேருக்கு உணவு

குடிசைமாற்று வாரியம் அடுக்கு மாடி குடியிருப்பான இப்பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மற்றும் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட பெரம்பூர், மற்றும் ஆர்.கே.நகர் பகுதி கழகத்தினர், வட்ட கழக நிர்வாகிகள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், மகளிரணியினர், உள்ளிட்ட அண்ணா தி.மு.க.வினர் பங்கேற்று உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை விழாவையொட்டி 2 ஆயிரம் பேருக்கு சுவையான வெஜிடபுள் சாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.ஜனார்த்தனம், ஜெ.கே.ரமேஷ், ஏ.கணேசன், டிஒய்கே.செந்தில், நாம்கோ சேர்மன் வியாசை எம். இளங்கோவன், முரளி முருகன், மு.வெற்றிவேந்தன், பெரம்பலூர் சேகர் இ.எஸ்.சதீஷ்பாபு, ஆட்டோ தேவராஜ், ஜி.கிருஷ்ணவேணி, மணல் ஜெ.ரவிச்சந்திரன், வி.எஸ்.புருஷோத்தமன், இ.வேலுமேஸ்திரி, சந்தனசிவா, அருண்பிரசாத், இராமமூர்த்தி, ஆர்.நித்தியானந்தம், எல்.எஸ். மகேஷ்குமார், இஎம்எஸ். நிர்மல்குமார், டி.பிரபாகரன், எம்.மாலா, டி.ஷகிலா, மா.வெங்கட்ராமன், டி.பிராங்கிளின், எஸ்பிபி.பிரேம்குமார், பா.இளங்கோவன், மற்றும் மாவட்ட கழகத்தினர், பகுதி கழகத்தினர், வட்ட கழகத்தினர் மகளிரணியினர், உள்பட அண்ணா தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *