செய்திகள்

விருப்ப ஓய்வை ஏற்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் பணியில் இருந்து விடுவிப்பு

சென்னை, ஜன.7-

தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் அளித்திருந்த விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று, பணியில் இருந்து அவரை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர் யு.சகாயம். கடந்த 1962-ம் ஆண்டு ஜூலை 3-ந்தேதி பிறந்த அவர் 2001-ம் ஆண்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தமிழக அரசு பணிக்கு நியமிக்கப்பட்டார்.

நாமக்கல், மதுரை மாவட்ட கலெக்டராக அவர் பணியாற்றி உள்ளார். தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். மதுரை மாவட்ட கலெக்டராக இருந்தபோது கிரானைட் கனிமவள முறைகேட்டை வெளியே கொண்டு வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த முறைகேடு பற்றி விசாரிப்பதற்காக சகாயத்தின் தலைமையில் விசாரணைக்குழுவை சென்னை ஐகோர்ட் அமர்த்தியது. கிரானைட் முறைகேடு பற்றி முழுமையாக விசாரித்து அதுபற்றிய அறிக்கையை ஐகோர்ட்டில் அவர் சமர்ப்பித்தார்.

ஊழலுக்கு எதிரான அவரது பேச்சு, பல தரப்பினரை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு கிண்டியில் உள்ள அறிவியல் நகர துணைத்தலைவராக சகாயம் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு அவருக்கு பணியிட மாற்றம் எதுவும் அளிக்கப்படவில்லை.

இந்த நிலையில் கடந்த அக்டோபர் 2-ந்தேதியன்று (காந்தி ஜெயந்தியன்று) விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக தமிழக அரசுக்கு சகாயம் ராஜினாமா கடிதம் அளித்தார்.

ஆனால் அரசிடம் இருந்து பதில் கடிதம் எதுவும் அளிக்கப்படாமல் இருந்தது. எனவே அரசுக்கு சகாயம் நினைவூட்டல் கடிதம் எழுதினார். தற்போது அவரது விருப்ப ஓய்வு கடிதத்தை ஏற்று, 2-ந்தேதியிட்ட பணி விடுவிப்பு கடிதத்தை தமிழக அரசு அளித்தது. இன்னும் 2 ஆண்டுகள் பணியாற்றும் வாய்ப்பு இருந்தும் அவர் விருப்ப ஓய்வு பெற்றிருப்பது அரசு வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ்பாபு தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இளைஞர்களை நல்வழிக்கு ஊக்குவிக்கும் பணியில் இனி ஈடுபடப்போவதாக சகாயம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *