சென்னை, டிச.24–
சிதம்பரம் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர், நாகூர் தர்காவின் தடுப்புச்சுவர் இரண்டும் ரூ.8 கோடி செலவில் சீரமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் சிதம்பரத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது பொதுமக்கள் இச்சுற்றுச் சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினார் கோவில் குளத்தின் சுற்றுச்சுவர், ரூ.2.62 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்.
நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரில் அமைந்துள்ள நாகூர் தர்கா குளத்தின் தடுப்புச்சுவர், சமீபத்தில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்தது. நான் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ஆய்வு செய்ய சென்ற போது இஸ்லாமிய பெருமக்கள் இத்தடுப்புச் சுவற்றினை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர். அக்கோரிக்கையினை ஏற்று, நாகூர் தர்கா குளத்தின் நான்கு புற தடுப்புச்சுவர், ரூ.5.37 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசால் சீரமைத்து தரப்படும்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.