செய்திகள்

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.12,011 கோடி நிதி

Spread the love

சென்னை, பிப்.14–

நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.12,011 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டசபையில் இன்று தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:–

2019–20 ஆம் ஆண்டில், மாநில நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு

4,558.16 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,654.25 கோடி ரூபாயும் நிதிப் பகிர்வாக வழங்க நிதியொதுக்கீடு செய்யப்பட்டது. 2020–21 ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,306.95 கோடி ரூபாயும், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 6,754.30 கோடி ரூபாயும் நிதிப்பகிர்வாக வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி

பதினான்காவது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழ்நாட்டிலுள்ள உள்ளாட்சி அமைப்புகள் பெற வேண்டிய

2019–20 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியமான 4,345.57 கோடி ரூபாயும், 2017–18 ஆம் ஆண்டு முதல் பெறவேண்டிய செயல்திறன் மானியமான 2,029.22 கோடி ரூபாயும் மாநில அரசு இன்று வரையில் பெறவில்லை. இந்நிலுவைகளை விடுவிக்குமாறு மாநில அரசு மத்திய அரசினை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாநில அரசு தொடர்ந்து மேற்கொண்ட சிறப்பான நடவடிக்கைகளால், 2018–2019 ஆம் ஆண்டிற்கான அடிப்படை மானியத்தை மாநில அரசு பெற்றுள்ளது.

பதினைந்தாவது நிதிக் குழு

பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியங்கள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்தப்படவில்லை. பதினான்காவது நிதிக்குழு, 2019–2020 ஆம் ஆண்டிற்குப் பரிந்துரைத்திருந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான மொத்த மானியத் தொகையான 5,178.52 கோடி ரூபாய் என்பது, பதினைந்தாவது நிதிக்குழுவின் பரிந்துரைகளில் 2020–21 ஆம் ஆண்டிற்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 3,607 கோடி ரூபாயும், நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு 1,737 கோடி ரூபாயும், அதாவது மொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியம் 5,344 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. 2019–20 ஆம் ஆண்டினை ஒப்பிடும்போது, நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ள மானியங்கள் 31 சதவீதம் குறைந்துள்ளன. பதினைந்தாவது நிதிக் குழு கையாண்ட தவறான கணக்கீட்டு முறையே இத்தகைய குறைவிற்கு காரணமாகும். இந்த முரண்பாட்டினை இறுதி அறிக்கையில் சரி செய்யுமாறு நாங்கள் பதினைந்தாவது நிதிக் குழுவைக் கோருவோம்.

மானியங்களை விடுவிக்க மத்திய அரசுக்கு கோரிக்கை

நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட மானியத் தொகையில்,‘பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்தொகை’ கொண்ட ஐம்பது நகர்ப்புர உள்ளாட்சிகளுக்கு தனியே மானியம் வழங்க பதினைந்தாவது நிதிக்குழு பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையின்படி, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சிகளுக்கு மொத்த மானியமாக 556 கோடி ரூபாய் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரையில், கிராம ஊராட்சிகளுக்கு மட்டுமே மானியம் வழங்க பரிந்துரை செய்த பதினான்காவது நிதிக்குழுவைப் போன்று இல்லாமல், பதினைந்தாவது நிதிக்குழுவானது மூன்று கட்ட அளவிலான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மானியம் வழங்க பரிந்துரை செய்துள்ளது. இதனால், நிபந்தனையில்லாத மானிய விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது. உரிய நேரத்தில், மானியங்களை விடுவிக்க வெளிப்படையான வழிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

கிராமப்புற, நகர்ப்புரக் குடியிருப்புப் பகுதிகளில் இதுவரை மேற்கொள்ளப்படாத மிக அத்தியாவசியமான சிறு சிறு பணிகளை மேற்கொள்வதன் மூலம், அப்பகுதிகளில் அடிப்படைத் தேவைகளை முழுமையாக நிறைவு செய்ய இயலும். எனவே, 2020–21 ஆம் ஆண்டில் இத்தகைய அத்தியாவசியமான உட்கட்டமைப்புப் பணிகளை

500 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்வதற்கான ஒருமுறை சிறப்புத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்த உள்ளது. மாநில உயர்மட்டக் குழுவின் நேரடி மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் இப்பணிகள் விரைவாக முடிக்கப்படும்.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *