செய்திகள்

ஆதிதிராவிடர் கல்விக்கு ரூ. 2 ஆயிரம் கோடி

Spread the love

சென்னை, பிப். 15

ஆதிதிராவிடர் கல்விக்கு ரூ. 2,018.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் நிலைக்கத்தக்க பொருளாதார முன்னேற்றத்தை அடைவதையும், அவர்களுக்கு சமூகநீதியை உறுதிசெய்வதும் இந்த அரசின் முதன்மையான நோக்கமாகும். கல்வியறிவே, மக்கள் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்கான மிகச் சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தரும். எனவே, 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஆதி திராவிடர் முன்னேற்றத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 4,109.53 கோடி ரூபாய் மொத்த நிதியில், 2,018.24 கோடி ரூபாய் அவர்களின் கல்வித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின மாணவிகளுக்கான ‘பெண் கல்வி சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டம்’ 49.60 கோடி ரூபாய் செலவில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், மாநில அரசால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய தொகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டு, 1,526.46 கோடி ரூபாய் எட்டியுள்ள நிலையில், மத்திய அரசிடமிருந்து இத்திட்டத்திற்கு அளிக்கப்படும் தொகை கணிசமாகக் குறைந்துள்ளது. ஏனைய திட்டங்களைப் போன்று உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திலும் மத்திய மாநில அரசுகள் 60:40 என்ற விகிதத்தில் செலவினை ஏற்க வேண்டும் என மாநில அரசு மத்திய அரசைக் கேட்டுக் கொண்டுள்ளது. மாநில அரசின் தளராத முயற்சிகளின் பலனாக, நிருவாக ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்துள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெறுவதில், மத்திய அரசு விதித்திருந்த கட்டுப்பாடுகள் மாற்றப்பட்டு விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதால், மேலும் பல மாணவர்கள் உயர்கல்வி ஊக்கத்தொகையைப் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,949.58 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதி திராவிடர் மாணவர்களிடையே, கல்லூரி விடுதிகளுக்கான தேவை உயர்ந்து வருகிறது. ஆகையால், 2020-21 ஆம் ஆண்டில் 16.30 கோடி ரூபாய் மதிப்பில் 15 விடுதிகள், கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும். ஆதி திராவிடர் விடுதிகளின் பராமரிப்பிற்கான நிதி ஒதுக்கீடு 6.89 கோடி ரூபாயிலிருந்து 15 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் விடுதிகள் முறையாகப் பராமரிக்கப்படுவது உறுதி செய்யப்படும். நபார்டு வங்கி உதவியுடன், 106.29 கோடி ரூபாய் மொத்தச் செலவில், 223 ஆதி திராவிடர் நலப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

2018-19 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஆதி திராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வதற்கான சிறப்புத் திட்டம் 2020-21 ஆம் ஆண்டிலும் 100 கோடி ரூபாய் ஒதுக்கீட்டுடன் தொடர்ந்து செயல்படுத்தப்படும். கூடுதலாக ஊரக வளர்ச்சித் துறையால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிதி இதனுடன் இணைக்கப்படும். ஆதி திராவிடர்களுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 23,425 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்க தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் திட்டமிட்டுள்ளது.

2020-21 ஆம் ஆண்டில் இத்திட்ட த்தைச் செயல்படுத்துவதற்காக 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து காலநிலைகளுக்குமான வீடுகள், இணைப்புச் சாலைகள், தெரு விளக்குகள், சூரியஒளி விளக்கு வசதிகள், வீட்டு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகள் போன்ற அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும், அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளில் ஏற்படுத்துவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை இந்த அரசு செயல்படுத்தும் என்று தெரிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இத்திட்டத்திற்காக, மாநிலத்திலுள்ள அனைத்து பழங்குடியினர் குடியிருப்புகளிலும் விரிவான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டு, வீட்டு வசதிக்கான 265 கோடி ரூபாய் உட்பட, 660 கோடி ரூபாயில் விரிவானதொரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்ட நிதியின் கீழ், 2020-21 ஆம் ஆண்டில், வீடுகள் தேவைப்படும் அனைத்து 8,803 குடும்பங்களுக்கும், தலா 3,00,000 ரூபாய் செலவில் வீடுகள் கட்டித் தரப்படும்.

வீடு கட்டுவதற்கு ஆகும் செலவில், ஒரு வீட்டிற்கு கூடுதலாக ஆகும் செலவான 90,000 ரூபாய், பழங்குடியினர் நலத்திற்கான வரவு-செலவு ஒதுக்கீடுகளில் இருந்து ஒரு சிறப்பு ஒதுக்கீடாக வழங்கப்படும். நிதி ஒதுக்கீட்டின் எஞ்சிய 395 கோடி ரூபாய், அணுகு சாலைகள், தெரு விளக்குகள், சூரிய ஒளி விளக்கு வசதி மற்றும் பாதுகாப்பான குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவதற்காக மூன்று ஆண்டுகளாகப் பிரித்து வழங்கப்படும். 2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 210 கோடி ரூபாய் இத்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் தொடங்கி நிறைவுறா பணிகளுக்கு நடப்பாண்டில் 40 கோடி ரூபாய் தனியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய, அவர்களுக்குத் தரமான கல்வி வசதிகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அரசு நன்கு அறியும். இந்த சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக 302.98 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் மற்றும் தொழிற்பயிற்சி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு 3.63 லட்சம் மிதிவண்டிகள் 142.84 கோடி ரூபாய் செலவில் வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது 1,348 விடுதிகளில் 85,314 மாணவ மாணவிகள் தங்கியுள்ளனர். 2020-21 ஆம் ஆண்டில் 7 பள்ளி விடுதிகள் கல்லூரி விடுதிகளாகத் தரம் உயர்த்தப்படும். புதிய விடுதிக் கட்டடங்களின் கட்டுமானத்திற்காக 2019-20 ஆம் ஆண்டில் 8.48 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. மாணவ மாணவிகளின் வருகையைப் பதிவு செய்ய அனைத்து விடுதிகளிலும் பயோமெட்ரிக் வருகைப்பதிவேடு முறை நிறுவப்பட்டுவருகிறது.

2020-21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலனுக்காக 1,034.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *