செய்திகள்

புயலால் மின்வாரியத்துக்கு ரூ.1½ கோடி இழப்பு: அமைச்சர் பி.தங்கமணி தகவல்

144 மின்கம்பங்கள், ஒரு துணைமின் நிலையம் சேதம்

புயலால் மின்வாரியத்துக்கு ரூ.1½ கோடி இழப்பு:

அமைச்சர் பி.தங்கமணி தகவல்

சென்னை, நவ.27–-

‘நிவர்’ புயல் கரையை கடந்ததால் மின்சார வாரிய கட்டமைப்புகள் சேதமடைந்தன. இதுவரை கணக்கிட்டதில் ரூ.1½ கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது என்று மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

மேலும் மின்வாரியம் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக, உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டு உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

‘நிவர்’ புயல் கரையை கடந்தபோது கடலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்கட்டமைப்புகள் சேதமடைந்தன. இந்த சேதமதிப்பு குறித்து மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அமைச்சர் பி.தங்கமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

நிவர் புயல் கரையை கடந்தபோது 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. இந்த மாவட்டங்களில் துணை மின்நிலையங்களில் இருந்து ‘டிரான்ஸ்பார்மரு’க்கு மின்சாரம் கொண்டு வரும் 5 ஆயிரத்து 454 மின்னூட்டிகள் (பீடர்) உள்ளன. இதில் பாதுகாப்பு கருதி 2 ஆயிரத்து 250 ‘பீடர்’கள் நிறுத்தப்பட்டன. இதுவரை, 1,317 ‘பீடர்’கள் சரிபார்த்து மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 933 ‘பீடர்’களுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி நடந்து வருகிறது.

படிப்படியாக மின் இணைப்பு

சென்னையில் 1,707 ‘பீடர்’களில் 177 ‘பீடர்’கள் மட்டும் மின் இணைப்பு வழங்க வேண்டும். அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தில் 596 ‘பீடர்’களில், 176-க்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 451 ‘பீடர்’களில் 154 ‘பீடர்’களுக்கும், காஞ்சீபுரத்தில் 322-ல், 152-க்கும் மின்சாரம் வழங்க வேண்டும்.

கடலூரில் தான் அதிகம் பாதிப்பு ஏற்பட்டது. அங்கு 337 ‘பீடர்’களில் 28 ‘பீடர்’களும், விழுப்புரத்தில் 70 ‘பீடர்’களும் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. சென்னையில் 90 சதவீதம் மின் இணைப்பு வழங்கப்பட்டு விட்டது.

சென்னையைப் பொறுத்தவரை பெரும்பாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் இருப்பதால், அங்கு முழு அளவில் மின்விநியோகம் செய்ய முடியவில்லை. மின்வாரியமும், மாநகராட்சியும் மழைநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு உள்ளன. தண்ணீர் குறையக் குறைய படிப்படியாக மின்சாரம் வழங்கப்படும்.

இந்தப் புயலில் 144 மின்கம்பங்கள் மட்டுமே சேதம் அடைந்து உள்ளன. உயர்மின் அழுத்த தடத்தில் 11 கம்பங்களும், ஒரு துணைமின் நிலையமும் சேதம் அடைந்து உள்ளன. இந்த 16 மாவட்டங்களில் மொத்தம் 933 பீடர்களில் மட்டுமே மின் இணைப்பு வழங்க வேண்டி உள்ளது. அதில், 80 சதவீதம் இன்றைக்குள்ளும் (நேற்று), எஞ்சிய 20 சதவீதம் நாளைக்குள் (இன்று) வழங்கப்பட்டுவிடும்.

ரூ.1½ கோடி இழப்பு

‘நிவர்’ புயலால் மின்வாரிய கட்டமைப்புகள் சேதம் அடைந்தது குறித்து இதுவரை கணக்கிட்டதில் ரூ.1½ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. முழுமையான கணக்கு இன்னும் வரவில்லை. 4 துணை மின் நிலையங்களில் ஆள் பற்றாக்குறை காரணமாக இடைக்கால நிவாரணமாக தனியார் பராமரிப்புக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. தேவையான பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்ட பின் தனியாரிடம் இருந்து மீண்டும் மின்சார வாரியம் திரும்ப பெற்றுக்கொள்ளும். மின்வாரியம் நிச்சயமாக தனியார்மயம் ஆவதற்கு வாய்ப்பு இல்லை.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் பணியிடத்திற்கு 10 ஆயிரம் பேர் தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்தன. அதனை எதிர்த்து தொழிற்சங்கங்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். வழக்கு விசாரணைக்கு பின்னர் பணியிடங்கள் நிச்சயமாக நிரப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *