செய்திகள்

புள்ளி விவரங்களுடன் சாதனைகள் சொல்லி ஸ்டாலினுக்கு எடப்பாடி காட்டமான பதில்

சேலம், ஜன.22–

அம்மாவின் ஆட்சியில் செய்த சாதனைகள் ஒவ்வொன்றையும் புள்ளி விவரங்களுடன் பட்டியலிட்டு ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக பதிலளித்தார்.

சேலம் ஆத்தூரில் நடந்த பிரமாண்டமான எம்.ஜி.ஆர். 103வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். வெள்ளமென திரண்டிருந்த மக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:–

இன்றைக்கு ஸ்டாலின் இந்த ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை, எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று சொல்கிறார். அற்புதமான பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். அதில் ஒரு சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

வேளாண்மைத் துறையில் 100 மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தியை தொடர்ந்து செய்து தேசிய அளவில் கிருஷி கர்மான் விருதுகளை பெற்ற மாநிலம் தமிழ்நாடு. தலைவாசல், ஆத்தூர் பகுதிகளில் மக்காச்சோளம் அதிகமாக விளைகின்றது. கடந்த ஆண்டு அமெரிக்கன் படைப்புழு மக்காச்சோளப் பயிர்களை தாக்கியதால் விவசாயிகள் நஷ்டம் அடைந்தார்கள். உடனே 186 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கிய அரசு அம்மாவினுடைய அரசு. பருவமழை பொழிகின்றபொழுது கெங்கவள்ளி, ஆத்தூர், சேலம் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், அரியலூர் மாவட்டம், கடலூர் மாவட்டம், கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் நல்ல பருவமழை பெய்ததன் விளைவாக மக்காச்சோளம் நன்றாக இருந்தது, அங்கேயும் படைப்புழு தாக்கியது. அரசின் கவனத்திற்கு இது வந்தவுடன், நான் உடனே அதிகாரிகளை கூப்பிட்டு, அரசாங்கமே பூச்சிக் கொல்லி மருந்தை அடிக்கும் என்ற அறிவிப்பைக் கொடுத்து அதற்காக 47 கோடி ரூபாய் அரசாங்கம் செலவழித்தது. விவசாயிகளுக்கு பாதிப்பு என்றால் ஓடோடி வந்து உதவக்கூடிய ஒரே அரசு, அண்ணா தி.மு.க. அரசு, அம்மாவினுடைய அரசு.

சாதனைகள்

நுண்ணீர் பாசனத்திற்கு அம்மாவினுடைய அரசு 701 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது. இதனால் 1 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள். இதை எதற்காக சொல்கிறேனென்றால், ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும், எந்தெந்த வகையில், எந்தெந்த துறை வாயிலாக மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்பதை நான் முதலமைச்சர் என்ற அடிப்படையில் புள்ளி விவரத்தோடு எடுத்துச் சொன்னால்தான் இந்த அரசு என்ன சாதனை புரிந்திருக்கிறது.

வெள்ளம் வந்தால் நிவாரணம், வறட்சி வந்தால் நிவாரணம், இதெல்லாம் எந்த அரசாங்கத்தில் கிடைத்தது? அம்மாவினுடைய அரசாங்கத்தில் தான் விவசாயிகளுக்குக் கிடைத்தது. இன்றைக்கு பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக சுமார் ரூபாய் 7300 கோடி வாங்கிக் கொடுத்திருக்கிறோம். இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக விவசாயிகளுக்கு இழப்பீட்டை அதிகமாக பெற்றுத் தந்த ஒரே அரசு அம்மாவின் அரசு

இதெல்லாம் சாதனை இல்லையா? இதெல்லாம் மக்களுக்கு செய்யும் நன்மை இல்லையா? விவசாயிகளுக்கு செய்யும் பயனல்லவா? உங்களைப் போல் பொய் வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றவுடன், நாங்கள் ஆட்சியில் அமரவில்லை, அதனால் நாங்கள் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று பச்சைப் பொய் பேசுகின்ற கட்சி அண்ணா தி.மு.க. அல்ல. எதைச் சொல்கின்றோமோ அதை நிறைவேற்றுவோம்.

வெள்ளாடுகள்

தமிழ்நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் உபதொழிலானது கால்நடை வளர்ப்பு. அந்த கால்நடைகளுக்கு நோய்வாய் ஏற்பட்டால் அங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக அம்மா இருக்கும்பொழுது, அம்மா மறைவிற்குப் பிறகு, சுமார் 8 ஆண்டுகளில் 1080 புதிய கால்நடை மருந்தகங்களை துவக்கி, விவசாயிகளுக்கு உற்ற நண்பனாக இருக்கும் அரசு அம்மாவினுடைய அரசு. இன்றைக்கு 18 கால்நடை மருத்துவமனை, சுமார் 10.2 லட்சம் பயனாளிகளுக்கு சுமார் 41 லட்சம் வெள்ளாடுகளை அம்மாவின் அரசு கொடுத்திருக்கிறது.

எங்களால் கொடுக்கப்பட்ட ஆடுகள் 72 லட்சம் குட்டிகளை ஈன்று இருக்கின்றன. அப்படியென்றால் எந்தளவிற்கு பொருளாதார மேம்பாடு அடைந்திருக்கிறதென்று பாருங்கள். அம்மா தொலைநோக்குச் சிந்தனையோடு இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து கிராமத்தில் வாழ்கின்ற விவசாயி பெண் தொழிலாளிகளுக்கு இந்த விலையில்லா ஆடுகளைக் கொடுத்து அதை வளர்ப்பதன் மூலமாக அந்த ஆடுகள் குட்டிகளை ஈன்று அந்தக் குட்டிகள் மூலமாக பொருளாதார மேம்பாடு அடைய வேண்டுமென்பதற்காக அம்மா கொண்டு வந்த சிறப்பான திட்டம் இந்தத் திட்டம். அதேபோல கறவை மாடுகளுக்கு ரூபாய் 1942 கோடி அம்மா கொடுத்திருக்கின்றார். 87,480 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடியில் கால்நடை பூங்கா

நம்முடைய ஆத்தூருக்குப் பக்கத்தில் இருக்கும் தலைவாசல் கூட்டு ரோட்டில் 1866 ஏக்கர் நிலத்தில், ஆசியாக் கண்டத்திலேயே மிகப் பிரம்மாண்டமான கால்நடைப் பூங்கா ரூபாய் 1000 கோடியில் உருவாக்கவிருக்கிறோம். வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி நான் அடிக்கல் நாட்டவிருக்கின்றேன். இந்த பூமி விவசாயிகள் நிறைந்த பூமி. விவசாயிகளுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்பதற்காக இந்தக் கால்நடைப் பூங்காவிற்கு அரசின் சார்பாக 7ம் தேதி காலை 9 மணிக்கு என்னால் அடிக்கல் நாட்டப்படும்.

இந்தக் கால்நடைப் பூங்காவில் முதன்முதலாக கால்நடை மருத்துவக் கல்லூரி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் கொண்டு வருகிறோம். அதுமட்டுமல்லாமல், அங்கே ஆடுகள், கோழிகளை நவீன முறையில் பதப்படுத்துதல், அந்த ஆடுகளை எலும்பு தனியாக, கறி தனியாக எடுத்து, அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்புவது, கோழிகளுக்கென்று தனியாக ஒரு பகுதியை உருவாக்கி தரமான நாட்டுக் கோழி கறிகளை நீங்கள் சாப்பிடுவதற்கு உருவாக்கி தருகிறோம். அதுமட்டுமல்ல, விவசாயிக்கு எந்தக் கன்று வேண்டுமோ அந்தக் கன்றை ஈன்றுக் கொடுக்கின்ற அளவிற்கு நவீன முறையிலான ரூபாய் 100 கோடி மதிப்பீட்டில் திட்டம் கொண்டு வருகின்றோம். நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்கும் இந்த ஆராய்ச்சி நிலையம் பயன்படுகிறது. நாட்டு இன காளைகளை பாதுகாக்கப் பயன்படுகிறது. அருமையான ஜல்லிக்கட்டு காளை வேண்டுமானால் அங்கேயே உருவாக்கித் தருவார்கள்.

நவீன அரசு

அண்ணா தி.மு.க. அரசு விஞ்ஞான முறைப்படி இன்றைக்கு நவீன அரசாக இருந்து கொண்டிருக்கிறது. விவசாயிகளின் எண்ணத்தை ஈடேற்றுகின்ற அரசாக எங்களுடைய அரசு இருந்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, அங்கே 6 ஏக்கரில் பூங்கா உருவாக்குகின்றோம். பிரம்மாண்டமான கேன்டீன் உருவாக்கவிருக்கின்றோம். பிரம்மாண்டமான நவீன கட்டடம் தலைவாசல் கூட்டு ரோட்டுப் பகுதியில் உருவாக்கவிருக்கின்றோம் என்பதை பெரும் மகிழ்ச்சியோடு இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறோம். இது ஆத்தூருக்கு அருகில் உள்ளது. கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் தான் உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் வளர்ச்சி அடையும். அப்படிப்பட்ட நிலையை நாங்கள் உருவாக்கித் தரவிருக்கின்றோம்.

11 மருத்துவ கல்லூரிகள்

கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லூரி ஒன்று வரவிருக்கிறது. ஆத்தூரிலிருந்து சேலத்திற்கும் மையம், ஆத்தூரிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்வதற்கும் மையம். இடையிலே நீங்கள் இருப்பதினால் இரண்டு பகுதிக்கும் நீங்கள் செல்லலாம். மருத்துவ சிகிச்சை பெறுவதற்கு சேலத்திற்கும் போகலாம், கள்ளக்குறிச்சிக்கும் போகலாம். இதைவிட என்ன வசதி வேண்டும்? அதுமட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஏற்கனவே ஒரே ஆண்டில் 9 அரசு மருத்துவக் கல்லூரி உருவாக்கித் தந்த அரசு அம்மாவினுடைய அரசு. இப்பொழுது கள்ளக்குறிச்சி மற்றும் அரியலூரில் 2 மருத்துவக் கல்லூரி வரவிருக்கிறது, ஆக மொத்தம் 11 அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வந்த அரசு அம்மாவினுடைய அரசு. தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்தார்களா?

என்ன செய்தீர்கள்?

மத்தியிலே 13 ஆண்டு காலம் ஆட்சி, அதிகாரத்தில் இருந்தீர்களே, என்ன தொழிற்சாலை கொண்டு வந்தீர்கள்? என்ன திட்டத்தை கொண்டு வந்தீர்கள்? எதுவும் கொண்டு வரவில்லை, தங்களது குடும்பம் வாழ்ந்தால் போதும், குடும்பம் அதிகாரத்திற்கு வந்தால் போதும், அது தான் தி.மு.க.வின் மறைந்த தலைவர் கருணாநிதியும் சரி, இப்பொழுது இருக்கின்ற ஸ்டாலினும் சரி. அது தான் அவர்களின் எண்ண ஓட்டம். தங்கள் குடும்பங்களில் இருப்பவர்களே பதவிக்கு வர வேண்டும். தமிழகத்தில் மட்டுமல்லாமல், மத்தியில் அதிகாரத்தில் வந்தாலும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் வருவார்கள். வேறு எவரையும் விட மாட்டார்கள்.

13 ஆண்டு காலம் மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்களே, தமிழகத்திற்கு என்ன நன்மை செய்தீர்கள்? எதுவும் கிடையாது. தேவையான நிதிகளை கொடுத்தீர்களா? இல்லை. புதிய, புதிய சாலைகளை கொடுத்தீர்களா? அதுவும் இல்லை. எதையும் கொண்டு வரவில்லை.

அம்மா கண்ட கனவு எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் கொண்டு வருவோம் என்று சொன்னோம், கொண்டு வந்தோம். எவற்றையெல்லாம் அண்ணா தி.மு.க. அரசு சொன்னதோ அதையெல்லாம் சாதித்துக் கொண்டிருக்கக்கூடிய அரசாக அம்மா அரசு இருக்கிறது. இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லும் ஸ்டாலின், இந்த ஆட்சியில் இவ்வளவும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், இன்றைக்கு எவ்வளவோ துறைகள் இருந்தாலும், அனைத்துத் துறைகளைக் காட்டிலும் கல்வித் துறைக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.

கல்வி துறையில் அதிக அக்கறை

கல்வியில் சிறந்து ஒரு மாநிலம் திகழ்ந்தால் அந்த மாநிலம் தானாக அனைத்த வளங்களும் பெறும். ஆகவே, அம்மா இருந்தபொழுதே கல்விக்கு அதிகமான நிதி ஒதுக்கினார். அதே வழியைப் பின்பற்றி அம்மாவின் அரசு கல்விக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்து இன்றைக்கு ஏராளமான கல்லூரிகளை திறந்திருக்கின்றோம், பள்ளிகளைத் துவக்கியிருக்கின்றோம். அம்மா இருந்த காலத்திலிருந்து இன்று வரை, 248 புதிய ஆரம்பப் பள்ளிகள் எங்களால் உருவாக்கப்பட்டுள்ளன, 117 துவக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், 1079 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 604 உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இவற்றையெல்லாம் எதற்காகச் சொல்கின்றேனென்று சொன்னால், ஆங்காங்கே பள்ளிகள் துவங்குவதன் வாயிலாக அந்தப் பகுதிகளில் இருக்கின்ற மாணவச் செல்வங்கள் அதிகளவில் கல்வி கற்பார்கள். அதனால், மாணவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் என்ற அடிப்படையில் அம்மாவின் அரசு ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி அனைத்தும் அளித்து கல்வியிலே ஒரு சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல், 43,584 ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்பிய அரசு அம்மாவினுடைய அரசு. படிக்கின்ற மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி கற்க வேண்டுமென்பதற்காக அம்மாவினுடைய அரசு மடிக்கணினி வழங்கியிருக்கிறது. தொலைநோக்குச் சிந்தனையோடு, உலகத் தரத்திற்கேற்ற அறிவுப்பூர்வமான விஞ்ஞானக் கல்வி, வெளிநாட்டில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கக்கூடிய கல்வியை நம்முடைய குடிசையில் இருக்கின்ற மாணவனுக்கும் கிடைக்க வேண்டுமென்பதற்காக அம்மா ஒவ்வொரு மாணவனுக்கும் சுமார் ரூபாய் 12 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினி கொடுத்தார். இதுவரைக்கும் 48 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்குக் கொடுத்திருக்கின்றோம். இவையெல்லாம் சாதனை இல்லையா? உங்களுடைய ஆட்சிக் காலத்தில் கொடுத்தீர்களா? ஒரு மடிக்கணினி ரூபாய் 12 ஆயிரம். அதற்காக மட்டும் அம்மாவினுடைய அரசு ஆயிரக்கணக்கான கோடியை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. கிராமத்திலே வாழ்கின்ற மாணவன்கூட உன்னத நிலைக்கு வரமுடியும், வேலை வாய்ப்பைப் பெறமுடியும்.

உயர்கல்வி படிப்பவர் அதிகம்

அம்மா இருந்த வரை 65 அரசு கலை மற்றும் அறிவியல் கொடுத்தார். அம்மா மறைவிற்குப் பிறகு 12 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைக் கொடுத்து மொத்தம் 77 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை கொடுத்து, தமிழகத்தில் அதிகமான ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை அம்மாவினுடைய அரசு தான் உருவாக்கியுள்ளது. அதனால் தான் இன்றைக்கு தேசிய அளவில் உயர்கல்வி படிக்கக்கூடியவர்கள் எண்ணிக்கை 26.3 சதவிகிதம், தமிழ்நாட்டில் 49 சதவிகிதம்.

தி.மு.க.வின் ஆட்சிக்குப் பிறகு 2011ல் அம்மா முதலமைச்சராக அமர்ந்தபொழுது நூற்றுக்கு 34 பேர் படித்துக் கொண்டிருந்தார்கள். இன்றையதினம் அம்மா எடுத்த அறிவுப்பூர்வமான நடவடிக்கையின் காரணமாக கல்வியிலே புரட்சி, மறுமலர்ச்சி ஏற்பட்டதன் காரணமாக அதைத் தொடர்ந்து அம்மாவினுடைய அரசு கடைபிடித்ததன் விளைவாக இன்றைக்கு 49 சதவிகிதம் உயர்கல்வி படிக்கக்கூடிய சூழ்நிலையை அம்மாவின் அரசு உருவாக்கித் தந்துள்ளது.

உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை மூலமாக, நான் ஏற்கனவே பல கூட்டங்களில் பேசியுள்ளேன், இரண்டு கைகளை இழந்த தொழிலாளி இரண்டு கைகளையும் பொருத்த வேண்டுமென்று என்னிடத்தில் மனு கொடுத்தார். மனுவை படித்த பின்பு எப்படி இரண்டு கைகளையும் இழந்தவருக்குப் பொருத்த முடியும் என்று கேட்டேன். முதலமைச்சர் சொன்னால் இரண்டு கைகளையும் பொருத்தலாம் என்று மருத்துவர்கள் சொன்னார்கள் என்றார். நான் சொல்லிவிடுவேன், ஏதாவது பிரச்சினை என்று வந்தால் எதிர்க்கட்சிக்காரர்கள் அதை அரசியல் ஆக்கிவிடுவார்கள், நன்றாக யோசனை செய்து சொல்லச் சொன்னேன்.

மருத்துவ துறையில் சாதனை

உடனே, சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர்.விஜயபாஸ்கரை அழைத்து இரண்டு கைகளையும் பொருத்துவது சாத்தியமா என்றவுடன், மருத்துவக் குழுவினரை அழைத்துக் கேட்டவுடன், மருத்துவர்களும் பொருத்தி சாதனை படைக்கலாம் என்று ஊக்கமும், ஆக்கமும் கொடுத்து அவருக்கு இரண்டு கைகளும் பொருத்தினார்கள். ஸ்டாலினுக்கு, எங்களுடைய நிர்வாகம் எப்படிப்பட்ட நிர்வாகம் என்பதற்கு இதைவிட என்ன சான்று வேண்டும்? தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மருத்துவத் துறையில், கிராமங்களில் வாழ்கின்ற மக்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டுமென்பதற்காக 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாகக் தொடங்கப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை 30 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது 162. இவையெல்லாம் சாதனை. புதிதாக 12,829 மருத்துவர்கள், 12,430 செவிலியர்கள், 6,363 இதர மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 22.2 லட்சம் அம்மா பரிசுப் பெட்டகம், 416 நடமாடும் மருத்துவக் குழுக்கள் என பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தியிருக்கிறோம்.

5 முறை தேசிய விருது

உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் தொடர்ந்து 5 முறை தேசிய விருது அம்மாவினுடைய அரசு பெற்றுள்ளது. உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையில் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பது தமிழ்நாடு

தாலிக்குத் தங்கம் 11.46 லட்சம் நபர்களுக்கு கொடுத்திருக்கின்றோம். ரூபாய் 1500 கோடி மதிப்புள்ள தங்கம் 5,261 கிலோ கொடுத்திருக்கின்றோம். அதுமட்டுமல்லாமல் அதற்காக ரூபாய் 3,950 கோடி நிதியுதவி கொடுத்து மொத்தம் தங்கமும், தாலிக்குத் தங்கம் மற்றும் திருமண உதவித் திட்டம் இரண்டும் சேர்த்து ரூபாய் 5,450 கோடி ஏழை, எளிய குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு அம்மாவினுடைய அரசு கொடுத்திருக்கிறது. இவையெல்லாம் ஸ்டாலினுக்கு தெரிந்திருக்க அவசியமே இல்லை. ஏனென்றால் அவர் நிர்வாகத் திறமையில்லாத ஒரு தலைவர். இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம், இதை செயல்படாத அரசு என்கிறார். சாதனை மேல் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறோம். எவ்வளவு விருதுகள்? அத்தனைத் துறைகளிலும் விருதுகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். சாதாரண விருதுகள் அல்ல.

உள்ளாட்சி துறையில் 104 தேசிய விருது

உள்ளாட்சித் துறையில் மட்டும் 104 தேசிய விருதுகளைப் பெற்றிருக்கின்றோம். மின்சாரம், சமூகநலம், கல்வி, போக்குவரத்துத் துறைகளில் விருதுகள் பெற்றுள்ளோம். சாலைப் பாதுகாப்பு சிறந்த முறையில் செயல்படுத்தியமைக்கு விருதுகளைப் பெற்றிருக்கின்றோம். இவ்வாறு துறைவாரியாக விருதுகளைப் பெற்ற ஒரே அரசு அம்மாவினுடைய அரசு என்பதை நிலைநாட்டியிருக்கின்றோம்.

இந்த அரசைப் பொறுத்தவரைக்கும் எம்.ஜி.ஆர்., அம்மா என்னென்ன திட்டங்கள் நாட்டு மக்களுக்கு வர வேண்டுமென்று எண்ணி கொண்டு வந்தார்களோ அத்தனைத் திட்டங்களையும் சிந்தாமல், சிதறாமல் இல்லம் சென்று சேரும் அளவிற்கு நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.

இந்தியாவிலேயே ஆளுமை மிக்க முதல் மாநிலம் தமிழ்நாடு. இந்தியாவிலேயே தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற வேண்டுமென்று எண்ணினார்கள், அந்த எண்ணத்தை எங்களுடைய அரசு நிறைவேற்றியுள்ளது. இதைக்கூட ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஏதேதோ பேசுகிறார். ஏதோ, பாரதீய ஜனதா கட்சியுடன் நாம் இருப்பதினால் நமக்கு இந்த ஆளுமை மிக்க முதல் மாநிலம் என்று கொடுத்திருக்கின்றார்களாம். எவ்வளவு பெரிய பச்சைப் பொய், பொய் பேசுவதற்கு அளவு வேண்டாமா? கொடுக்க முடியுமா? ஒவ்வொரு துறையிலும் சர்வே செய்து, அந்தத் துறைக்கு மதிப்பெண்கள் கொடுத்து அதனடிப்படையில் தான் ஒரு மாநிலத்தைத் தேர்ந்தெடுக்கின்றார்கள். ஒரு எதிர்க்கட்சித் தலைவருக்கு இதுகூட தெரியவில்லை, என்ன செய்வது? அம்மாவின் அரசைப் பொறுத்தவரைக்கும் நிர்வாகத் திறன் மிக்க அரசு என்பதை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றோம்.

சட்டம் ஒழுங்கு சிறப்பாக பராமரிப்பு

சட்டம்–ஒழுங்கு தமிழ்நாட்டில் கெட்டுப் போய் விட்டதென்று ஸ்டாலின் சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் சட்டம்–ஒழுங்கு சிறப்பாக இருக்கின்ற மாநிலம் தமிழ்நாடு, சட்டம்–ஒழுங்கைப் பேணிக் காக்கின்ற முதன்மை மாநிலம் தமிழ்நாடு. இந்தியா டுடே என்ற பிரபலமான ஆங்கில நாளேடு கடந்த ஆண்டு இந்தியாவிலே சட்டம்–ஒழுங்கை பராமரிப்பதில் முதல் மாநிலம் என்று தேர்வு செய்யப்பட்டு நானே டெல்லி சென்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, நம்முடைய துணை ஜனாதிபதியின் திருக்கரங்களால் அந்த விருதுகளைப் பெற்றேன். இந்த ஆண்டும் தொடர்ந்து இந்தியாவிலேயே சட்டம்–ஒழுங்கு பராமரிப்பில் முதலிடம் வகிப்பது தமிழ்நாடு என்று மீன்வளத் துறை அமைச்சர் சென்று அந்த விருதை பெற்று வந்திருக்கிறார். அப்படியென்றால் எந்த அளவிற்கு சட்டம்–ஒழுங்கு பேணிக் காக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஆளுமை திறன்மிக்க மாநிலம் என்று தமிழகத்தை தேர்ந்தெடுக்கின்றபொழுது, சட்டம்–ஒழுங்கும் சிறப்பாக இருக்கிறது என்று, முதன்மை மாநிலம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஸ்டாலினுக்கு தாங்க முடியவில்லை

இதை ஸ்டாலினால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஏனென்றால் அவர் கண்ட கனவு வேறு, நடப்பது வேறு. இவ்வளவு அழகாக, சிறப்பாக இந்த ஆட்சி நடக்குமா என்று அவர் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், இன்றைக்கு சிறப்பான ஆட்சியை அம்மாவின் அரசு தந்து கொண்டிருக்கிறது.

இன்னொன்றையும் சொன்னார். அண்மையில் கன்னியாகுமரியில் சோதனைச் சாவடியில் ஒரு காவல் துறை அதிகாரியை சுட்டு கொன்றார்கள். அது யார் என்று அடையாளம் தெரியாது என்று சொன்னார்இ அடையாளம் கண்டுபிடித்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். காவல் துறை விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இன்றைக்கு அப்படி சம்பவம் நடந்துவிட்டது என்று சொல்கிறார். இதே தி.மு.க. ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில் தென்காசி–அம்பாசமுத்திரம் சாலையில் கூலிப்படையால் வெடிகுண்டு வீசி, அரிவாளால் வெட்டப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வெற்றிவேல், வெட்டப்பட்டு ரோட்டில் குண்டடிப்பட்டுக் கிடக்கிறார். அப்போது வழியில் இரண்டு தி.மு.க. அமைச்சர்கள் செல்கிறார்கள், போகும்போது அதைப் பார்த்து நிறுத்துகிறார்கள், குடிக்க தண்ணீர் வேண்டுமென்று கேட்டார். எனக்கு தண்ணீர் வேண்டும் என்று கேட்கிறார், அது கூட கொடுக்க வக்கில்லாத கட்சி தி.மு.க. ஆட்சியில் அங்கம் வகித்த அமைச்சர்கள், எங்களைப் பார்த்துப் பேச என்ன அருகதை, தகுதி இருக்கிறது?

அமைதி பூங்கா

ஆகவே, அண்ணா தி.மு.க. அரசைப் பொறுத்தவரைக்கும் சட்டம் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழகம் தான் சட்டம்–ஒழுங்கில் முதலிடம் வகிக்கிறது. சிறப்பான முறையிலே பராமரிக்கின்ற மாநிலம் என்று சொன்னால் தமிழ்நாடு என்று சொல்கின்ற அளவிற்கு இருக்கிறது.

அதுமட்டுமல்ல. அண்மையில் மாமல்லபுரத்திற்கு வந்து பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் நேரடியாக சந்தித்துப் பேசினார்கள். இந்தியாவில் எத்தனை மாநிலம் இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து மாமல்லபுரத்தில் இருபெரும் தலைவர்களும் சந்தித்து பேசுகிறார்கள் என்று சொன்னால் சட்டம்–ஒழுங்கு எவ்வளவு சிறப்பாக இருக்கிறது என்று எண்ணிப் பார்க்க வேண்டும் ஸ்டாலின் அவர்களே. அந்த இருபெரும் தலைவர்கள் சந்தித்த காரணத்தால் இன்றைக்கு மாமல்லபுரம் பிரசித்தி பெற்றிருக்கிறது, இன்றைக்கு உலக அளவிலே தமிழ்நாடு பேசப்படுகிறது. இந்தியா மட்டுமல்ல, உலக அளவிலே இன்றைக்கு சட்டம்–ஒழுங்கு பேணிக் காப்பதிலே இந்தியாவிலே தமிழ்நாடு மாநிலம் சிறந்து விளங்குகின்றது என்று வெளிநாட்டில் இருப்பவர்களெல்லாம் பேசுகிறார்கள். அந்த அளவிற்கு சட்டம்–ஒழுங்கை சிறப்பாக பேணிக் காக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்.

மக்களிடம் நேரில் மனு

நான் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதியாக வந்து மக்களிடத்தில் மனுக்களைப் பெற்றேன். கிராமத்திலே வாழ்கின்ற மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். சில பிரச்சினைகள் இருக்கும். அந்த பிரச்சினை குறித்து அதிகாரிகளை தேடிச் சென்று கொடுப்பதற்குப் பதிலாக முதலமைச்சரே நேரடியாக வந்து உங்களிடத்திலே மனுக்களைப் பெற்று அதற்கு தீர்வு காண வேண்டுமென்பதற்காக நான் அந்தத் திட்டத்தை துவங்கினேன். அந்தத் திட்டத்தின் மூலமாக சேலம் மாவட்டத்தில் 58,240 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்களை ஆய்வு செய்து 29,509 தகுதியான மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட அரசு அம்மாவினுடைய அரசு. உங்கள் ஆட்சியில் நடந்ததா? மக்கள் யாரையாவது சந்தித்தீர்களா? மனு வாங்கினீர்களா? அந்த மனுவின் மீது தீர்வு காணப்பட்டதா? புள்ளிவிவரத்துடன் நான் சொல்கிறேன். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிலுள்ள 234 தொகுதிகளிலும் மனுக்கள் வாங்கப்பட்டு, அந்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்ட ஒரே அரசு அம்மாவினுடைய அரசு. சேலம் மாவட்டத்தில் மட்டும் முதியோர் உதவித் தொகை தொடர்பாக மக்களிடத்திலே மனுக்கள் வாங்கப்பட்டன. அதில் 23,798 நபர்களுக்கு இந்த முதலமைச்சர் குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகை கொடுத்திருக்கிறோம். எந்த அளவிற்கு எங்களுடைய அரசு இன்றைக்கு ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட வயதில் முதியோர்களுக்கு எந்த அளவில் நன்மை செய்யப்பட்டுள்ளது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தத் தொகுதியில் மட்டும் 8925 மனுக்கள் பெறப்பட்டிருக்கிறது, இதில் கிட்டத்தட்ட 4,157 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் முதலமைச்சர் சிறப்பு குறை தீர்க்கும் முகாம் மூலமாக 3,009 முதியோர்களுக்கு முதியோர் உதவித் தொகை கொடுத்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் 5 லட்சம் நபர்களுக்கு வழங்கப்படுமென அறிவிப்பு கொடுத்து எல்லா மாவட்டங்களிலும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

பட்டா

ஆத்தூர் தொகுதியில் பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வேண்டுமென்று பெறப்பட்ட மனுக்களில் 588 தகுதியான மனுக்கள் தீர்வு காணப்பட்டிருக்கிறது. எஞ்சிய மனுக்கள் நேரடியாகச் சென்று பார்த்து தீர்வு காணவேண்டும், இல்லாவிட்டால் மனுதாரருக்கு உரிய பதில் அதாவது அந்த மனு எதற்காக நிராகரிக்கப்பட்டது என்ற தகவலை கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டிருக்கிறேன் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன். இப்படி அம்மாவினுடைய அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *