செய்திகள்

பிரதமரின் ஏழை நலத்திட்ட உதவி திட்டங்கள் விழிப்புணர்வுக்கு மாநில தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராமன் நியமனம்

சென்னை, நவ. 21

பிரதமரின் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தும் பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரச்சார் அபியான் என்னும் தன்னார்வ அமைப்பின் மாநிலத் தலைவராக முன்னாள் அரசு உயர் அதிகாரி ராஜாராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏழை-எளிய மக்களுக்கு உதவும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி, 137 சிறப்புச் செயல் திட்டங்களை உருவாக்கி அதனை தனது அலுவலகத்தின் மூலம் நேரடியாக நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகிறார்.

விவசாயிகளுக்கு நிதி உதவி, பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் இவ்வமைப்பின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களைச் செயல்படுத்த ஜன் கல்யாண்காரி யோஜனா தன்னார்வ அமைப்பையும் பிரதமர் உருவாக்கி உள்ளார். பிரஹலாத் மோடி இதன் தேசியத் தலைவராக நியமித்து அரசியல் சாராத நிபுணர்களைக் கொண்டு இத்திட்டங்களை பொது மக்களிடம் எடுத்துச் சென்று வருகிறார்.

தற்போது தமிழகத்திலும் அமல் செய்யும்பொருட்டு, ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ராஜாராமன் இவ்வமைப்பின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் வணிக வரித் துறையின் கூடுதல் ஆணையராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் விவசாயத் தொழிலில் திறமை பெற்ற தொழிலதிபர் முரளிதரன் மாநிலப் பொதுச் செயலாளராகவும், விளம்பரத்துறையில் பிரசித்தி பெற்ற மோகன் குமார் ரெட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் புதிய பொறுப்பு குறித்து கருத்துத் தெரிவித்த ராஜாராமன், தமிழகத்தின் கிராமப்புறங்களில் உள்ள ஏழை-எளிய மக்களுக்கு பிரதமரின் செயல் திட்டங்களை எடுத்துச் செல்கிற மிகப்பெரிய பொறுப்பு எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் – மாவட்டம், பேரூராட்சி, ஊராட்சி, கிராமம் வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து அவர்கள் நேரடியாகவும், ஆங்காங்கே உள்ள தன்னார்வ அமைப்புகளின் மூலமும் இந்தத் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, உரிய பயனாளர்களுக்கு உதவிகள் சென்றடைவதை உறுதிப்படுத்துவார்.

அடுத்த ஆண்டு (2021) ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 மாதங்களில், தமிழகத்தில் குறைந்தபட்சம் 2 லட்சம் மக்களுக்கு இத்திட்டத்தின் பயன்கள் சென்றடைய இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார் ராஜாராமன்.

ராஜாராமனை 82483 68782. என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *