சிறுகதை

காரணம் என்ன? | ராஜா செல்லமுத்து

Spread the love

‘ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்த அரசு மருத்துவமனையில் கூட்டம் கூடிக்கொண்டே போனதேயொழிய குறைந்தபாடில்லை இன்னும் இன்னுமெனக்குவியத் தொடங்கிய மனிதர்களில் ஒருவர் முகத்தில் கூட ஈயாடவில்லை. பேயறைந்தது போல வந்து கொண்டிருந்தார்களேயொழிய பேச்சு கூட சரியாக வரவில்லை.

காரணம் என்ன?

அமுதாவின் தற்கொலைக்கு இன்ன காரணமென்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியவில்லை.

காவல்துறையிலிருந்து உறவினர்கள் வரை எல்லோரையும் விசாரித்துப் பார்த்தும் உண்மை இதுதானென்று ஒருவருக்கும் பிடிபடவே இல்லை’

‘‘ஏதாவது தகவல் தெரிஞ்சதா..? என்று அதிகாரத் தொனியில் ஒரு காவலர் கேட்க..

‘‘இல்லீங்க..! என்று ஒற்றை வார்த்தையில் மட்டுமே பதில் சொன்னார் அமுதாவின் அப்பா.

‘‘இல்லங்க உங்களோட பதில்ல எங்களுக்கு உடன்பாடில்ல.. ’’என்று காவல்துறை சொன்னதும்

‘‘என்னங்க எங்களோட புள்ளைய நாங்களே கொன்னுட்டோம்னு சொல்றீங்களா..?’’ என்று முன்னுக்கு வந்தாள் அமுதாவின் அம்மா.

‘‘ம்.. அப்ப உங்களுக்கும் அமுதாவோட தற்கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்ல.. அப்படித்தானே..!’’

‘‘ஆமா..’’ என்று அங்கிருந்தவர்கள் தலையாட்ட

‘‘அமுதாவுக்கு கல்யாணமாயிருச்சா..?’’

‘‘ஆயிருச்சு..’’

அப்பிடின்னா.. அவரோட கணவர் எங்கே..?

‘‘வருவாருங்க..’’ என்ற அமுதாவின் சகோதரன்

‘‘போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சதா..?’’

‘‘இன்னும் கொஞ்ச நேரத்தில முடிஞ்சிரும்.. ’’என்று இன்னொரு காவலர் சொல்ல மார்ச்சுவரி வாசலில் திபு..திபுவென ஆட்கள் ஏற்கனவே போஸ்ட்மார்டம் செய்யப்பட்ட ஒரு உடலைக்கட்டி மூட்டையாகக்கொடுத்தனர்.‘‘ஓ.. வென்ற அழுகையோடு மொத்தக் குடும்பமும் அழுது ஆர்ப்பாட்டம் செய்து உடலை வாங்கினர்.

எப்பத் தான் அமுதா உடலைத் தருவாங்க?’’ என்று ஒருத்தி கேட்க

அதற்கு பதில் சொல்ல முடியாமல் அழுதாள் அமுதாவின் அம்மா .

வாய்விட்டு சில பேர் அழுதுகொண்டிருந்தனர். மனதுக்குள்ளே சிலர் மன்றாடினர்; உயிரில் பாதி இத்துப்போய் நின்றனர் கொஞ்சம் பேர்.

இருந்தாலும் இந்த வயசுல இப்பிடி அற்ப ஆயுஸ்ல ஒரு மனுஷி போக்கக்கூடாதுங்க . இன்னும் எவ்வளவு நாள் வாழ வேண்டியிருக்கு? எவ்வளவு தூரம் பயணம் போக வேண்டியிருக்கு?. அதுக்குள்ள புசுக்குன்னு போய் சேந்திட்டாளே பாவி மக என்று புலம்பித்தீர்த்தனர் உறவினர்கள். ‘போஸ்ட் மார்ட்டம்’ செய்யப்பட்ட உடலுக்காக அத்தனை பேரும் காத்துக்கிடந்தார்கள். வாயிற் கதவை எதிர்பார்த்து எதிர்பார்த்து பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கு விழியே களைத்து வியர்த்து நின்றது.

‘‘எப்பவருவார்.. அமுதாவோட கணவர்..’’ என தூய தமிழில் கேட்டார் ஒரு காவலாளி.

‘‘இப்ப வந்திருவாரு..’’

‘‘ஏன் அவரு இங்க இல்லாம போனாரு..!’’

‘‘வேலையிருந்துச்சு ..இப்படி எல்லாக் கேள்விகளுக்கும் ஒரு வார்த்தையிலேயே பதில் சொல்லிக் கொண்டிருந்தார்களேயொழிய தவறியும் வேறு பதில் சொல்லவில்லை. மார்ச்சுவரியிலிருந்து மருத்துவர்கள் வர ஓடிப்போய்க் கேட்டார் அமுதாவின் அப்பா.

‘‘ஐயா என்னோட பொண்ணு.. ’’ என்று மூச்சு முட்ட முட்டக் கேள்வி கேட்டவரிடம்

‘‘இப்ப வந்திரும்.. ’’ என்று அவர் சொல்லிவிட்டுப் போக அவர் சொன்னபடியே ‘போஸ்ட்மார்டம்’ செய்யப்பட்ட அறையிலிருந்து வெள்ளைத் துணியைச்சுற்றிக் கட்டிக்கொண்டு ஒரு பொட்டலம் போல கொடுக்கப்பட்டாள் அமுதா.

புடவைகட்டி! பூ வைத்து! பொட்டுவைத்து ! குலுங்கக் குலுங்கச் சிரிக்கும் அழகுப்பதுமை அமுதாவை இப்பிடி பொட்டலமாய்ப் பார்த்ததில் அங்கு நின்றிருந்த அத்தனை பேருக்கும் அழுகை முட்டிக்கொண்டு வந்தது .

ஸ்டிரெட்ச் சக்கரங்கள் சுழலச்சுழல அவள் கொண்டு வரப்பட்டாள்

‘‘ஐயோ.. அமுதா.. ’’என ஓடிவந்த அவளின் கணவன் ஈஸ்வரனை இப்படியே அலாக்காகத் தூக்கினர் போலீஸ்காரர்கள்.

‘‘சார்.. சார்.. எம்பொண்டாட்டி.. பொண்டாட்டி.. பொசு பொசுவென அழுதவனை எந்த சமாதானமும் கேட்காத காவல்துறை

‘‘சொல்லுங்க.. அமுதா எப்பிடி இறந்தாங்க..!’’

‘‘தெரியாது..’’

‘‘ம்.. உங்களோட மனைவிதானே அமுதா ..!’’

‘‘ஆமா..’’

‘‘உங்களுக்கு தெரியாம.. அவங்க செத்துப்போக வாய்ப்பே இல்ல..! கண்டிப்பா.. நீங்க சொல்லித்தான் ஆகணும்’’

‘‘எனக்கு தெரியாதுங்க.. என்னோட பொண்டாட்டடிய நான் பாத்துக்கிறேன்.. ப்ளீஸ்..! என்று அழுதவனை உண்மைய சொல்லாம விடமாட்டேன் ‘‘சொல்லுங்க..’’

‘‘இல்ல.. சார்.. எனக்கு தெரியாது. வேலைக்கு போயிட்டு நான் வீட்டுக்கு வரும் போது தூக்குல தொங்கிட்டு இருந்தா. அவ்வளவு தான் எனக்கு தெரியும் . வேற எதுவும் எனக்கு தெரியாது..’’ என்றவனை விடுவதாக இல்லை

‘‘நீங்க.. சொல்லலன்னா.. உங்கள விடப்போறதில்ல.. என்று கிடுக்குப்பிடி போட்ட போலீஸிடம்

‘‘ஆமா.. ஆமா.. அமுதா செத்தது வேற காரணம் தான்..’’ என்று ஓங்கிப் பேசியவனை அங்கிருந்த கூட்டமே ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

‘‘ நான்படிச்சது பி.டெக். ஆனா..! நான் படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைக்கு போகல. அதவிட்டுட்டு எனக்குப் பிடித்த வேறு வேலை பண்ணுனேன். அந்த வேறு வேலையில் தொடர்ந்து நஷ்டம்; வேணாம். இந்த வேலை நமக்கு வேணாம்னு தலையில அடிச்சு.. அடிச்சு.. சொன்னா..அமுதா. நான் கேக்கல. விடாம எனக்குப் பிடித்த வேலையைப் பண்ணிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில சொல்லிச் சொல்லிப் பாத்தவ இப்பிடிப் பண்ணிட்டா.. ’’என்றான்.

அங்கு கூடியிருந்தவர்களுக்கு சுரீர் என்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *