வர்த்தகம்

கிரானைட் தொழிலுக்கு புத்துயிர்: மத்திய – மாநில அரசுகளுக்கு தென்னிந்திய தொழில்துறை சங்கம் கோரிக்கை

சென்னை, நவ.24-

அனைத்து மாநிலங்களிலும் கிரானைட் தொழில் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் அளித்து, லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தென்னிந்திய தொழில்துறை சங்கத்தின் தலைவர் பி.ராஜசேகரன் கேட்டுக் கொண்டார்.

பல்லாயிரங்கணக்கான கிராமப்புற தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, அந்நிய செலவாணி இழப்பு, மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய ராயல்டி இழப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு புத்துயிர் அளித்திட வேண்டுகிறோம் என்றார்.

பி.ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் கூறுகையில், மதுரை மாவட்டத்தில், கடந்த 2012 ம் ஆண்டில் 175 கிரானைட் குவாரிகள் அரசு அனுமதி வழங்கி செயல்பட்டு வந்தன. இதில் 84 கிரானைட் குவாரிகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மாவட்ட கலெக்டரால் விளக்கம் கேட்கும் குறிப்பாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், மீதமுள்ள 91 கிரானைட் குவாரிகளை இயங்கவிடாமல் முடக்கியதன் காரணமாக இழப்புகள் ஏற்பட்டன. கிரானைட் குவாரிகளில் வேலைப்பார்த்து வந்த தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். அவர்களது குடும்பங்கள் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி தொழில் நடைபெற்ற 2011 -12ம் ஆண்டில் கனிம உரிமத் தொகையாக ரூ.26 கோடி அரசுக்கு செலுத்தப்பட்டது. இதை கருத்தில் கொண்டு பார்த்தால், கடந்த 8 ஆண்டுகளில் அரசிற்கு கிடைக்க வேண்டிய வருவாயில் ரூ.212 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுமட்டுமல்லாது, மத்திய அரசிற்கு அந்நிய செலவாணி சுமார் ரூ.3ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்திய அரசின் புள்ளி விவரப்படி 1996 -97 முதல் 2012 -13 வரையிலான 17 ஆண்டுகளுக்கு மதுரை மாவட்டத்தில் இருந்து ரூ.2,978 கோடி அளவிற்கு மட்டுமே கிரானைட் ஏற்றுமதி நடந்துள்ளது. மற்ற மாநிலங்களில் விதிமீறல் குற்றச்சாட்டு உள்ள தனியார் மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையிலும் தொழில் நடந்துவருகிறது. இதன் மூலம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எந்தவித இடையூறும் இல்லாமல் செயல்பட அரசால் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *