செய்திகள் முழு தகவல்

தலைமை அழைத்தால்… அண்ணா திமுகவுக்கு உழைக்கத் தயார்; உரிமைக்குரல் கொடுக்கவும் தயார்

இ ந்திய சினிமாவில் வசூல் சக்ரவர்த்தி என அழைக்க படும் கதாநாயகர்களில் எம்ஜிஆரும் ஒருவர். இவரது படங்களில் கதாநாயகி என்றாலே தனி மரியாதை. எம்ஜிஆர் ஓர் கதாநாயகியை அறிமுகம் செய்கிறார் என்றால் தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு எகிறும்.

அப்படி ஏகப்பட்ட எதிர்பார்ப்பு களுடன் அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகை லதா. “உலகம் சுற்றும் வாலிபன்” தமிழ் சினிமா வரலாற்றில் ஓர் பிரம்மாண்டம். எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய இரண்டாவது படம் இது.

உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் மூன்று கதாநாயகிகள். அதில் ஒருவராக லதா அறிமுகம் ஆனார்.

நேற்று இன்று நாளை, நினைத்ததை முடிப்பவன், நீதிக்கு தலைவணங்கு, மீனவ நண்பன் என மளமளவென எம்ஜிஆருடன் 16 படங்கள் நடித்து முடித்தார்.

எம்ஜிஆர் கடைசியாக நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படத்தில் ‘கயல்விழி’ எனும் கதாபாத்தி ரத்தில் கலக்கியிருப்பார் லதா.

எம்ஜிஆர் கட்சி தொடங்கிய பின் எடுக்கப்பட்ட படங்களில் அரசியல் நெடி வீசும். குறிப்பாக வசனங்கள். லதா தைரியமாக அந்த வசனங்களை பேசி நடித்தார்.

எம்ஜிஆர் சரோஜாதேவி, எம்ஜிஆர் ஜெயலலிதா வரிசையில் எம்ஜிஆர் லதா ஜோடி ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமானது. பின்பு “எம்ஜிஆர் லதா” என்ற பெயரே லதாவுக்கு நிரந்தரமானது.

‘மக்கள் குரல்’ நாளிதழுக்காக எம்ஜிஆர் லதா அளித்த சிறப்பு பேட்டியில், எம்ஜிஆருடன் தான் பயணித்த காலத்தை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

ஹீரோவாக முதல்வராக உங்கள் பார்வையில் எம்ஜிஆர்?

எம்ஜிஆர் ஓர் நடிகராக புகழ்பெற்ற மனிதர். மிகவும் எளிமையாக இருப்பார். தான் ஒரு பெரிய ஹீரோ என்று எம்ஜிஆர் எந்த இடத்திலும் தன்னை காட்டிக் கொண்டது கிடையாது.

ஒரு சமயம் ‘பொம்மை’ இதழ் ஆசிரியர், என்னை அழைத்து இருந்தார். எம்ஜிஆர் முதல்வராகி விட்டார். நீங்கள் அவருடன் நடித்து இருக்கிறீர்கள். அவரை பேட்டி கண்டு தர வேண்டும் என்று கேட்டார். ‘முதல்வரின் முதல் பேட்டி’ என்ற பெருமையுடன் அந்த பேட்டி வரவேண்டும் என்றார்.

நான் எம்ஜிஆருக்கு போன் செய்தேன்.

என்ன? என்றார்.

எனக்கு நீங்க உடனே பேட்டி கொடுக்கனும் என்றேன்.

என்ன… பத்திரிக்கை ஆரம்பிச்சுட்டியா…? என்றார்

‘முதல்வர் தந்த முதல் பேட்டி’ யாக இருக்கனும்… அந்த பெருமையை எனக்கு நீங்க தரணும் என்றேன்.

உங்ககிட்ட வேற எதுவுமே கேக்கல…

உங்ககிட்ட கேட்கிறது ஒரு பேட்டி மட்டும் தான் என்றேன்.

“சிரித்துக்கொண்டே… உனக்கு என்னாச்சு?” என்றார்.

அப்போது கோட்டையில் இருந்தார்.

சரி… சத்யா ஸ்டுடியோவுக்கு வந்திடு என்றார்.

என்னை சோபாவில் அமர வைத்து விட்டு, அவர் ஒரு சின்ன சேரில் உட்கார்ந்து கொண்டார்.

என்ன இவ்வளவு சிம்பிளா இருக்கீங்களே என்றேன்.

எப்பவுமே நான் அப்படிதான் இருக்கனும், அப்படித்தான் இருப்பேன் என்றார். நடிகராக இருந்தபோதை விட முதல்வரானவுடன் தன்னை இன்னும் எளிமையாக மாற்றிக்கொண்டார்.

ஒருபடம் நடித்தால் கூட ஆடம்ப ரத்தை விரும்புபவர்கள் மத்தியில் ஒரு முதல்வராக அவர் பணிவாகவும் எளிமையாகவும் இருந்தது எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

எம்ஜிஆர் படத்தில் அறிமுகம்; எப்படி இருந்தது வரவேற்பு?

எம்ஜிஆர் தயாரித்து இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன் எனது முதல் படம். முதல் படத்திலேயே ஸ்டார் அந்தஸ்து கிடைத்தது. 16 வயதில் எம்ஜிஆரின் ஹீரோயின்.

எம்ஜிஆர் பட கதாநாயகி என்றாலே தனிமரியாதை கிடைக்கும். எம்ஜிஆர் லதா என்று, மக்கள் மத்தியில் எம்ஜிஆருக்கு கிடைத்த அன்பு எனக்கும் கிடைத்தது. அது இன்று வரை நிலைத்து நிற்கிறது.

ஷூட்டிங்கில் என்னை எல்லோரும் அம்மா என்று தான் அழைப்பார்கள். நான் யாரையோ கூப்பிடுகிறார்கள் என்று உட்கார்ந்திருப்பேன். அப்புறம் தான் என்னை கூப்பிடுகிறார்கள் என்று தெரிந்தது. பள்ளி மாணவியான எனக்கு… இந்த மரியாதை எம்ஜிஆரால் கிடைத்தது.

அவரது இயக்கத்தில் நடித்த அனுபவம் பற்றி…?

எம்ஜிஆர் தயாரித்து இயக்கியது மூன்று படங்கள். அதில் இரண்டு படங்களில் நடித்த பெருமை எனக்கு உண்டு.

அவருடைய இயக்கத்தில் நடிப்பது கஷ்டம். அவருக்கு ஒரு காட்சி திருப்தி தரும் வரை விடமாட்டார். எவ்வளவு டேக் போனாலும் எடுத்துக்கொண்டே இருப்பார். மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். கடைசி நாள் ஷூட்டிங். ஜெய்ப்பூரில் நடக்கிறது. போர் சம்பந்தமான காட்சி.

அப்போது எம்ஜிஆர் அந்த காட்சிகளுக்கான வசனங்களை கொடுத்து இதை மனப்பாடம் செய்துவிடு. ஏழு, எட்டு கேமரா வைத்து ஷூட் செய்கிறேன். நான் விசில் அடித்தால் ஒரு கேமராவில் இருந்து அடுத்த கேமராவுக்கு நீ போக வேண்டும் என்றார். மிகவும் கஷ்டப்பட்டு நடித்த சீன் அது. புல் ஷாட் ஒரே டேக்கில் நடித்து கொடுத்தேன். மிகவும் பாராட்டினார்.

“விழியே… கதை எழுது….” பாடல் பற்றி

முதலில் ஸ்ரீதர் அந்த பாடலை சோகப் பாடலாகத்தான் எடுத்திருந்தார். அந்த பாடல் மைசூரில் தான் எடுக்கப்பட்டது. எம்ஜிஆர் அந்த பாடலை பார்த்து விட்டு, இந்த பாடலை ‘ட்ரீம்’ பாடலாக மாற்றலாம் என்றார். ஸ்ரீதர் அதற்கு ஒத்துக்கொண்டார். பின்னர் சத்யா ஸ்டுடியோவில் செட் போட்டு அந்த பாடல் பதிவு செய்யப்பட்டது. இன்று வரை அந்த பாடல் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

நான் அந்த பாடலில் இஸ்லாமிய பெண் போல் உடை அணிந்து வருவேன். என் காஸ்ட்யூம்க்கு ஏற்றாற்போல் நீங்களும் டிரெஸ் போட்டால் நன்றாக இருக்கும் என்று எம்ஜிஆரிடம் சொன்னேன். நான் சொல்லி அவர் கேட்க வேண்டும் என்று இல்லை. ஆனாலும் அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

எம்ஜிஆர் படத்தில் அரசியல் தெறிக்கும் வசனங்கள் பேசும்போது

எம்ஜிஆர் கட்சி துவக்கிய நேரம். அப்போது எடுக்கப்பட்ட படங்களில் பெரும்பாலான வசனங்கள் அவரது கொள்கைகள் சார்ந்தே இருக்கும். அந்த வசனங்களை நான் ஆவேசமாக பேசுவைதை பார்த்து, நீதான் வேலுநாச்சியார் பரம்பரையாச்சே… உங்கிட்ட சொல்லனுமா என்று கிண்டல் செய்வார். அது போன்ற வசனங்களை பேசுவதற்கு நான் தயங்கியது கிடையாது. எதிர்ப்புகளை கண்டு நான் பயப்படுகிறவள் அல்ல.

எம்ஜிஆர் அழைத்தும் அரசியலுக்கு வர மறுத்தது ஏன்?

எம்ஜிஆர் துவக்கிய அண்ணா திமுகவில் முதல் உறுப்பினர் ஜானகி அம்மா. இரண்டாவது சத்தியவாணி முத்து. மூன்றாவது உறுப்பினர் நான்.

நீயும் அரசியலுக்கு வந்து விடு என்றார். நான் மறுத்துவிட்டேன். நீங்க சினிமா துறையில் சாதிச்சுட்டீங்க.. எனக்கு இன்னும் நடிக்க ஆர்வம் இருக்கு. கட்சிக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன். ஆனால் சினிமாவை மட்டும் விட்டுவிட சொல்லாதீங்க என்றேன். அப்போது எனக்கு 19வயது இருக்கும். அரசியலை பற்றி எதுவும் தெரியாத காலக்கட்டம் அது.

கட்சிக்காக 35 லட்சம் ரூபாய் நிதி கொடுத்தீர்களாமே…?

தேர்தல் சமயம். நிதி பற்றாக்குறை. கட்சிக்காக நீ என்ன செய்ய போற என்றார்.

‘சாகுந்தலை’ நாட்டிய நாடகம் நடத்தி நிதி சேகரித்து தருகிறேன் என்றேன். கோவை, மதுரை, தேனி, பவானி, திருச்சி என சுமார் 10 இடங்களில் எம்ஜிஆர் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தி 35 லட்சம் ரூபாய் கலெக்ஷன் செய்யப்பட்டது. இதில், 5 லட்சம் ரூபாய் நிகழ்ச்சி நடத்தியவர்களுக்கு கொடுத்து விட்டு, 30 லட்சம் ரூபாய் அண்ணா திமுகவுக்கு தேர்தல் நிதியாக வழங்கினேன். சுமார் 2.30 மணி நேரம் நாட்டிய நாடகம் நடக்கும். அன்று சரியான அளவில் போக்குவரத்து வசதி கிடையாது. 30 பேர் கொண்ட நாட்டியக்குழுவையும் கொண்டு ஒவ்வொரு ஊருக்கும் செல்ல வேண்டும். ரிகர்சல் பார்க்க வேண்டும். கடினமாக இருந்தாலும் தற்போது நினைத்து பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

அரசியலில் மீண்டும் வர…

எம்ஜிஆரிடம் அரசியலுக்கு வர மறுத்ததை எண்ணி நான் இன்று வரை வருத்தப்படவில்லை. அரசியலில் இருந்து செய்வதை, அரசியலுக்கு வெளியிலும் நான் செய்து இருக்கிறேன்.

அண்ணா திமுக தலைமை அழைத்தால் எம்ஜிஆரின் அண்ணா திமுகவுக்காக உழைக்கவும், உரிமை குரல் கொடுக்கவும் தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு லதா கூறினார்.

-ஷீலா பாலச்சந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *