சிறுகதை

நிஜம் வேறு | ராஜா செல்லமுத்து

Spread the love

‘அக்னிச்சூரியன்’’ என்ற பெயரைக் கெட்டாலே அகில உலகத் திரைப்பட உலகிற்கும் அத்துபடி. அவரின் வசனங்களும் காட்சிகளும் அப்படியே நெஞ்சையள்ளும். ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போது அவரின் வானுயர்ந்த கட்அவுட்டுகள் பாலாபிஷேகத்தில் குளிக்கும். முதல் காட்சி,முதல் டிக்கெட் என ஆர்ப்பரிக்கும் திரையரங்கம்.

‘‘டேய்.. எங்க தலைவரோட படம் பாத்தியா..? ஒவ்வொரு சீனும் அப்பிடியே லட்டு மாதிரி என்னவொரு கூரிய வசனம்..

எவ்வளவு பெரிய உயரத்தில இருந்தாலும் எளிய மக்களுக்கு உதவுற மாதிரி அவரு நடிக்கல வாழ்ந்திருக்காரு. இவர மாதிரி ஒரு மனுசன் இனிப் பொறக்க போறதே இல்ல! கடவுள் மனுசனா பெறக்காம இப்பிடி ஒரு நடிகனா பெறந்திருக்காரு’’ என்ற மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வரும்.

‘‘ஹலோ.. ரொம்ப பீத்திக்கிறாதீங்க.. உங்க நடிகர விட எங்க அண்ணன் கடவுளோட அச்சு! அவரு நடிக்கிறத விட எங்க அண்ணன் தான் ஒவ்வொரு படத்திலயும் நல்லது செய்யுறாரு . ஏன் படத்தில மட்டுமில்ல நிஜத்திலயும் அப்பிடித்தான். எங்க அண்ணனுக்கு ஈடாகுமா..? உங்க தலைவரோட படம்’’ என

இப்படி ஒரு நடிகரைப் பற்றிய எதிர் மீம்ஸ்கள் வரும்.

இதற்கு கமெண்ட் லைக் என பறக்கும் இரண்டு பெரிய நடிகர்களின் முதல் நாள் ரிலீஸ் அன்று ரசிகர்கள் என்ற பெயரில் இருப்பவர்கள் பாலாபிஷேகம், கட்அவுட், பேனர் என்று அமர்க்களப்படுத்துவார்கள்

‘‘என்ன மச்சி! இன்னைக்கு தலைவரோட படம் ரிலீஸ்’’

‘‘ஆமா..

‘‘டிக்கெட் எவ்வளவு..?’’

‘‘ஆயிரத்தி ஐநூறு..’’

‘‘என்னது ஆயிரத்து ஐநூறா…?’’

‘‘ஆமா.. என்ன அப்பிடியொரு அதிர்ச்சிப் பார்வை.. தலைவரோட படத்த முதல் நாள் பாக்காம அதுவும் இவ்வளவு பணம் குடுத்து பாக்கலன்னா ஒரு கெத்து இருக்காது’’

‘‘ஓ.. கோ.. தலைவர் மேல அவ்வளவு பிடிப்பா..? இவ்வளவு பணம் குடுத்து டிக்கெட் வாங்குறீங்களே..? இந்த பணமெல்லாம் எங்க போகுதுன்னு தெரியுமாடா..?’’ என்று ஒருவர் ஆக்ரோசமாய்க் கேட்க

‘‘தியேட்டர்க்காரங்க தான் இவ்வளவும் கொள்ளையடிக்கிறாங்க’’ என்று விவரம் புரியாத ஒருவன் சொல்ல

‘‘ம்ம்.. இப்பிடி அடி முட்டாப் பயலுகளா இருக்கிறதுனாலதான் லட்சங்கள்ல சம்பளம் வாங்கிட்டு இருந்த நடிகர்கள் இப்ப கோடிகள் வாங்க ஆரம்பிச்சிட்டாங்க! ஏன்.. ஒரு கோடி,ரெண்டுகோடி இல்ல சொல்ல முடியாத பல கோடிகள் சம்பளம் வாங்குறாங்க. இப்பிடி பல கோடிகள் குடுத்த தயாரிப்பாளர்கள் நடிகன், நடிகைகளுக்கு குடுத்த கோடிகள நம்ம கிட்ட இருந்து இப்பிடித்தான் வசூல் பண்றாங்க’’என்று விவரமானவன் சொல்ல

‘‘ஏய் என்னப்பா!.. எங்க தலைவர இப்பிடி சொல்ற..’’

‘‘டேய்…. நீங்கெல்லாம் சினிமாக்காரங்கள இன்னொரு பிறவின்னு நினைச்சிட்டு இருக்கீங்க! அவங்களும் மனுசன் தான்னு நீங்க என்னைக்கு நினைக்கிறீங்களோ! அன்னைக்குதான் நம்ம நாடு உருப்படும் அதுவரைக்கும் நம்மகதி அதோகதி தான். நிழல் வேற நிஜம் வேறன்னு நீங்கெல்லாம் என்னைக்கு தான் புரிஞ்சுக்கப் போறீங்களோ..? அன்னைக்கு தான் இந்த நாடு உருப்படும்’’ என்று சமூக அக்கறை உள்ள ஒருவர் சொல்ல வீறு கொண்டு எழுந்தான் ஒரு ரசிகன்

‘‘சார்…. நீங்க பேசுறது தப்பு. எங்க தலைவர் அப்பிடிப்பட்டவரு இல்ல . சொல்லுக்கும் செயலுக்கும் வித்யாசமில்லாத ஆளு. அவரு கண்டிப்பா நல்லது தான் செய்வாரு ஒரு ரசிகன் விடாப்பிடியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்’’

‘‘இப்ப இது உனக்கு தெரியாது பட்டாத்தான் தெரியும்..’’ என்று ஒதுங்கினார் சமூக சேவகர்.

தலைவரின் அடுத்த படம் ஒரு நாள் ரிலீசானது வீறுகொண்டு பேசியவன் தலைவருக்குப் பாலாபிஷேகம் செய்த போது கட்- அவுட்டிலிருந்து தவறி கீழே விழுந்தான். ரத்தவெள்ளத்தில் அவன் விழுந்து கிடந்ததை அவனைச் சுற்றியிருந்த மனிதர்கள் தான் காப்பாற்றிக் கூட்டிப்போய் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தார்களே யொழிய இந்தச் செய்தி அவன் பாலாபிஷேகம் செய்த நடிகரின் காதுகளுக்குப்போய் எட்டவே இல்லை. அப்படியே இது எட்டியிருந்தாலும் அவர் என்னவென்று கூடக் கேட்கப் போதில்லை.

‘‘டேய்.. ஏண்டா.. இப்பிடி அத்தக்கூலி வேல பாத்து அரவயிறும் கால்வயிறுமா சம்பாரிச்சு சாப்பிட்டுட்டு இந்த ஒலகத்தில நாமளும் வாழுறோம்னு உசுர கையில பிடிச்சிட்டு இருக்கோம். நீ.. என்னாடான்னா பெத்த தாய் தகப்பன விட்டுட்டு யாருன்னே தெரியாத ஒரு நடிகருக்கு போயி பாலாபிஷேகம் பண்றேன்… அது பண்றேன், இது பண்றேன்னு இப்பிடி கீழ விழுந்து கால ஒடிச்சிட்டு வந்து நிக்கிறயே ! ஒன்னோட தலைவன் உன்னைய வந்து பாப்பானா..? இல்ல விழுந்த வேகத்தில நீ.. உசுரு விட்டுருந்தா.. உன்னோட தலைவன் எம்புள்ளைய திருப்பத்தருவாணா ! நிழல்ல காட்டுறத நிஜம்னு நம்பி ஏண்டா இப்பிடி வாழ்க்கைய வீணாக்குறீங்க! சினிமாவ பாத்து கைதட்டி சிரிங்க, சந்தோசமா ரசிங்க; ரசிப்ப தியேட்டர் வாசல்லயே விட்டுட்டு வாங்கடா..’’ என்று அடிபட்டவனின் அம்மா அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். இது அத்தனையும் உள்வாங்கியவன் தாரை தாரையாய் அழுதுகொண்டிருந்தான் அடிபட்ட வலியோடு.

‘‘உடல் மண்ணுக்கு உயிர் அண்ணனுக்கு அண்ணன் திரைப்படத்தை வெற்றிப் படமாக்காமல் விடமாட்டோம்’’ என்று இனனொரு கூட்டம் அண்ணன் நடிகருக்கு பாலாபிஷேகம் செய்து வாழ்த்துப் பாடிக்கொண்டிருந்தனர் நிழல்களை நிஜமென்னு நம்பும் ஒரு கூட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *