செய்திகள்

விவசாயிகளுடன் பேச தயார்: பார்லிமெண்ட்டில் மோடி பேச்சு

டெல்லி, பிப். 8–

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று பார்லிமெண்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

விளை பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி மாநிலங்களவையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரைக்கு உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

நாடு தற்போது வளர்ச்சி பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது திரும்பியுள்ளது. நம் நாட்டின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி உரையை கேட்காமலேயே பலரும் அது குறித்து விமர்சிக்கின்றனர். ஜனாதிபதி உரை வலிமையானது என்பதால் அதை கேட்காதவர்களிடம் கூட சென்று சேர்ந்து இருக்கிறது.

இந்தியா தற்போது வாய்ப்புகளுக்கான நாடாக மாறியுள்ளது. இளைஞர்கள் தங்கள் கனவுகளை எட்டிப்பிடிக்க தற்போதுள்ள வாய்ப்புகளை நழுவவிட அனுமதிக்க மாட்டோம். உலகமே தற்போது இந்தியா முன்னெடுத்து இருக்கக்கூடிய தீர்வுகளை கண்டறிய கவனம் செலுத்துகிறது.

கொரோனா தொற்றுக்கான தடுப்பு மருந்து இந்தியாவிற்கு கிடைக்குமா அல்லது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால் தற்போது நம் நாடு சொந்தமாக தடுப்பூசி கண்டறிந்து உலகம் முழுவதும் வழங்கி வருகிறது. இது நமது தன்னம்பிக்கையை வளர்த்துள்ளது.

எதிர்ப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது

வேளாண் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சுமார் 14 மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது. இதுதொடர்பான விவாதத்தில் 50 எம்பிக்கள் பேசியுள்ளனர்.

வேளாண் சட்டங்களை எதிர்ப்பதில் எந்தவித அர்த்தமும் கிடையாது. இந்த சட்டங்களால் விவசாயிகளின் நிலம் பறி போகாது.

நாட்டில் உள்ள விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசு விரும்புகிறது. விவசாய பிரச்சினைகள் குறித்து பேசுவோர் சிறு விவசாயிகளை மறந்து விடுகின்றனர். இதுவரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் சிறு விவசாயிகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களில் திருத்தம் தேவை என அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதை தான் நாங்கள் செய்திருக்கிறோம்.

விவசாயிகள் நலன் குறித்து தொடர்ந்து சிந்தித்து நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். குறைந்த பட்ச ஆதார விலை இருந்தது. இப்போதும் இருக்கிறது, இனிவரும் காலங்களிலும் இருக்கும்.

வேளாண் சீர் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவே சரியான தருணம். வேளாண் சட்டங்களில் குறைகள் இருந்தால் நிச்சயமாக சரி செய்யப்படும்.

ஏழைகளுக்கான குறைந்த விலை ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் தொடரும். வேளாண் கொள்முதல் நிலையங்கள் நவீனமயமாக்கப்படும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மத்திய அரசின் கதவுகள் திறந்தே உள்ளன.

இவ்வாறு மோடி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *