செய்திகள்

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.6999 கோடி நிதி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, பிப்.14–

தமிழக நீர்பாசன திட்டங்களுக்கு ரூ.6999 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், மேட்டூர் உபரி நீரை வறண்ட கால்வாய்களுக்கு திருப்ப ரூ.566 கோடி திட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் சட்டசபையில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு போன்ற நீர் பற்றாக்குறை மாநிலத்தில் நீர்நிலைகளைப் பாதுகாப்பது மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்து, முதலமைச்சர் தமிழ்நாடு நீர்வள ஆதார அமைப்பை பாதுகாத்தல் மற்றும் வலுப்படுத்துதல் இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாகத் தொடங்கியுள்ளார். இவ்வியக்கத்தின் நோக்கமானது, மழைநீர் சேகரித்தல், நீர்வள ஆதாரங்களைப் பாதுகாத்தல், நிலத்தடி நீர் செறிவூட்டல், விவசாயப் பயன்பாட்டிற்கான நீரை திறம்படப் பயன்படுத்துதல், பயன்படுத்தப்பட்ட நீரினை மறுசுழற்சி செய்தல் மற்றும் நீர்வழிகள், நீர்வள ஆதாரங்கள் மற்றும் சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் ஆகும்.

குடிமராமத்து பணிகள்

மிகவும் பாராட்டுப் பெறும் குடிமராமத்து திட்டத்தின் கீழ், இதுவரை 4,865 பணிகளை, 930.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு, 4,059 பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் உள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும். 2019–20–ம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில், பாசன ஏரிகளைப் புனரமைப்பதற்காக 510.52 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020–21 ஆம் ஆண்டில் 1,364 நீர்ப்பாசனப் பணிகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படும். 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு–செலவுத் திட்டத்தில் குடிமராமத்து திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5,000 ஊராட்சி ஒன்றியங்களின் பராமரிப்பில் உள்ள சிறிய பாசன ஏரிகள், கிராம ஊராட்சிகளின் பராமரிப்பில் உள்ள 25,000 குளங்கள் மற்றும் ஊருணிகளுக்கு புத்துயிர் அளிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை மேற்கொள்வதற்காக சிறப்பு ஒதுக்கீடாக 500 கோடி ரூபாயை அரசு வழங்கியுள்ளதுடன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் 750 கோடி ரூபாய் நிதியையும் இணைத்துள்ளது.

இதுவரை, மொத்தம் உள்ள 30,000 பணிகளில், 21,444 பணிகள் நிறைவடைந்துள்ளன. 2020–21 ஆம் ஆண்டில், கிராமங்களில் மீதமுள்ள குளங்கள் மற்றும் ஊருணிகள் ஆழப்படுத்துதல் மற்றும் நகர்ப்புரங்களில் உள்ள கோவில் குளங்கள் புனரமைப்பு ஆகிய பணிகள், பல்வேறு திட்டங்களின் கீழான நிதியைக் கொண்டு ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளும். இவை, நிலத்தடி நீர் அமைப்புகளை செறிவூட்டுவதுடன், மிக அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்ட ஒன்றியங்களில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும்.

நீர்ப்பாசன உட்கட்டமைப்புகள் விரிவாக்கம்

2019–20ஆம் ஆண்டில், காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள 281 கால்வாய்களைத் தூர்வாரும் பணிகளுக்காக 60.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த ஆண்டில் இப்பணிகளை சிறப்பாகச் செயல்படுத்தியதால், பாசன நீர் எவ்வித இடையூறுமின்றி காவேரி வடிநிலத்தின் கடைமடைப் பகுதி வரை சென்றடைந்தது. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் காவேரி வடிநிலப் பகுதிகளில் உள்ள கால்வாய்களில், 392 தூர்வாரும் பணிகளை அடுத்த பருவமழைக் காலத்திற்கு முன்னதாக நிறைவு செய்வதற்காக, 67.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரிப் படுகையில் நீர்ப்பாசன உட்கட்டமைப்புகளை விரிவாக்கல், புதுப்பித்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, கல்லணைக் கால்வாய் அமைப்பின் பணிகள், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உதவியுடன் 2,298 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்கென 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆசிய வளர்ச்சி வங்கியின் கடன் உதவியுடன், 1,560 கோடி ரூபாய் செலவில் பருவகால மாற்றத் தழுவல் திட்டத்தை செயல்படுத்தும் பணி காவேரி பாசனப் பகுதியில் முழுவீச்சில் முன்னேற்றமடைந்து வருகிறது. இத்திட்டத்திற்காக, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் 105.20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1,995 கோடி ரூபாய் திட்டச் செலவில், வெண்ணார் உப வடிநிலத்தில் ஏனைய பகுதிகளை இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்கான கோரிக்கையையும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆய்வு செய்து வருகிறது.

முக்கொம்பில் புதிய கதவணை

கட்டளை உயர்மட்டக் கால்வாய் பணிக்காக 335.50 கோடி ரூபாயும், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான நொய்யல் துணைப் படுகை திட்டம், 184 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான ராஜவாய்க்கால் திட்டத்திற்கும் அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெள்ள உபரி நீரினை மேட்டூர் அணையிலிருந்து சேலம் மாவட்டத்தில் வறண்ட குளங்களுக்கு திருப்பி விடுவதற்கான சாரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டம் 565 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள, அரசு அனுமதி வழங்கியுள்ளது. இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 463.25 கோடி ரூபாய் செலவில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ஆதனூர் மற்றும் குமாரமங்கலம் கிராமங்களுக்கிடையே கதவணை மற்றும் 387.60 கோடி ரூபாய் செலவில் திருச்சி மாவட்டம் முக்கொம்பில் புதிய கதவணை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நடந்தாய் வாழி காவேரி

நடந்தாய் வாழி காவேரி திட்டத்திற்கான 11,250 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான முதனிலைத் திட்ட அறிக்கை இந்திய அரசின் நீர்வள ஆதார அமைச்சகத்திற்கு கொள்கை ரீதியான ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்காக, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 15 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமானப் பணிகள்

அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் முதல்கட்ட திருத்தப்பட்ட திட்டச் செலவினம் 803.49 கோடி ரூபாயுடன் 89 அணைகளும், இரண்டு பாசனப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பராமரிப்புப் பணிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அணைகளுக்கான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டம் ஜூன் 2020 வரை நீட்டிக்கப்பட்டு பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் 610.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 37 அணைகள் சேர்க்கப்பட்டுள்ளது. அணைகள் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்தின் இரண்டு கட்டங்களுக்கும் சேர்த்து 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 220.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பாசன விவசாய நவீனமயமாக்கல் திட்டம் 2,962 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படுகிறது. 18 உப வடிநிலப் பகுதிகளில், 1,325 குளங்கள் மற்றும் 107 அணைக் கட்டுகளைப் புனரமைத்தல், மற்றும் 45 செயற்கை செறிவூட்டல் கிணறுகளை நிறுவுதல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 57 குளங்கள் மற்றும் இரண்டு முதன்மை பாசனக் கால்வாய்களை சீரமைத்தல் ஆகிய பணிகள் முதல் கட்டமாக 787.19 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டு, இப்பணிகள் ஜூலை 2020இல் முடிவடைய உள்ளது.

இரண்டாம் கட்டத்தில் 16 உப வடிநிலப் பகுதிகளில், 906 குளங்கள் மற்றும் 183 அணைக்கட்டுகளைப் புனரமைத்தல் மற்றும் 37 செயற்கை செறிவூட்டல் கிணறுகள் கட்டுமானப் பணிகள் 649.55 கோடி ரூபாய் செலவில் 2020–21 ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும். இதற்காக 2020–21 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில் 583.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்திக்கடவு –அவினாசி திட்டம் ரூ.700 கோடி ஒதுக்கீடு

அத்திக்கடவு –அவினாசி நீர்ப்பாசனத் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதியை அரசு பெற்றுள்ளது. இந்தத் திட்டத்திற்காக 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவேரி குண்டாறு இணைப்புத் திட்டம் முதலமைச்சரால் 7,677 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டத்தில், காவேரி முதல் தெற்கு வெள்ளாறு வரையிலான இணைப்புக் கால்வாய் அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தத் திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதல் மற்றும் முதனிலைப் பணிகளை மேற்கொள்வதற்காக 2020–21 ஆம் ஆண்டிற்கான

வரவு செலவுத் திட்டத்தில் 700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத்திற்கு ரூ.655.38 கோடி ஒதுக்கீடு

2014–15 முதல் 2019–20 ஆம் ஆண்டுவரை, 2,241.19 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான, நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், புதிய குளங்களை உருவாக்குதல், புதிய அணைக்கட்டுகளைக் கட்டுதல் மற்றும் புதிய பாசன வாய்க்கால்கள் அமைப்பதற்கான 307 பணிகளை செயல்படுத்தியதில், 261 பணிகள் நிறைவடைந்து, மீதமுள்ள பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில், நபார்டு உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பணிகளைச் செயல்படுத்த 655.38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தில் நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கீடு கணிசமாக உயர்த்தி 6,991.89 கோடி ரூபாயாக உள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *