செய்திகள்

திருவள்ளுர் வீரமங்கலம் கிராமத்தில் 1026 பேருக்கு ரூ.54 லட்சம் நலத்திட்ட உதவி

Spread the love

திருவள்ளூர், பிப். 27–

திருவள்ளுர் வீரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற விழாவில் 1026 பேருக்கு ரூ.54 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், பி.எம்.நரசிம்மன் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை வட்டம், வீரமங்கலம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் பி.எம்.நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 225 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய முதியோர் உதவித்தொகையும், 40 பயனாளிகளுக்கு இந்திராகாந்தி தேசிய விதவை உதவித்தொகையும், 39 பயனாளிகளுக்கு ஆதரவற்ற விதவை உதவித் தொகையும், 3 பயனாளிகளுக்கு முதிர்கன்னி உதவித்தொகையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 106 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 163 பயனாளிகளுக்கு ரூ. 6,43,750 மதிப்பில் கல்வி உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகையும்,

வருவாய்த்துறை சார்பாக 50 பயனாளிகளுக்கு ரூ.45,50,000-த்திற்கான இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், 100 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகளும், வேளாண்மைத்துறை சார்பாக 20 விவசாயிகளுக்கு விசைத்தெளிப்பான் இயந்திரங்களும், களையெடுக்கும் கருவிகளும், திரவ உயிர் உரங்களும், பிரதம மந்திரி உழவன் கடன் அட்டை உள்ளிட்டவைகள் என ரூ.ரூ.35,808 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறை சார்பாக 10 விவசாயிகளுக்கு ரூ.1,40,000 மதிப்பில் இயந்திரங்களும் மற்றும் மரக்கன்றுகளும் ஆக மொத்தம் 1026 பயனாளிகளுக்கு ரூ.53,69,558 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கூறியதாவது:–

முதலமைச்சரின் உத்தரவுப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, மக்களை அவர்களின் இருப்பிடத்திற்கே தேடிச் சென்று அனைத்து நலத்திட்ட உதவிகளையும் வழங்கும் நோக்கில், மக்கள் தொடர்பு திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அணுசரிக்கப்படுகிறது. பெண் குழந்தைகளுக்கு நல்ல கல்வியறிவு வழங்கி, வாழ்வில் மேம்பட்ட நிலை அடைய செய்ய உறுதுணையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. பெண் குழந்தைகளை நன்றாக படிக்க வைத்து, அவர்களுக்கு நல்ல கல்வியறிவு வழங்கி, அவர்களின் வாழ்க்கையை செம்மையாக அமைய பெற்றோர்கள் அனைவரும் அவர்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர், பொதுமக்களிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்களை மாவட்ட கலெக்டர் மற்றும் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டு, அதற்கு உரிய தீர்வுகளை விரைந்து வழங்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி, நலத்திட்டங்களை பரிசீலனை செய்து தகுதி வாய்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

இந்நிகழ்ச்சியில், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் ஆர்.கார்த்திகேயன், மாவட்ட உரிமையியல் மூத்த நீதிபதி ஜி.சரஸ்வதி, காஞ்சிபுரம் – திருவள்ளுர் ஆவின் பால் கூட்டுறவு சங்கத் தலைவர் த.சந்திரன், ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் எ.ஜெ.சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *