நாடும் நடப்பும்

தமிழக பொருளாதார வளர்ச்சிக்கு புரட்சி திட்டங்கள்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எதிர்பார்க்கப்பட்டு இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை சமர்ப்பிக்க தயாராகி விட்டது.

பட்ஜெட்டில் சலுகைகள் ஏதும் இருக்காது. ஆனால் கடந்த ஆண்டின் பொருளாதார வீழ்ச்சியை சரி செய்யும் பல்வேறு அம்சங்கள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

கவர்னர் உரையுடன் இம்மாத துவக்கத்தில் துவங்கிய சட்டமன்ற பட்ஜெட் அறிவிப்பு கூட்டத்தொடர் துவங்கும் முன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி 34 முக்கிய முதலீடுகளுக்கு ஒப்புதல் தந்தது. புதிய தொழில் கொள்கையை சமர்ப்பிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

34 திட்டங்கள் மூலம் ரூ.52,257 கோடி முதலீடு மற்றும் 93,935 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளது.

அதில் முக்கியமானவை:–

* டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ.5,763 கோடி முதலீட்டில் 18,250 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க கிருஷ்ணகிரியில் கைபேசி உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம்.

* தைவானின் பெகாட்ரான் கார்ப்பரேஷன் ரூ.1,100 கோடி முதலீட்டில் 14,079 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் செங்கல்பட்டில் கைபேசிகள் உற்பத்தி திட்டம்.

* சன் எடிசன் நிறுவனம் ரூ.4,629 கோடி முதலீட்டில் 5,397 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் சூரிய ஒளி மின்னணுத் தொகுதி உற்பத்தி திட்டம்.

* ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சார்பில் ரூ.2,354 கோடியில் 2,182 பேருக்கு வேலை அளிக்க கிருஷ்ணகிரி பர்கூர் சிப்காட் தொழிற்பூங்காவில் மின் வாகனங்கள், மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.

* ஜெர்மனியை சேர்ந்த எய்க்காப் விண்டு நிறுவனம் சார்பில் ரூ.621 கோடியில் 319 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் சென்னை அருகே காற்றாலை மின்சக்தி திட்டம்.

* லூகாஸ் டிவிஎஸ் சார்பில் ரூ.2,500 கோடி முதலீட்டில் 3,500 பேருக்கு வேலை அளிக்கும் விதமாக திருவள்ளூரில் லித்தியம் அயன் மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.

* டேட்டா பேட்டன்ஸ் நிறுவனம் ரூ.303 கோடியில் 703 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் தமிழக பாதுகாப்பு தொழில் பெருவழிச்சாலை, சென்னை முனையத்தில் பாதுகாப்பு, விண்வெளி தொடர்பான தயாரிப்புகள் திட்டம்.

முதலீட்டாளர்களின் தேவையை கருத்தில் கொண்டு தொகுப்பு சலுகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில முதலீடுகளில் பூர்வாங்கப் பணிகளை தொடங்க ஏதுவாக தொகுப்பு சலுகை இல்லாத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்போது அமைச்சரவை ஒப்புதலுடன் சட்டப்பூர்வ பிணைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்படுத்தப்படும். அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்ட தமிழ்நாடு தொழில் கொள்கை – 2021 விரைவில் வெளியிடப்படும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் துபாய், லண்டன், அமெரிக்கா நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்குள்ள தொழில் வல்லுனர்களுடன் கலந்துரையாடியும் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தின் சிறப்புகளை விவரித்ததாலும் உருவான சிறப்பு திட்டங்கள் விரைவில் செயல்வடிவம் பெற இருப்பது தமிழகத்தின் அடுத்த கட்ட பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *