சிறுகதை

சால்வை | ராஜா செல்லமுத்து

பாலசுப்பிரமணியத்துக்கு மேடையில் வழங்கிய அத்தனை சால்வைகளையும் இன்முகத்தோடு அள்ளிக் காரில் ஏற்றினார் பாலசுப்பிரமணியத்தின் டிரைவர்.

விழா ஆரம்பமானது .இன்னும் கூட பாலசுப்பிரமணியத்துக்கு சால்வை போட ஆட்கள் நின்றிருந்தார்கள்.

வேண்டாமே; ஏற்கனவே நிறைய இருக்குது. எதுக்கு இவ்வளவு? என் மேல நீங்க வச்சிருக்கிற அன்புக்கு ரொம்ப நன்றி என்று பாலசுப்ரமணியம் பேசினார்.

இல்ல சார் .இது உங்களுக்கு நாங்க தர்ற மரியாதை. இதை ஏற்றுக்கொண்டு தான் ஆகணும் என்று ஆட்கள் சொல்ல.

பாலசுப்பிரமணியன் கொஞ்சம் சங்கடப்பட்டார்.

‘‘அதுக்கு இல்லீங்க .பங்க்சன் ஆரம்பிக்க லேட் ஆகுது. சால்வ நிறைய போட்டுக்கிட்டு இருந்தா நல்லா இருக்காது. அதனால தான் சொன்னேன். வேறொன்றுமில்லை’’ என்று பாலசுப்ரமணியம் சொன்னார்.

சார் ,நீங்க சால்வ வாங்குனதுக்கு அப்புறமா விழா நிகழ்ச்சி ஆரம்பிக்கலாம். அவசரம் இல்லை என்று விழாக்குழுவினர் சொல்ல பாலசுப்பிரமணியம் அதை இன்முகத்தோடு ஏற்றுக்கொண்டார்.

ஏற்கனவே வாங்கிய சால்வைகளை எடுத்துக்கொண்டு போய் காரில் ஏற்றிய டிரைவர் மீண்டும் அத்தனை சால்வைகளையும் அள்ளிக்கொண்டு காருக்கு சென்றார்.

நீங்க நினைக்கலாம். இவ்வளவு சால்வையை வாங்கிட்டு போயி நான் பாதி விலைக்கு கடையில விக்கிறாரா ? இல்ல தெரிஞ்சவங்க யாருக்காவது கொடுக்கிறாரா? இல்ல இந்த சால்வை எல்லாம் இவர் என்ன பண்றாரு? அப்படின்னு உங்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படும். கடந்த ஐம்பது ஐம்பத்தைந்து வருஷமா நான் பாடிக்கிட்டு இருக்கேன். 25 வருஷத்துக்கு மேல எனக்கு சால்வை போடுறாங்க. நான் அதை வாங்கிக்கிறேன். ஆனா, அத்தனை சால்வையும் நான் என்ன பண்ண முடியும்? நான் இதை உங்க முன்னால சொல்றது இல்ல கொஞ்சம் கூட வருத்தப்படல . வீட்ல இருக்கிற ஆயிரக்கணக்கான சால்வைகள காரில் ஏற்றிட்டு,பனிக்காலத்தில் நானும் என்று டிரைவரும் வண்டிய எடுத்துட்டு கிளம்புவோம். அப்படி கிளம்பி போகும்போது ரோட்டில படுத்து இருக்கின்ற ஆளுகளுக்கு போர்த்தி விடுவேன். இதைத்தான் ஒரு 12 வருஷமா நான் பண்ணிட்டு இருக்கேன். நீங்க குடுக்குற, அன்பால கொடுக்கிற இத எனக்குத்தான் கொடுக்குறீங்க. ஆனா நான் கஷ்டப்படுறவங்களுக்கு உங்க சார்பா கொடுக்கிறேன். இதுனால, நான் சந்தோஷப்படுறேன் என்று பாலசுப்பிரமணியன் சொன்னபோது கூடியிருந்த கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்து அவரைப் பாராட்டினார்கள்.

நீங்க எனக்கு கொடுக்கிற இந்த சால்வையை எனக்கு அன்பாக கொடுக்குறீங்க . நான் உங்ககிட்ட வாங்குனதை இல்லாதவங்களுக்கு கொடுக்கிறேன். அவ்வளவுதான்.

யாரோ ரோட்டில படுத்து இருக்கிற குளிரில் நடுங்கிகொண்டு இருக்கிற மக்களுக்கு தான் இந்தச் சால்வைகள் போய் சேரும். அப்படிங்கறத சால்வை வழங்கின உங்க முன்னாடி நான் சொல்லிக்கிறதில சந்தோஷப்படுகிறேன் என்று பாலசுப்பிரமணியம் சொன்னபோது ,அந்தக் கூட்டத்தினர் அதிசயித்தனர்.

‘‘என்ன மனுஷன்யா இவரு? அவனவன் சால்வய வாங்கிட்டு போய் பாதி வெலைக்கு விக்கிறான். இல்ல ஏதோ ஒரு ஜன்னலுக்கு எதுக்கோ ஒரு துணியாக போடுறாங்க .ஆனா இவரு இல்லாதவங்களுக்கு கொடுக்குறாரு. இப்படி ஒரு மனசு யாருக்கு வரும் ? ’’என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

பாலசுப்ரமணியம் மேடையில் பாட ஆரம்பித்தார்.

எல்லோரும் நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள். தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்” என்று பாட ஆரம்பித்தார். அன்று சால்வை வாங்காமல் வந்தவர்கள் கூட அடுத்த முறை சால்வை வாங்கி வரவேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டனர். ஒரு சிலர் தன் நண்பர்களை அனுப்பி கடையில் போய் சால்வை வாங்கி வர அவசரபடுத்தினர். பாலசுப்பிரமணியம் மேடையில் பாடிக்கொண்டே இருந்தார்.

( இந்த சிறுகதை “பாடும் நிலா திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன வார்த்தையில் இருந்து எழுதப்பட்டது. இந்த சிறுகதை அவருக்கே சமர்ப்பணம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *