செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2812 கோடி நிதி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, பிப். 13–

மத்திய பட்ஜெட்டில் தமிழக ரெயில்வே திட்டங்களுக்கு ரூ.2812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தெற்கு ரெயில்வேயில் தமிழ்நாட்டின் ரெயில்வே உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2020–21ம் ஆண்டில் ரூ.2812 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2009 முதல் 2014ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரெயில்வே திட்டங்களுக்கு சாரசரி நிதி ஒதுக்கீட்டை விட இது 220 சதவீதம் அதிகம் ஆகும். புதிய பாதை, இரட்டைப் பாதை, அகல பாதை உள்பட பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், இரட்டைப்பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.1,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய பாதை திட்டத்தில், பல்வேறு திட்டங்களுக்கு தலா ரூ.1,000 ஒதுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரெயில்வேயில் 11 புதிய பாதை திட்டங்களுக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுபோல, அகலப்பாதை திட்டப்பணிகளுக்கு ரூ.175 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இரட்டைப்பாதை திட்டப் பணிகளுக்கு ரூ.57 கோடியே 10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பாதை திட்டம்

திண்டிவனம்–செஞ்சி–திருவண்ணாமலை திட்டம் (70 கி.மீ.), திண்டுக்கல்–நகரி (179.2 கி.மீ.), அத்திப்பட்டு–புத்தூா் (88.30 கி.மீ.), ஈரோடு–பழனி (91.05 கி.மீ.), சென்னையில் இருந்து மாமல்லபுரம் வழியாக கடலூர் (179.28 கி.மீ), மதுரை-– தூத்துக்குடி (வழி- அருப்புக்கோட்டை) (143.5 கி.மீ.), ஸ்ரீபெரும்புதூர் – -கூடுவாஞ்சேரி (60 கி.மீ.), மொரப்பூர் – -தருமபுரி (36 கி.மீ.) ஆகிய 8 திட்டங்களுக்கு தலா ரூ.1,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் – -தனுஷ்கோடி (17.2 கி.மீ.) புதிய பாதை திட்டத்துக்கு ரூ.2 கோடியே 70 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டம் ஆகும். கேரளப் பகுதியில் 2 திட்டங்கள் உள்ளிட்டட 10 புதிய பாதை திட்டங்களுக்கு தலா 1,000 ரூபாயும், மீதமுள்ள ஒரு திட்டத்துக்கு ரூ.2.70 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

அகலப்பாதை திட்டம்

அகலப்பாதை திட்டத்தைப் பொருத்தவரை திருச்சிராப்பள்ளி – நாகூர் – காரைக்கால் திட்டத்தில், நாகப்பட்டினம் – -திருத்துறைப்பூண்டி (வழி:திருக்குவளை) புதிய பாதை திட்டப் பணிகள் நடைபெறுகின்றன. இந்தத் திட்டத்துக்கு ரூ,1,000 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இரட்டைப்பாதை திட்டம்

இரட்டைப்பாதை திட்டப்பணிகளுக்கு மொத்தம் ரூ.1,181 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தற்போது ரூ.1600 கோடி மதிப்பீட்டில் காட்பாடி– விழுப்புரம் திட்டம் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.1600 கோடியில் சேலம் – கரூர் – திண்டுக்கல் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.650 கோடியில் ஈரோடு – கரூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.2900 கோடியில் தர்மவரம் – காட்பாடி இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.1470 கோடியில் ஓசூர் – ஓமலூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.279 கோடியில் சென்னை கடற்கரை– எழும்பூர் இரட்டை வழிப்பாதை திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *