மிக குறைந்த விலையில், அதிவேக இன்டர்நெட் வசதிகள் கிடைக்க தொடங்கியதும் கணினி யுகத்தின் நவீன செல்போன்களில் பலதரப்பட்ட வசதிகள் பெருக ஆரம்பித்ததும் நம் வாழ்வின் முக்கிய அங்கமாக மாறியதால், புத்தக வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது.
வீடியோ படங்கள், குறுந்தகவல்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், படிப்புகள் என பல்வேறு பரிமாணங்களில், நம் வாழ்வில் நுழைந்துவிட்ட டிஜிட்டல் வாழ்வு முறைகளுக்கிடையே, புத்தக வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடியாத நிலை உருவாகிவிட்டது.
பல மாணவர்கள், இளம் தலைமுறையினர் டிஜிட்டல் புத்தகங்களை படிப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது! ஆனால் புத்தகம் என்ற ஒன்று, பண்டைக்கால, ‘ஓலைச்சுவடிகள்’ போன்று மாறி வருவதை உணர்ந்தாக வேண்டும்.
ஆனால் எழுதுவது, மனதில் தோன்றுவதை பகிர்வது என்பவை, புத்தக வடிவமாக இருந்தால் அது தரும் திருப்தியை இன்றும் சிலர் பெறலாம். அவர்களின் எண்ணத்தை உணர்ந்தே, தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகத் திருவிழா கோலாகலமாகவே நடந்து வருகிறது.
இம்முறை சென்னையில் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் பிப்.24–ந் தேதி தேதி முதல் நடைபெற இருக்கிறது. அதே தேதியில் தான் நமது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளும் வருவதால், இம்முறை புத்தக கண்காட்சிக்கு சிறப்பு சேர்க்கிறது. ஜெயலலிதா மிகப்பெரிய புத்தக ரசிகர் என்பது அனைவரும் அறிந்தது. அவர் சொல்லியதை பலர் கேட்டிருப்பதுடன் கண்கொண்டு பார்த்து ரசித்தும் உள்ளது தமிழகம்.
ஜெயலலிதாவின் புத்தக ஆர்வம்
காவிரி நதி நீருக்காக அண்ணா சதுக்கத்தில் மூன்று நாட்கள் முகாமிட்டு தொடர் உண்ணாவிரதம் இருந்தார் அல்லவா, அச்சமயத்தில் அவர் தொடர்ந்து ஆங்கில நாவலை ரசித்துப் படித்து கொண்டிருந்ததை ஊடகங்களில் படமாக வெளிவந்த போது உலகமே பார்த்து பாராட்டியது.
ஜெயலலிதாவின் ‘வேதா நிலையம்’ இல்லத்தில் அவர் படித்து ரசித்த பலதரப்பட்ட புத்தகங்கள் பெரிய நூலகமாக இன்றும் இருக்கிறது. அரசியல், வாழ்வியல், மனோதத்துவம், நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் எழுதிய புத்தகங்களை படித்து இருக்கிறார். ரசனை மிக்க கதை புத்தகங்களுக்கும் அவர் பெரிய ரசிகையாக இருந்திருக்கிறார்.
தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) சார்பில், ஆண்டுதோறும் சென்னையில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டு கொரோனா பரவல் காரணமாக 1 மாதத்திற்கும் மேலாக, 44–வது புத்தக கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பாதுகாப்பு வழி முறைகளைப் பின்பற்றி புத்தக கண்காட்சியை நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் துவக்கி வைக்கிறார்.
நுழைவு கட்டணம் ரூ.10
இப்புத்தகக் கண்காட்சியில் 700க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தினமும் காலை 11 மணி முதல் மாலை 8 மணி வரை வாசகர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இணையவழியிலும் நுழைவுச்சீட்டு பெறலாம். நுழைவு கட்டணம் ரூ.10, பள்ளி மாணவர்களுக்கு கட்டணம் இல்லை.
‘‘பிக்பாஸ்’’ நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பரிந்துரைத்த புத்தகங்கள் தனி அரங்கில் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், புத்தக கண்காட்சியின் போது, ட்விட்டர் வழியாக சிறந்த புத்தகங்களை பரிந்துரை செய்யவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இது தவிர, கல்லூரி மாணவர்களுக்கு ஓவியம், பேச்சு, வினாடி–வினா போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். வாசிப்பை வளர்க்கும் விதமாக குழந்தைகள் கதை சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும். புத்தக கண்காட்சியில், உலக அறிவியல் தினம் (பிப்ரவரி 28), மகளிர் தினம் மார்ச் 8–ந் தேதி ஆகிய சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு ‘ரேக்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிய எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் தங்கள் நூல்களை காட்சிப்படுத்தலாம். இந்த கோலாகல புத்தக திருவிழாவில் நீங்களும் குடும்பமாகவோ, நண்பர்களுடன் குழுமமாகவோ வந்து கண்காட்சியை ரசிக்க தவறி விடாதீர்கள்!