செய்திகள்

மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு: ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

அம்மா மினி கிளினிக்குகளுக்கு ரூ.144 கோடி

புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்க ரூ.2470 கோடி

சென்னை, பிப்.23

மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ.19,420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசுகையில் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:

சுகாதாரத் துறையில் இந்த அரசு செய்த முதலீடுகளால் கடந்த பத்தாண்டு காலத்தில், முக்கிய சுகாதாரக் குறியீடுகளில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2010 ம் ஆண்டில் 24-ஆக இருந்த குழந்தை இறப்பு விகிதம், 2018 ம் ஆண்டில் 15- ஆகவும், 2010 ம் ஆண்டில் 90 ஆக இருந்த தாய்மார்கள் இறப்பு விகிதம் 2019 ம் ஆண்டில் 57 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. தேசிய மற்றும் நிலைக்கத்தக்க வளர்ச்சி குறிக்கோள்களின் இலக்கினை தமிழ்நாடு குறிப்பிடப்பட்ட காலவரையறைக்கு முன்னதாகவே அடைந்துள்ளது.

முதலமைச்சரின் தற்போதைய இரண்டு புதிய சிறப்பு முயற்சிகளின் வாயிலாக, பொது சுகாதார அமைப்பின் மூலம் தொடக்க மற்றும் இரண்டாம் நிலைகளில் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த உத்திமுறைக்கு பெருமளவில் ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மருத்துவப் படிப்பு, பல் மருத்துவப் படிப்பு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீத இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இது, முதல் சிறப்பு முயற்சியாகும்.

மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அனுமதி பெற்ற மாணவர்களுக்கு தங்கும் விடுதிக் கட்டணங்கள் மற்றும் அனைத்து வகையான முக்கிய கட்டணங்களைச் செலுத்துவதற்கு 16 கோடி ரூபாய் மதிப்பில் சுழற்சி நிதியை இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது. ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் அத்தியாவசிய ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்காக, படிப்படியாகத் தொடங்கப்படும் 2,000 அம்மா மினி கிளினிக்குகள் சுகாதார வசதிகளை மேலும் மேம்படுத்தும் விதமாக அமையும். இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், அம்மா மினி கிளினிக்குகளுக்காக 144 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த அரசு ஏற்கெனவே 6 புதிய மருத்துவ கல்லூரிகளைத் தொடங்கி, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மருத்துவப் படிப்பிற்கான இடங்களை அதிகரித்துள்ளது. இதனால், 2011 ம் ஆண்டில் இருந்த 1,940 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள், இன்றைய நாள் வரை 3,650 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளன. 3,995 கோடி ரூபாய் மதிப்பில் 11 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படுவதன் மூலம், 2021 -22 ம் கல்வியாண்டில் கூடுதலாக 1,650 மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2021 -22 ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்காக 2,470.93 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத்தாழ்வின்றி, சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும், 2,857 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கியின் நிதியுதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்காக, 2021 -22 ம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 291.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பான் பன்னாட்டுக் கூட்டுறவு முகமையின் நிதியுதவியுடன், மொத்தம் 1,634 கோடி ரூபாய் மதிப்பீட்டில், தமிழ்நாடு நகர்ப்புற சுகாதாரத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 -22 ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், இத்திட்டத்திற்காக 815.70 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

69 லட்சம் கர்ப்பிணிகளுக்கு ரூ.6,929 கோடி நிதியுதவி

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 2012 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 54.99 லட்சம் பயனாளிகள் 7,473.52 கோடி ரூபாய் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளைப் பெற்றுள்ளனர். இத்திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகள் 2,779 கோடி ரூபாய் காப்பீட்டுத் தொகையாகப் பெற்றுள்ளன. இத்திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மூலதன நிதியிலிருந்து 753.76 கோடி ரூபாய் செலவில் 9,727 நபர்கள் உயர்தர சிகிச்சையை பெற்றுள்ளனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித் திட்டத்தின் கீழ், பயனாளி ஒருவருக்கு உயர்த்தப்பட்ட நிதியுதவியான 18,000 ரூபாயை அரசு வழங்குகிறது. 2011 ஆம் ஆண்டு மே மாதம் முதல், 68.91 லட்சம் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6,929.07 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இறந்தவர்களின் உறுப்பு மாற்றுத் திட்டத்தை செயல்படுத்துவதில் சிறப்பாகச் செயலாற்றி, கடந்த ஆறு ஆண்டுகள் தொடர்ச்சியாக சிறந்த மாநில விருதினை தமிழ்நாடு பெற்றுள்ளது.

2011ஆம் ஆண்டில், 415 ஆக இருந்த 108 அவசர சிகிச்சை ஊர்தி சேவைகளின் எண்ணிக்கை, இன்றைய நாள்வரையில், 1,303ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2011 ம் ஆண்டு மே மாதம் முதல், 23.22 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட, 94.84 இலட்சம் மக்கள் இந்த சேவையைப் பெற்றுள்ளனர். கால அளவு அனைத்து மெட்ரோ பகுதிகளிலும் 8 நிமிடங்கள் 7 நொடிகளாகவும் மற்ற பகுதிகளில் 13 நிமிடங்கள் 42 நொடிகளாகவும் குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறைக்கான ஒதுக்கீடு, 2020 21ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்டத்தில், 15,863.37 கோடி ரூபாயிலிருந்து 2020 -21 திருத்த மதிப்பீடுகளில் 18,458.27 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ஒதுக்கீட்டை உயர்த்தி, 2021 -22 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 19,420.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *