மும்பை, டிச.4–
குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெபோ) மாற்றமில்லாமல் 4 சதவீமாக தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின் சக்தி காந்ததாஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது:
”குறுகியகால வங்கிக் கடனுக்கான வட்டி வீதம் மாற்றமில்லாமல் 4 சதவீதமாகவே தொடரட்டும் என்று நிதிக்கொள்கைக் குழுவில் ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கி ரெபோ விகிதம் 3.35 சதவீதமாகவே தொடரும்.
பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் ரெபோ விகிதத்தை மார்ச் மாதத்திலிருந்து 115 புள்ளிகளைக் குறைத்துள்ளோம்.
நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் பொருளாதார வளர்ச்சி சாதகமாக இருக்கும் என்று கணித்துள்ளோம். முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 23.9 சதவீதமாக வீழ்ச்சி அடைந்தது. 2-வது காலாண்டில் மைனஸ் 7.5 சதவீதம் வீழ்ச்சி அடையும் என்று கணித்தோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் இந்த பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாக நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும். இதற்கு முன் மைனஸ் 9.5 சதவீதமாக வீழ்ச்சி அடையும் எனக் கணித்திருந்தோம்.
3-வது காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.1 சதவீதமும், கடைசிக் காலாண்டில் 0.7 சதவீதமும் வளர்ச்சி அடையக்கூடும். நடப்பு நிதியாண்டின் 2-வது பகுதியில் சாதகமான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம்”.
இவ்வாறு சக்தி காந்ததாஸ் தெரிவித்தார்.