செய்திகள்

கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்ற ரூ. 6 லட்சம் பறிமுதல்

கரூர், மார்ச் 4–

கரூர் மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 6 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரூர் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பான கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு ஒவ்வொரு தொகுதிக்கும் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தலா 6, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை தொகுதிகளுக்கு தலா 3 குழுக்கள், 4 தொகுதிகளிலும் வீடியோ கண்காணிப்புக்குழு, கணக்கீட்டுக்குழு தலா 1 என மொத்தம் 44 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை அணி 1 அலுவலர் சரஸ்வதி தலைமையில் கரூர் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தளவாபாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 7.20 மணியளவில் அவ்வழியே சென்ற காரில் சோதனையிட்டபோது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த நெய்யாட்டின்கராவை சேர்ந்த சாஜு (27) ரூ.2 லட்சத்து 92 ஆயிரத்து 500 உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்றது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அரவக்குறிச்சி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கிருஷ்ணராயபுரத்தில் ரூ.82 ஆயிரம் பறிமுதல்

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி பறக்கும் படை குழு அணி 3 அலுவலர் மணிமேகலை தலைமையில் ஜெகதாபி அருகே அய்யம்பாளையத்தில் நேற்றிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை அடுத்த புல்லான்விடுதியைச் சேர்ந்த மாரிமுத்து மற்றும் பேராவூரணியைச் சேர்ந்த அப்துல்மஜீத் ஆகிய இருவரும் வந்த மினி வேனை சோதனையிட்டபோது ரூ.82 ஆயிரத்தை உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் மகுடேஸ்வரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை அவர் சார்கருவூலத்தில் ஒப்படைத்தார்.

3 இடங்களில் மொத்தம் ரூ.6 லட்சத்து 3,800 பறிமுதல்

அரவக்குறிச்சி தொகுதி நிலையான கண்காணிப்புக்குழு அணி 5 முன்னூரில் கடந்த 2-ம் தேதி நள்ளிரவு நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 300, கிருஷ்ணராயபுரம் தொகுதி பறக்கும் படை குழு அணி 3 அய்யம்பாளையத்தில் நேற்றிரவு நடத்திய சேதனையில் ரூ.82 ஆயிரம், அரவக்குறிச்சி தொகுதி பறக்கும் படை குழு அணி 1 தளவாபாளையத்தில் இன்று காலை நடத்திய சோதனையில் ரூ.2 லட்சத்து 92 ஆயிரம் என மாவட்டத்தில் 3 இடங்களில் நடந்த சோதனையில் இதுவரை மொத்தம் ரூ.6 லட்சத்து 3,800 பறிமுதல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *