செய்திகள்

பிரதமர் வீட்டு வசதி திட்டம், முதல்வர் பசுமை வீட்டு திட்டத்துக்கு ரூ.3599 கோடி நிதி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, பிப்.14–

பிரதமர் வீட்டு வசதி திட்டம், முதல்வர் பசுமை வீட்டு திட்டத்துக்கு ரூ.3599 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சட்டசபையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்கி கிராமப்புறப் பகுதிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்வது, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஊரக வளர்ச்சித் திட்டங்களின் முக்கிய நோக்கமாகும். புதிதாக உள்ளாட்சி அமைப்புத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது, கிராமப்புற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறுவதை உறுதி செய்வதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாகும். எனவே, முதலமைச்சரின் கிராமத் தன்னிறைவு வளர்ச்சித் திட்டம் என்ற புதிய ஐந்து ஆண்டு தன்னிறைவுத் திட்டத்தை இந்த அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

குடிநீர் வழங்கல், சுகாதாரம், கல்வி, உணவுப் பாதுகாப்பு, அணுகு சாலைக் கட்டமைப்பு, இடுகாடுகள், தெரு விளக்குகள், வீட்டு வசதி, வாழ்வாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் குக்கிராம அளவில் தன்னிறைவு அடைவதற்கு இத்திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ், வளர்ச்சி இலக்குகளை கிராம ஊராட்சி மேம்பாட்டுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதன் மூலம், நிலைக்கத்தக்க இலக்குகள் கிராமப்புற அளவில் எய்தப்படும். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம உள்ளாட்சி பிரதிநிதிகள், கள அலுவலர்கள், சமூக ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் தற்போதுள்ள திட்டங்களின் நிதியை சரியாகப் பயன்படுத்தி தன்னிறைவு எய்தும் வண்ணம், பங்களிப்பு அணுகுமுறை தொடர்பான பயிற்சி உட்பட இதர பயிற்சிகள் வழங்கப்படும். இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதியம் உருவாக்கப்படும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையும், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையும் இணைந்து இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான நெறிமுறைகளை வகுக்கும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இடைவெளியை நிரப்பும் ஊக்க நிதிக்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 7,620 கோடியில் 3,80,000 வீடுகள்

மத்திய அரசின் இந்திரா வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2015-16 ஆம் ஆண்டு வரை 4,875.73 கோடி ரூபாய் செலவில் 4,41,637 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ், 8,968.39 கோடி ரூபாய் செலவில், 5,27,552 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 2011-12 ஆம் ஆண்டிலிருந்து 7,620 கோடி ரூபாய் செலவில், 3,80,000 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. ஆட்சேபணையில்லா புறம்போக்கு நிலங்களில் வசித்து வருபவர்களின் வீட்டு மனைகளை வரன்முறை செய்து வருவாய்த் துறை பட்டா வழங்கியுள்ள நபர்களில் தகுதியான நபர்களுக்கு பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டம் (ஊரகம்) மற்றும் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டங்களின் கீழ் 2020-21 ஆம் ஆண்டு முதல் வீடுகள் கட்டித் தரப்படும். 2020–21ஆம் ஆண்டில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்தின் (ஊரகம்) கீழ் 2 இலட்சம் வீடுகளும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், அனைத்துப் பழங்குடியினர் குடும்பங்களுக்கும் வீட்டுவசதியை வழங்கும் வகையில், அவர்களுக்கான 8,803 வீடுகள் உட்பட 20,000 வீடுகளும் கட்டித் தரப்படும்.

முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், சூரியஒளித் தகடுகளை நிறுவுவதற்கான தொகை, வீடு ஒன்றிற்கு 30,000 ரூபாய், வீட்டின் கட்டுமானச் செலவிற்கான தொகையுடன் சேர்க்கப்பட்டு, ஒட்டுமொத்த கட்டுமானச் செலவு வீடொன்றுக்கு 2.1 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (ஊரகம்) 3,099.07 கோடி ரூபாயும், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்காக 500 கோடி ரூபாயும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. 2018-2019 ஆம் ஆண்டில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை செயல்படுத்துவதில், மொத்தமாக 8 தேசிய விருதுகளை தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில், 20.74 கோடி மனித உழைப்பு வேலை உருவாக்கப்பட்டு, 3,678.06 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கான மாநில அரசின் பங்காக 375 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறைக்கு ரூ. 23,161.54 கோடி

2019-20 ஆம் ஆண்டில், ஊராட்சி ஒன்றிய, கிராமப்புறச் சாலைகளை தரம் உயர்த்திப் பராமரிப்பதற்காக தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம் 1,200 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் நிதியாண்டில், இத்திட்டமானது 1,400 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

பிரதம மந்திரி கிராமப்புறச் சாலைகள் திட்டத்தின் மூன்றாவது கட்டப் பணிகளின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற வேளாண் சந்தைகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை இணைக்கக்கூடிய வகையில் 7,375 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்துவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஊரக வளர்ச்சித் துறைக்காக 23,161.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *