செய்திகள்

தருமபுரி, நீலகிரியில் சோதனை: ரூ. 23 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சென்னை, மார்ச் 1–

சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 6ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் நோக்கில், ரூ.50,000 வரை எந்தவித ஆவணமின்றி பணத்தை எடுத்து செல்லலாம். அதற்குமேல் கொண்டு செல்லும் பணத்திற்கு கண்டிப்பாக ஆவணங்களை காண்பிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

ரூ.3 லட்சம் பறிமுதல்

இந்த அடிப்படையில், சேலத்திலிருந்து திருப்பத்தூர் நோக்கி சென்றுகொண்டிருந்த வாகனங்களை தொப்பூர் சுங்கச்சாவடி அருகே தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சக்திவேல் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், அந்த வழியாக வந்த கார் ஒன்றில் எந்தவொரு ஆவணமுமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2,95,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

அந்தத் தொகை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியர் பிரதாபிடம் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்ட 2 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பேக்கரி உரிமையாளர் சிவன், இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என சார் ஆட்சியர் பிரதாப் கூறினார்.

ரூ.19 லட்சம் பறிமுதல்

தமிழக- கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்புப் படையினர் நடத்திய சோதனையில், கேரளாவிலிருந்து வந்த 5 காய்கறி லாரிகளில் கணக்கில் வராத 19 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் முன்னிலையில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த பணத்திற்கான முறையான ஆவணம் சமர்ப்பிக்கப்பட்டால், பணம் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாபநாசம் அருகே பல்லவராயன்பேட்டையில் ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.10 லட்சத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *