வர்த்தகம்

திறமையான நிதி நிர்வாகம், சிக்கன நடவடிக்கையால் ராம்கோ சிமெண்ட்ஸ் ரூ.201 கோடி லாபம்

சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, ஏ.வி. தர்மகிருஷ்ணன் தகவல்

சென்னை, பிப். 5–

ராம்கோ சிமெண்ட்ஸ் நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டில் திறமையான நிதி நிர்வாகம், சிக்கன நடவடிக்கையால் ரூ.201.35 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது என்று இதன் சேர்மன் பி.ஆர். வெங்கட்ராம ராஜா, ஏ.வி. தர்மகிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.

ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரை காலாண்டில் செயல்பாடுகள் மூலம் ஒருங்கிணைந்த வகையில் ரூ.202.86 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளது. முந்தைய ஆண்டு (2019) இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் வருமானம் ரூ.95.57 கோடியாக இருந்தது. கணக்கீட்டு காலாண்டில் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.94.80 கோடியிலிருந்து ரூ.201.35 கோடியாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலத்தில் நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் ரூ.454.92 கோடியிலிருந்து ரூ.546.72 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. ஒருங்கிணைந்த வருமானம் இதே காலகட்டத்தில் ரூ.455.43 கோடியிலிருந்து ரூ.548.47 கோடியாக உயர்ந்துள்ளது.

கடந்த டிசம்பருடன் முடிவடைந்த ஒன்பது மாத காலகட்டத்தில் விரிவாக்க திட்டங்களுக்கான மூலதன செலவினம் ரூ.1,166 கோடியாக இருந்தது.

டிசம்பர் காலாண்டில் சிமெண்ட் விற்பனை கடந்தாண்டுடன் ஒப்பிடும்போது 28.44 லட்சம் டன்னிலிருந்து 26.14 லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதற்கு, தென் மாநிலங்களில் காணப்பட்ட வழக்கத்துக்கு மாறான பருவநிலையே முக்கிய காரணமாகும்.

அதே சமயம், கிழக்குப் பகுதி மாநிலங்களின் சந்தைகளில் விற்பனை சிறப்பான வளர்ச்சியைக் கண்டது.

இந்நிறுவனத்தில் மின்சாரம், எரிபொருள் செலவு இந்த காலாண்டில் குறைந்தது. மூலப்பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தது, இந்த காலாண்டில் லாபம் உயர உதவியது. ஆனால் நிலக்கரி விலை உயர்ந்தது.

காற்றாலை மின்சார வர்த்தகத்தைப் பொருத்தவரையில் மூன்றாம் காலாண்டில் 3.50 கோடி யூனிட்டுகள் மின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. முந்தைய காலகட்டத்தில் இது 1.49 கோடி யூனிட்டுகளாக இருந்தது. இதன் மூலமாக கிடைத்த வருமானம் ரூ.1.80 கோடியிலிருந்து ரூ.8.50 கோடியாக அதிகரித்துள்ளது.

ராம்கோ ஜெயந்திபுரத்தில் 1.5 மில்லியன் டன் உற்பத்தி திறனுடன் சிமெண்ட் கட்டி ஆலையுடன் கழிவு வெப்பத்தை பெற்று உற்பத்திக்கு மறு உபயோகம் வசதியுடன் நிறுவி வருகிறது. கர்னூலில் 2.25 மில்லின் டன் சிமெண்ட் கட்டி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இவை அடுத்த ஆண்டு உற்பத்தி துவங்கும் என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *