செய்திகள்

25 ஆயிரம் கட்டிட தொழிலாளர்களுக்கு 5.45 கோடி பாதுகாப்பு கருவிகள்: எடப்பாடி பழனிசாமி வழங்கினார்

Spread the love

சென்னை, செப்.20–

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு 5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை வழங்கிடும் அடையாளமாக, 7 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை வழங்கி, துவக்கி வைத்தார்.

கட்டடம் மற்றும் இதர கட்டுமான பணியிடங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் முதற்கட்டமாக, 25,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் 3.7.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவித்தார்.

அதன்படி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து 5 கோடியே 44 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பாதுகாப்பு காலணிகள், பாதுகாப்பு தலைகவசம், பளிச்சிடும் மேலங்கி, கையுறைகள் மற்றும் பாதுகாப்பு கண்ணாடி அடங்கிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட பெட்டகத்தை 25,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு அப்பெட்டகத்தை வழங்கி துவக்கி வைத்தார். இப்பாதுகாப்பு உபகரணங்கள் கொண்ட ஒரு பெட்டகத்தின் மதிப்பு 2,177 ரூபாய் ஆகும்.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் க. சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) தீரஜ் குமார், தொழிலாளர் ஆணையர் ஆர்.நந்தகோபால், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனர் கா.மனோகரன், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய செயலாளர் டி.குமரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *