செய்திகள்

கொரோனாப் பரவல் குறைந்தாலும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது

நியூயார்க், பிப். 15–

கொரோனா வைரஸ் பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கூடாது, அதற்கான தருணம் இன்னும் வரவில்லை என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

உலகுக்குப் பெரும் சவாலாக அமைந்த கொரோனா வைரஸ், கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் முதன்முதலாக வெளிப்பட்டது. அந்த வைரஸின் சீற்றம், அது தோன்றி ஓராண்டு கடந்துவிட்ட நிலையில் இப்போது தணியத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவல் பல நாடுகளிலும் குறைந்து வருகிறது. இது உலக நாடுகளையெல்லாம் நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளது.

இந்த நிலையில் உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதனோம், “தொடர்ந்து நான்காவது வாரமாக, கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவல், உலக அளவில் குறைந்து இருக்கிறது. அதுமட்டுமின்றி தொடர்ந்து இரண்டாவது வாரமாக கொரோனா உயிர்ப்பலி எண்ணிக்கை சரிந்துள்ளது.

தளர்த்துவது சரியல்ல

பல நாடுகளிலும் பொது சுகாதார நடவடிக்கைகளை மிக தீவிரமாக நடைமுறைப்படுத்தி உள்ளதின் விளைவுதான் இது என்று தோன்றுகிறது. இதற்காக நாம் ஊக்கம் அடையலாம். ஆனால், இதில் மன நிறைவு கொள்வது என்பது அந்த வைரஸைப் போலவே ஆபத்தானது என்று எச்சரித்துள்ளார்.

மேலும், “தற்போது கட்டுப்பாடுகளை தளர்த்தும் தருணம் எந்த நாட்டுக்கும் வரவில்லை. எனவே கட்டுப்பாடுகளைத் தளர்த்தக் கூடாது. அதேபோன்று எந்த தனிநபரும் கொரோனா கால பாதுகாப்பு அம்சங்களை குறைப்பதற்கான தருணமும் இது அல்ல. தடுப்பூசிகள் தயாரிப்பு தொடங்கி உள்ள நிலையில் நேர்ந்துள்ள ஒவ்வொரு உயிரிழப்பும் மிகுந்த சோகத்துக்குரியதுதான்.

கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் பற்றி ஆராய ஊகான் நகருக்கு உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு அண்மையில் சென்றது. அவர்கள் கண்டறிந்துள்ளவை குறித்து அடுத்த வாரம் அறிக்கை வெளியிடுவார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *