செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்து: உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கும் தலா ரூ. 25 லட்சம்

புனே, ஜன. 22–

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த ஐந்து பேர் குடும்பத்துக்கும் தலா ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசி தயாரிக்கும் சீரம் நிறுவனத்தில் ஐந்தாவது மாடியில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் அங்கு நேற்று ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து தீயணைப்பு படையினரால் ஐவரின் சடலங்களும் மீட்கப்பட்டன. மேலும் 9 பேர் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு

தீயணைப்பு படை அதிகாரிகள் வந்ததும் அந்த மாடியில் பணிபுரிந்த ஐந்து பேரின் உடல்கள் முற்றிலுமாக எரிந்த நிலையில் மட்டுமே மீட்க முடிந்தது. அவர்களில் இருவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இருவர் புனேவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் பீகாரைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், புனேவில் உள்ள நிறுவனத்தின் வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு வழக்கமாக வழங்கும் இழப்பீட்டுத் தொகையைத் தவிர, மேலும் ஒவ்வொரு குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்குவதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைவரும் எம்.டி.யுமான சைரஸ் எஸ். பூனவல்லா தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே புனேவின் மஞ்சரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தை, இன்று பார்வையிட உள்ளதாக மகாராஷ்டிரா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *