செய்திகள்

தகவல் தொழில் நுட்பவியல் துறைக்கு ரூ. 153.97 கோடி ஒதுக்கீடு

Spread the love

சென்னை, பிப். 14

தகவல் தொழில் நுட்பவியல் துறைக்கு ரூ. 153.97 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் இன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:

செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் இணையம், நம்பிக்கை இணையம், தரவுப் பகுப்பாய்வு போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை நிர்வாகத்தில் பயன்படுத்துவதில் அரசு தனிக் கவனம் செலுத்தும்.

நிதி தொழில்நுட்பத்தில் தமிழ்நாட்டை முன்னணி மையமாக உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன், 23 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவில், நிதி தொழில்நுட்ப சிறப்பு மையம் ஒன்றினை ஏற்படுத்த மாநில அரசு 5.75 கோடி ரூபாய் மானியம் வழங்கியுள்ளது. அதிகரித்து வரும் புதிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, தேவையான இட வசதியை வழங்கும் விதமாக, தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் கோயம்புத்தூரில் 100 கோடி ரூபாய் செலவில் 2.50 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பு மற்றும் திருச்சியில் 40 கோடி ரூபாய் செலவில் 1 லட்சம் சதுர அடி கூடுதல் அலுவலக பரப்பு நிறுவப்படும்.

தகவல் தொழில்நுட்பவியலின் ஆற்றலை ஆளுமைத் திறன் மேம்பாட்டிற்கு பயன்படுத்துவது இந்த அரசின் முக்கிய நோக்கமாகும். அதன்படி, இந்த அரசு உருவாக்கியுள்ள தமிழ்நாடு வெளிப்படை அரசு தரவு தளத்தின் வாயிலாக, பல்வேறு அரசுத் துறைகளின் வெவ்வேறு தரவுத் தொகுப்புகள் பொதுமக்களுடன் பகிரப்படுகிறது. பொதுமக்களுக்கு இந்த தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படுவதன் மூலம், அவர்கள் அரசு சேவை வழங்கலை மேம்படுத்த உரிய ஆலோசனைகளை வழங்கவும், தகவல்களை பயன்படுத்த தேவையான செயலிகளையும் உருவாக்க முடியும். முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், தரவுகளின் அடிப்படையில், கொள்கை முடிவுகளை எடுப்பதற்கும், அரசுத் துறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், முதலமைச்சரின் முகப்பு பக்கத் திட்டம் 5.02 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்கணிப்பு ஆளுமைத் திட்டத்தின் முதற்கட்டப் பணிகளுக்கு, ஆறு கோடி ரூபாய் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை வரப்பெறாத நிலையிலும், அவர்களுக்குத் தேவையான சேவைகளை கண்டறிந்து வழங்க இயலும்.

குடும்பத் தரவு தளம்

தமிழ்நாட்டின் மாநில குடும்பத் தரவு தளம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அரசு சேவைகளை தங்குதடையின்றி வழங்கவும், அனைத்து அரசுத் துறைகளுக்கும் ஒரே மாதிரியான தரவுகள் கிடைப்பதையும், மாநில குடும்பத் தரவு தளம் உறுதி செய்யும். சரியான தகவல்களின் அடிப்படையில் கொள்கை முடிவுகளை எடுக்க உதவக்கூடிய இந்த லட்சிய திட்டத்தை செயல்படுத்துவதற்கு, 2020 21ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இத்திட்டத்திற்காக 47.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கணினிமயமாக்கம் மற்றும் இணையவழி தரவு பெறுதலில் முக்கியமான அம்சம், தரவு தனியும் மற்றும் பாதுகாப்பும் ஆகும்.

21.39 கோடி ரூபாய் மதிப்பீட்டுச் செலவில் தமிழகத்திற்கான இணையப் பாதுகாப்புக் கட்டமைப்பினை நிறுவுவதற்கு இந்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

2020 21ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் தகவல் தொழில்நுட்பவியல் துறைக்காக மொத்தம் 153.97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *