செய்திகள் முழு தகவல்

நிழலில் நிஜமான என் வாத்யார், எம்.ஜி.ஆர்

‘‘எம்ஜிஆர் என் உயிர். அவரே என் தெய்வம். அவரை நினைக்காத நாளில்லை. அவருடைய பாடலைப் பாடாத நாளில்லை. ஏன்… அவருடைய வசனத்தைப் பேசாத, நினைக்காத நாளே இல்லை. என்னை வழி நடத்துபவர் எம்ஜிஆர். என்னை வாழ வைத்துக் கொண்டு இருப்பவரும் எம்ஜிஆர்.

உலகை திருத்த வந்த உன்னத மனிதர். ஒருவன் எப்படி நல்லவனாக வாழ வேண்டும், எப்படி வாழக் கூடாது. எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது, எது நல்லது, எது கெட்டது என்பதை இந்த ஊருக்கு எடுத்துக்காட்டி சொன்னபடி வாழ்ந்த பகுத்தறிவு வாத்தியார் எங்கள் எம்ஜிஆர்…’’

என்று இளமைத் துள்ளல், நெகிழ்ச்சி யோடு, ஆனந்தக் கூத்தாடியபடியே சொன்னபோது அவருடைய விழிகளில் ஆனந்தக் கண்ணீர்.

ஒவ்வொரு முறையும் என் தலைவன் எம்ஜிஆர் என்று உச்சரிக்கும் போது தன்னையும் அறியாமல் இரண்டு கைகளும் நெஞ்சைத் தொட்டு என் தலைவன் இங்கே இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்று சொல்லியபோது புரட்சித் தலைவரின் வெறிபிடித்த ரசிகர் கூட்டத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்று அடையாளம் காட்டலாம். அவர்தான் ஆனந்தகுமார்.

சென்னை தியாகராயநகர் கண்ணம்மா பேட்டைப் பகுதியில் வசிப்பவர். சென்னை சவுகார்பேட்டையில் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனைக் கடையை நடத்தி வரும் சில்லறை வியாபாரி. அவருக்கு வயது 55.

விபரம் தெரியாத ஐந்து வயதில் எம்ஜிஆர் மீது ஏற்பட்ட அந்த மோகம் வெறியாக மாறி இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எம்ஜிஆர் பேச்சையும் அவரின் படத்தையும், பாடலையும், வசனத்தையும் சொல்லாமல் இருக்க மாட்டார்.

திருமணமானவர். மனைவி விசாகா. இருவர் மட்டுமே. சதாசர்வ காலமும் எம்ஜிஆர்… எம்ஜிஆர்… எம்ஜிஆர்… என்ற நினைப்பிலேயே இருப்பவர். அப்படியே இருந்துவிட்டுப் போகட்டுமே என்று மனைவியும் அவர் போக்குக்கு விட்டுவிட்டார்.

வியாபாரத்தில் வருகிற பணத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு குடும்ப செலவுக்கு கொடுத்துவிட்டு, மீதியை தன் கைச் செலவிற்கும், எம்ஜிஆர் பெயரை சொல்லி சமூக நலத்திட்ட உதவிகளுக்கும் (விரலுக்கு ஏற்ற வீக்கம்…) செலவழித்துக் கொண்டிருக்கிறார் ஆனந்தகுமார்.

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி ( டிசம்பர் 24) தேவி தியேட்டர் வளாகத்தில் ‘‘அன்பே வா…’’ திரையிடப்பட்டிருக்கிறது. 7 நாட்களும் தொடர்ந்து பார்த்திருக்கும் ‘ வெறித்தனமான ‘ ரசிகர்களில் இவரும் ஒருவர்.

கடை வாசலில் எம்ஜிஆர் புகைப்பட கண்காட்சி

எம்ஜிஆரின் நினைவு நாளையொட்டி தன்னுடைய கடையின் வாசலில் ஆண்டுதோறும் வைப்பதைப் போல எம்ஜிஆரின் அரசியல், சினிமா படங்களின் கண்காட்சியை வைத்திருக்கிறார். எம்ஜிஆரின் பேனரையும் நிறுத்தி, அதற்கு காலையிலும் மாலையிலும் மாலை போட்டு மரியாதை செலுத்தி வருகிறார்.

எம்ஜிஆரின் படங்களைப் பார்க்கும்போது… வீட்டுக்கு வந்து அவர் மாதிரியே கெட்டப்பில் நின்று நடிக்க ஆரம்பித்து விடுவார். தன் கடை முன்னால் ‘ரிக்க்ஷாக்காரன்’ எம்ஜிஆர் கெட்டப்பில் ரிக்க்ஷாவில் உட்கார்ந்து வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பது இவரது வாடிக்கை.

எம்ஜிஆரின் அறிமுகம் ‘சதிலீலாவதி’யில் ஆரம்பித்து, கடைசி படம் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ வரைக்கும் அத்தனை படங்களையும் பார்த்திருப்பதாக சொல்லும் ஆனந்தகுமார், எம்ஜிஆரின் ‘மதுரை வீரன்’ படம் மட்டும் பார்க்கவில்லையாம். பார்க்கவே மாட்டாராம். அதில் எம்ஜிஆருக்கு மாறுகை வாங்கப்படுவதை பார்க்க மனசு இடமே கொடுக்காதாம். துடித்துப் போய் விடுவாராம், அது நிழல் என்றாலும். அதனாலேயே இன்று வரை ‘மதுரை வீரன்’ இவரின் பட்டியலிலிருந்து விலக்கு.

15 வயதில் வந்த எம்ஜிஆர் வெறி இன்னும் அவரிடம் அப்படியே. அவரிடம் பேச்சுக் கொடுத்தோம் படபடவென்று பதில் அளிக்க ஆரம்பித்தார்.

அன்பைச் சொன்னார் அம்மா பாசம் சொன்னார்

* தெரியாமல் தான் கேட்கிறேன். இத்தனை நடிகர்கள் இருந்தும் எம்ஜிஆர் மீது அபரிமிதமான பாசம், நேசம், மரியாதை, வெறி ஏன்?

வெள்ளித் திரையில் அன்பைச் சொன்னார், அம்மா பாசத்தைச் சொன்னார், அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம், தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம், 2ம் இடம் இருந்தால் பேரை வாங்கலாம், பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்… என்று சின்ன சின்ன பாட்டு வரிகள் மூலம் மனதை தொட்டவர். மாமனிதனாக மனிதருள் புனிதராக உயர்ந்தவர்.

கொள்கையைச் சொன்னார், கோட்பாட்டை சொன்னார், தத்துவம் சொன்னார், வாழ்க்கை நெறியை சொன்னார், மனிதர்கள் வாழும் வழியைச் சொன்னார். பாட்டாலே… பாட்டின் தரத்தாலே, அதன் கருத்தாலே நாட்டைப் பிடித்த மன்னன். ஆயிரம் வருஷங்களானாலும் இனி ஒரு எம்ஜிஆர் அரிது அரிது, அரிதினும் அரிது…’ என்று அடித்துச் சொன்னார் ஆனந்தகுமார்.

9ம் வகுப்பில் 3 தடவை. 10ம் வகுப்பில் 2 தடவை பெயிலானேன். பள்ளிப்படிப்பை எப்படியோ முடிச்சேன். ஓபன் யுனிவர்சிட்டியில் பி.காம் சேர்ந்தேன். முதல் வருஷத்தோட படிப்புக்கு முழுக்குப் போட்டேன். பாதை மாறினேன். வியாபாரத்துக்கு வந்தேன். வாழ்க்கை இப்போ வியாபாரம் தான்.

* சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஓபன் யுனிவர்சிட்டியில் பர்ஸ்ட் இயர் பி.காம்.. ஏன் பாதியிலே நிறுத்துனீங்க..?

எல்லாம் கொழுப்புதான். எம்ஜிஆர் மோகம். அவரோட சினிமா மோகம். அவர் பின்னாடி எனக்கு இருந்த வேகம்.


எம்ஜிஆர் பற்றி என்ன நினைக்கிறீங்க…?

எம்ஜிஆர் ராசிக்கார மனுஷர். கைராசி உண்டு. முகராசியும் உண்டு. அவரை தொட்டவன் … அவரோட கொள்கை தத்துவத்தை தொட்டவன் ஜெயிக்காமல் போனதில்லை.

ஜெயில்ல வாரத்துக்கு ஒரு எம்ஜிஆர் படம் போடட்டும். இருக்கிற கைதிகள்ல 10க்கு 2 பேர் நிச்சயம் மனசு மாறுவாங்க, நல்லவனா திருந்துவாங்க. குற்றவாளிகள் கொறைவாங்க.


சுதந்திர தியாகிளுக்கும் படங்கள் வைப்பேன்

* எம்ஜிஆர் வெறியன்றீங்க. அவரோட போட்டோ மட்டும்தான் கண்காட்சிலே… இருக்குமா?

இல்லையில்ல. நான் சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் மேலேயும் ரொம்ப ரொம்ப மரியாதை வைத்திருக்கிறேன். தேசப்பிதா மகாத்மா, ஜவர்கலால் நேரு, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், கப்பலோட்டிய தமிழன், மகாகவி பாரதி… இப்படி இவங்களோட படங்களையும் காட்சிக்கு வைப்பேன், அவுங்க அவுங்க பிறந்தநாள்ல அவுங்க அவுங்க கட்அவுட் வெச்சு, மாலை மரியாதையும் செய்வேன். இனிப்பு வழங்குவேன். சுதந்திர போராட்ட தியாகிகள் மேலயும் அப்படி ஒரு மரியாதை. ( நாடென்ன செய்தது நமக்கு…?’ எம்ஜிஆரின் முழுப் பாடலையும் பாடுகிறார் , நடித்துக் காட்டுகிறார்).

திருத்தவே முடியாது: பொண்டாட்டி கிண்டல்

* கல்யாணமான பின்னாடியும் இப்படித்தானா… பொண்டாட்டி எதுவும் சொல்ல மாட்டாங்களா…?

ஊஹூம்… கல்யாணமான புதுசுல சொல்லிப் பார்த்தாங்க, கேட்கிறதா இல்லே. திருத்த முடியாத ஜென்மம்னு என் போக்கிலேயே விட்டுட்டாங்க. (சிரிக்கிறார், குழந்தைத்தனமாக)

* எம்ஜிஆர் படம் எப்போ பார்த்தீங்க, ஞாபகம் இருக்கா…?

விவரம் தெரியாத 5 வயசுல பார்த்ததா, அப்பா அடிக்கடி சொல்லுவார். அது ‘‘உலகம் சுற்றும் வாலிபன்’’. படம்னு. அம்மா-, அப்பா, மாமா, – அத்தை இப்படி மொத்த குடும்பமே புறப்பட்டுப்போய் எம்ஜிஆர் படம் பார்த்துட்டு வருவோம்.

50 வருஷத்துக்கு முன்னாடி 5 வயசுல எந்த தியேட்டர்ல எம்ஜிஆர் படம் பார்த்தேனோ… அதே தியேட்டர்ல இன்னைக்கு எம்ஜிஆரின் ‘‘அன்பே வா’’ பார்த்தேன். படம் பார்க்கும்போது பாட்டு வந்தா நான் நானாக இருக்க மாட்டேன். விசிலடிப்பேன். கைதட்டுவேன். குதிப்பேன். டான்ஸ் ஆடுவேன்.

‘தகதக’ சொக்கத் தங்கம்; மறக்க முடியாத புன்னகை

‘‘அன்பே வா’’ படத்தில் 200 கிலோ குண்டோ தரனோட ஒரு ஃபைட். அலாக்காகாத் தூக்கிப் போடுவார், வாத்தியார். அவர அடிச்சிக்கவே முடியாது. ஸ்டண்ட்ல வாத்தியார்… வாத்தியார் தான்.

* விவரம் தெரிய வந்ததும், எம்ஜிஆரை நேரில் பார்த்ததுண்டா?

ஊம்… ஊம்… உண்டு. 1985 -86ம் வருஷம்னு நெனைக்கிறேன். அண்ணா தி.மு.க. பிரமுகர் கடம்பாடி அண்ணனோட கல்யாணம். வீடியோகிராபரோடு அவருக்கு ‘லைட்’ பிடிக்கும் அசிஸ்டண்டா போனேன். படம் எடுத்துக்கிட்டு இருக்கிறப்போ, மண்டபத்துல திடீர்னு பரபரப்பு, சலசலப்பு. எம்ஜிஆர் வந்துட்டார். மாப்பிள்ளை பொண்ணு பக்கத்துல நின்னு ஆசீர்வதித்தார். மேலும் 15 அடி தூரத்தில் நான் நின்னு ‘லைட்’ புடிச்சுகிட்டு இருந்தேன். அது நேரா அவர் முகத்துல பட்டிருக்கும் போல. முகஞ்சுளிக்கல்ல. கோபப்படல. என்னைப் பார்த்து கையை காட்டி, லைட்டை சைடுல காட்ட சைகை காட்டினாரு. நானும் அப்படியே செஞ்சேன். அதப் பாத்துட்டு புன்னகைத்தார் பாருங்க என்னை பாத்து… ஐய்யோ.. ஐய்யோ… அத நான், அந்த புன்னகை ஆயுசுக்கும் மறக்கவே மாட்டேன்.

15 அடியிலே எம்ஜிஆரை பார்க்கிற பாக்கியம் கிடைச்சதுக்கு கடம்பாடி அண்ணன் கல்யாணத்தை வீடியோல படம் புடிச்ச அண்ணனுக்கு தான் நன்றி சொல்லணும். நான் லைட் அடிச்சேன். அவர் பார்வை என் மேல விழுந்துச்சு. அவரோட புன்னகை என்ன என்னென்னமோ பண்ணிடுச்சு. தகதகன்னு ஜொலிக்கிற சொக்கத் தங்கம் மாதிரி ஒரு ஒடம்பு – கை, முகம். என்னத்தைச் சொல்லுவேன் என் தெய்வத்தை பத்தி.

* பள்ளிக்கூடத்துல படிப்பு ஏறலன்னீங்க ஆனா சினிமா பாட்டு, வசனம் எல்லாம் எப்படி மனப்பாடமாச்சு?

எம்ஜிஆர்னா எனக்கு கொள்ளை உசுரு. இஷ்டம்னா இஷ்டம் அப்படி இஷ்டம். பள்ளிப் பாடத்தையே பாட்டாப் படிச்சா மனசுல நிக்கிற மாதிரி… அவர் பாட்டை படிச்சேன், வசனம் பேசினேன். பாடத்தை விட மனசுல நின்னுருச்சு, எம்ஜிஆரோட பாட்டும், வசனமும்.

2015ல் சென்னைலே பெஞ்ச வரலாறு காணாத மழை. அப்போ செம்பரம்பாக்கம் ஏரியை திடுதிப்னு திறந்துவிட்டுட்டாங்கல்ல… நகரமே … சவுத் மெட்ராசே வெள்ளைக்காடாச்சா இல்லையா? தி.நகர் கண்ணம்மாபேட்டைல என் வீட்ல 5 அடி தண்ணீர். கதிகலங்கிட்டோம். வீட்ல எல்லா உடமைகளும் போச்சு. குறிப்பா எம்ஜிஆர் சம்பந்தமா சேர்த்து வைத்திருந்த விதவிதமான மொத்த போட்டோ கலெக்ஷனும் வெள்ளத் தண்ணிலே அடிச்சிட்டு போனது தான் என்னோட தாங்கமுடியாத சோகம். இழந்த பணத்தை சம்பாச்சுடலாம். ஆனா கஷ்டப்பட்டு சேத்த எம்ஜிஆர் போட்டோகளே (அ)ந்த இடுப்பளவு தண்ணீரிலயும் நீஞ்சி குடும்பத்தைக் காப்பாத்தினேன். நான் இன்னிக்கி உயிரோடு இருக்கேன்னா… அந்த தெய்வம் (எம்ஜிஆர்) சொல்லிக்குடுத்த தைரியம் தான். துணிச்சல்தான். வீரந்தான். அவர் படம் பார்த்து பாத்து படிச்ச பாடம் தான். (‘என்னதான் நடக்கும்… நடக்கட்டுமே, தலைக்கு மேலே வெள்ளம் போனா சாண் என்ன முழமென்ன…?’ மீண்டும் ஆக்க்ஷனில் பாடுகிறார்)

* எம்ஜிஆரை பார்த்து, எது மாதிரி உதவி பண்ணுவீங்க?

இப்போ கூட கொரோனா பாதிச்சுதா இல்லையா? யார் யாரு கஷ்டப்படுறாங்களோ வேலை வெட்டி இல்லாம அவங்களுக்கு எல்லாம் தலா ரூ.1000ம்னு இதுவரைக்கும் ரூ.1½ லட்சம் உதவி பண்ணிருக்கேன். கொடுக்கும்போது கடன்னு சொல்லி கொடுப்பேன். திருப்பனும்னு மனசு வரத்துக்குத்தான். அதையும் தமாஷாகத் தான் சொன்னேன்னு சொல்லிவிடுவேன். இது வரை யார்கிட்டேயும் திருப்பி கேட்டு வாங்கியதில்லை.

-வீ.ராம்ஜீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *