சென்னை, ஜன.27
அரசுத் துறைகளின் செயல்பாடுகளை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் வரிசையில், காவல், சுகாதாரத் துறைகளுக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
குடியரசு தின விழா அணிவகுப்பின்போது, அரசுத் துறைகளில் அறிவிக்கப்படும் திட்டங்களைத் தாங்கி அலங்கார ஊர்திகள் அணிவகுப்பது வழக்கம். நேற்று நடைபெற்ற விழாவில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, காவல்துறை, பள்ளிக் கல்வி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை ஆகிய 17 துறைகளைச் சேர்ந்த ஊர்திகள் அணிவகுத்தன.
இவற்றில், ட்ரோன் கேமராக்கள், கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு போன்ற செயல்பாடுகளை விளக்கி காவல் துறையும், 7.5 சதவீத மருத்துவ இடஒதுக்கீட்டால் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நன்மை கிடைத்துள்ளதைத் தெரிவித்து சுகாதாரத் துறையும் அணிவகுப்பு ஊர்தியை அமைத்திருந்தன. இந்த இரண்டு துறைகளுக்கும் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது.
பசுமை வீடுகள் திட்டம் போன்ற திட்டங்களை விளக்கி அணிவகுத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு இரண்டாவது பரிசும், ரோபோ, பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி போன்ற திட்டங்களால் பயன் கிடைத்ததை விளக்கிய தகவல் தொழில்நுட்பவியல் துறை, மாமல்லபுரம் முகப்பைத் தாங்கி வந்த சுற்றுலாத் துறை ஆகியவற்றுக்கு மூன்றாம் பரிசு அறிவிக்கப்பட்டது.
அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளில் முதல் மூன்று இடங்களைத் தேர்வு செய்யும் நடுவர் குழுவின் தலைவராக, சட்டசபை தலைவர் ப.தனபால் இருந்தார்.
அணிவகுப்பு ஊர்திகளுக்கான பரிசுகள் கவர்னர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்து நிகழ்ச்சியின் போது அளிக்கப்படுவது வழக்கம். நிகழாண்டு கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு காரணமாக, தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், பரிசுகள் வேறொரு நாளில் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.