விழுப்புரம், ஜன. 13–
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் கல்லூரி செயலர் எஸ்.செந்தில்குமார் அவர்கள் தலைமையுரை வழங்கி பேசுகையில், தமிழர்களின் வரலாற்றையும் சிறப்பையும் போற்றிப் பாதுகாத்து வளர்ப்பதில் கல்லூரி பங்கு அதிகம் உள்ளது. நமது கல்லூரியின் என்ஏஏசி மற்றும் என்ஐஆர்எப் தகுதிகளின் மூலம் மாணவியர்களுக்கு கிடைக்கக்கூடிய சர்வதேச உயர்கல்வி மற்றும் பணி வாய்ப்புகள், நாட்டின் சிறந்த 100 கல்லூரிகளில் ஒன்றாக தெய்வானை அம்மாள் கல்லூரி தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்புலமாக இருந்த ஆசிரியர்களின் உழைப்பு மாணவர்களின் திறமை ஆகியவை பாராட்டுக்குரியது. இன்றைய இளைய தலைமுறை பெண்கள் செய்துவரும் சாதனைகளை போன்று நமது கல்லூரி மாணவியர்களும் வருங்காலத்தில் இத்தகைய சாதனையாளர்களாக உருவாக வேண்டும் என்று கூறினார்.
இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழுமத்தின் பதிவாளர் இ. செளந்தரராஜன் பேசுகையில், பொங்கல் தின விழாவிற்கும் இந்திர விழாவிற்குமான தொடர்பைத் தெளிவுபடுத்தி தமிழர் திருநாளின் வரலாற்றை, உழவின் மேன்மையை தெளிவாக எடுத்துரைத்தார்.
கல்லூரி முதல்வர் எம். பிருந்தா அறிமுகவுரை வழங்கினர். இவ்விழாவில் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையிலும் பல்வேறு போட்டிகளும் நிகழ்வுகளும் நடத்தப்பட்டன. கோலப்போட்டியில், அனைத்துத் துறைசார் மாணவியர்களும் பங்கு பெற்று, தமிழ் மரபினைப் போற்றும் வகையிலும் பற்பல சிறப்புகளைக் காட்சிப்படுத்துகிற விதத்திலும் வண்ணக் கோலங்களை வரைந்தனர். தமிழரின் பண்பாட்டைப் போற்றுகிற வகையில் கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் மற்றும் உறியடி போன்ற கண்கவர் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் கூடிய நடனப்போட்டியில் அனைத்துத்துறை மாணவியர்களும் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும், மாணவியர்களின் மகிழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த உணவு அங்காடிகள், இரங்க ராட்டினம், குடை ராட்டினம் ஆகியவற்றில் மாணவியர்கள் ஆர்வமுடன் பங்கேற்று கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வில் புல முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் மற்றும் மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணிவியர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. மக்கள் தொடர்பு அலுவலர் கே. கண்மணி அன்புச்செல்வி நன்றி கூறினார்.