செய்திகள்

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18,540 கோடி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, பிப்.14–

நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறைக்கு பட்ஜெட்டில் ரூ.18540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

கிராமப்புற, நகர்ப்புரப் பகுதிகளுக்கான வாழ்வாதார இயக்கங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கம் மாநிலத்திலுள்ள அனைத்து வட்டாரங்களிலும், அதாவது 388 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை, இந்த இயக்கத்தின் கீழ், 83,257 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த இயக்கத்திற்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 450.65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தீன் தயாள் உபாத்தியாய கிராமப்புறத் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மொத்தமாக 1,08,416 இளைஞர்கள் 2014–15 முதல் இது வரையில் பயிற்சி பெற்றுள்ளனர். 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இந்த திட்டத்திற்காக 299.60 கோடி ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டு, 28,063 இளைஞர்களுக்குப் பயிற்சி வழங்கப்படும்.

தமிழ்நாடு கிராமப்புற புத்தாக்கத் திட்டம் 26 மாவட்டங்களில் உள்ள 120 வட்டாரங்களில் உலக வங்கியின் நிதியுதவியுடன், 918.20 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. தொழில் முனைவோர்களை ஊரகப்பகுதிகளில் ஊக்குவிப்பதற்காக, அதிலும் குறிப்பாக, பெண்கள், பழங்குடியினர், ஆதிதிராவிடர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை தொழில்முனைவோர்களாக உருவாக்குவதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 2020–21–ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 163.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு

சமூக ஒருங்கிணைப்பு, நிறுவன அமைப்புகளை மேம்படுத்துதல், திறன் பயிற்சி மூலம் வேலைவாய்ப்பு, நகர்ப்புரத்தில் வீட்டுவசதி இல்லாதவர்களுக்கு உறைவிடம், நகர்ப்புரத்தில் தெருவோர வியாபாரிகளுக்கான உதவி உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புரப் பகுதிகளிலும் தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் நிதியுடன், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் நிதியையும் ஒருங்கிணைத்து நகர்ப்புர வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தேசிய நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 200 கோடி ரூபாயும், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்திற்காக 8 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடன் பத்திரங்கள்

நகரங்கள், வளர்ச்சியின் விசைப்பொறிகள் ஆகும். எனவே, நகர்ப்புர உட்கட்டமைப்பினை வலுப்படுத்துவது மற்றும் அடிப்படை வசதிகளை நகர்ப்புரங்களில் வழங்குவது, நகர்ப்புரங்களை மேலும் வாழ உகந்த இடமாக்குவதில் முக்கியப் பங்காற்றுகிறது. குடிநீர் வழங்கல், கழிவுநீர், மழைநீர் வடிகால், சாலைகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு அரசு பல்வேறு நிதி ஆதாரங்களிலிருந்து நிதியைத் திரட்டுகிறது. நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கிடைக்கப்பெறும், நிதிக்குழுவால் வழங்கப்படும் நிதிப்பகிர்வு மானியங்கள் உட்பட, சீரான வருவாயினங்களின் அடிப்படையில், நகர்ப்புர உட்கட்டமைப்பு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் விதமாக, கடன் பத்திரங்களும் வெளியிடப்பட்டு நிதி திரட்டப்படும்.

‘திறன்மிகு நகரங்கள்’

திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ், 11,000 கோடி ரூபாய் செலவில் 413 திட்டங்கள் 11 மாநகராட்சிகளில் செயல்படுத்துவதற்கான பணிகள் இதுவரை எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அம்ருத் திட்டத்தின் கீழ், 445 திட்டங்கள் 28 நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் 11,441.32 கோடி ரூபாய் செலவில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், ‘திறன்மிகு நகரங்கள்’ திட்டத்திற்காக 1,650 கோடி ரூபாயும், அம்ருத் திட்டத்திற்காக 1,450 கோடி ரூபாயும் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாதிரி நகரங்கள்

உலகவங்கி நிதியுதவியுடன், 3,831 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நீடித்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஈரோடு, வேலூர் மற்றும் ஓசூர் ஆகிய நகரங்கள் திறன்மிகு நகர்ப்புர மேலாண்மைக்கான மாதிரி நகரங்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், இத்திட்டத்திற்காக 532.54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வழித்தடங்களில் நகர்ப்புர மற்றும் சுற்றுச்சூழல் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட, ஆசிய வளர்ச்சி வங்கி நிதியுதவியுடன், 8,155.81 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் தமிழ்நாடு நகர்ப்புர முதலீட்டுத் திட்டம் பெரிதும் உதவும். இத்திட்டத்தின் கீழ், மதுரை, கோயம்புத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருப்பூர், ஆம்பூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இடங்களில், பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் குடிநீர் வழங்கல் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 2020–21 ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு 406 கோடி ரூபாய் ஆகும்.

வெள்ள நீர் வடிகால் திட்டம்

கொசஸ்தலை ஆற்றின் வடிநிலப் பகுதியில், 2,518 கோடி ரூபாய் செலவில், 765 கிலோமீட்டர் நீளத்திற்கு சென்னை மாநகராட்சியின் விரிவாக்கப்பட்ட பகுதியில் செயல்படுத்த ஒருங்கிணைந்த வெள்ள நீர் வடிகால் திட்டத்தை பெருநகர சென்னை மாநகராட்சி தயாரித்துள்ளது. இத்திட்டத்திற்காக, ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவி ஒப்புதலை விரைவில் எதிர்நோக்கி, 2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 350 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்

நகர்ப்புர சேவைகள், தெரு அமைப்பின் மேம்பாட்டிற்காக, ‘ஒருங்கிணைந்த நகர்ப்புர வளர்ச்சித் திட்டம்’ தயாரிக்கப்பட்டு, ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம் 50 கோடி அமெரிக்க டாலர்கள் கடனுதவிக்காக அனுப்பப்பட்டுள்ளது. திறன்மிகு நகரங்கள் திட்டத்தின் கீழ், சென்னை நீங்கலாக, தெரிவு செய்யப்பட்ட பத்து மாநகராட்சிகளில் நிலைக்கத்தக்க போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இத்திட்டத்தைத் தொடங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு மற்றும் இயந்திரம் சாரா போக்குவரத்தினை இத்திட்டம் ஊக்குவிக்கும்.

2020–21 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டு இயக்கத்திற்கு 750 கோடி ரூபாய், சென்னைப் பெருநகர மேம்பாட்டு இயக்கத்திற்கு 500 கோடி ரூபாய் உட்பட, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,540.12 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *