சட்டம் ஒழுங்கை திறம்பட கையாளுவதால், முதலீட்டிற்கான ஒரு முன்னணி இலக்காக உருவாகியுள்ளதுடன், மக்கள் அச்சமின்றி அமைதியாக வாழும் இடமாகவும் தமிழ்நாடு அமைந்துள்ளது. எனவே, மாநிலக் காவல் துறைக்கு போதிய அளவில் மனித வளங்கள், வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், மேம்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதில், இந்த அரசு முன்னுரிமை அளிக்கின்றது.
இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில், காவல் துறையை நவீனமயமாக்குதல் பணிகளுக்காக 100.02 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் காலிப் பணியிடங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளன. 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் இன்று வரையில் 65,503 காவல் துறை பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 10,329 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 2011–12ம் ஆண்டில் காவல்துறைக்கான வரவு–செலவுத் திட்ட நிதி ஒதுக்கம், 3,513.15 கோடி ரூபாயிலிருந்து 2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு–செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 9,567.93 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை, 19,142 தீ விபத்துக்கான அழைப்புகளையும், 32,264 மீட்புக்கான அழைப்புகளையும் ஏற்று, கால்நடைகள் மற்றும் உடைமைகள் உட்பட 2,129 உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. 2020–21ஆம் ஆண்டில் 11 புதிய தீயணைப்பு நிலையங்களை உருவாக்கியதுடன், சிவகாசி தீயணைப்பு மீட்பு நிலையத்தை தரம் உயர்த்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், மாநிலத்திலுள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களின் மொத்த எண்ணிக்கை 347ஆக அதிகரித்துள்ளது. 2021–22ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு 436.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சாலை பாதுகாப்பு
தமிழ்நாட்டில் சாலைப் பாதுகாப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்ததனால், 2016 ஆம் ஆண்டில் 17,218 ஆக இருந்த உயிரிழப்பிற்குக் காரணமான விபத்துகளின் எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 8,060 ஆகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு சாலை பாதுகாப்பு இயக்கம் தொடங்கப்பட்டு, காவல் துறை, போக்குவரத்து துறை, மாநில போக்குவரத்து துறை நிறுவனங்கள், நெடுஞ்சாலைத் துறை, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு, மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால், தேசிய மற்றும் உலகளவில்
பல விருதுகளை தமிழ்நாடு அரசு வென்றது. இந்த முயற்சிகள் முன்மாதிரியானவை எனப் பாராட்டப்பட்டுள்ளன.